Search
Close this search box.

தேர்தலைப் பிற்போட்டால் ஐ.தே.க. அழிந்துவிடும் – எச்சரித்த மஹிந்த…!

பிரதான தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முற்பட்டால் அதுவே அக்கட்சிக்கு இறுதிப் பயணமாக அமைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலும், அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இரு தேர்தல்களையும் பிற்போட முடியாது. அவ்வாறானதொரு முட்டாள்தனமான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்காது என்றே நம்புகின்றேன். அவ்வாறு இறங்கினால் அதுவே அக்கட்சியின் இறுதிப் பயணமாக அமையும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீதே மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.” – என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அருகில் ரஷ்ய போர்க்கப்பல்களை நிலைநிறுத்திய புடின்

ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தனது போர்க்கப்பல்களை அமெரிக்காவுக்கு சற்று தொலைவிலுள்ள கடல் பகுதியில் கொண்டு நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள இடைவெளி 90 மைல்கள் என்ற நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான நான்கு போர்க்கப்பல்கள், நேற்று, 12 கியூபாவின் தலைநகரான ஹவானாவின் அருகே நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, அணு ஆயுதம் சுமந்து செல்லும் நீர்மூழ்கிக்கப்பல் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ரஷ்ய கப்பல்கள் அமெரிக்காவுக்கு அருகே கொண்டு நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் போர் வெடிக்கலாம் என உலக நாடுகளுக்கு பதற்றம் ஏற்பட, அமெரிக்காவோ, அந்தக் கப்பல்களால் அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ளது. 1962ஆம் ஆண்டு, இதேபோல ரஷ்யா, கியூபாவில் ஏவுகணைத் தளங்களை உருவாக்க, இந்த தகவல் அமெரிக்காவை எட்ட, இரு நாடுகளுக்குமிடையில் உருவாக இருந்த ஒரு பெரும் அணு ஆயுதப் போர், ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக தவிர்க்கப்பட்டது. அந்த விடயம் வரலாற்றில் பெரும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில், தற்போது மீண்டும் அதே கியூபாவில் ரஷ்யா போர்க்கப்பல்களைக் கொண்டு நிறுத்தியுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, நாளை(14) முதல் இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, நாளை காலை 6:00 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். மேலும், விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான  கடைசி திகதி எதிர்வரும் ஜூலை  மாதம் 5ஆம் திகதியாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கனடாவில் திரையரங்கு மீது துப்பாக்கி சூடு…! இலங்கை தமிழருக்கு எதிராக குற்றச்சாட்டு…!

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழருக்கு சொந்தமான திரையரங்கு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது நபராகவே இலங்கை தமிழர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரான பிரம்டன் நகரை சேர்ந்த 43 வயதான நபர் மீதே குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி டொரான்டோ பெரும்பாகத்தில் உள்ள வெவ்வேறு திரையரங்குகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி மார்கம் நகரைச் சேர்ந்த 27 வயதான ஆண்ட்ரூ டக்ளஸ் என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, மே 22ஆம் திகதி இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த விபரங்களையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வாக்குகளுக்காக இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள்! தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த எச்சரிக்கை!

வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். திடீரெனத் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக மட்டும் தங்கள் கொள்கைகளை மாற்றுபவர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டுமெனவும், ஆரம்பம் முதலே 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளையும், அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் அவதானிக்க வெண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாகவும், குறித்த கட்சிகளின் இரட்டை வேடம் தற்போது வெளிப்பிட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்காவின் தோட்டத்திற்குள் நுழைந்த இளைஞன் மீது துப்பாக்கி சூடு ; வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு சொந்தமான ஹொரகொல்ல வளவ்வே தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் காணி காவலாளிகள் இருவரை  நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நிட்டம்புவ ஹொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து வட்டுபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் மேலதிக  சிகிச்சைக்காக கொழும்பு தேசிய  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேற்படி தாக்குதலானது  உரிமம் பெற்ற  துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது. என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சமுர்த்தி பயனர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

அரசியல் தலையீடுகளாலும் பல்வேறு கோரிக்கைகளாலும் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் அதன்படி சமுர்த்தி வங்கியின் தலைமையகம் மற்றும் சமூக வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய திட்டமானது “புதிய கிராமம் – புதிய நாடு” என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறுவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் நிலையான வைப்புகளில் பாரியளவில் மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. மக்கள் வங்கியின் பிரதான கிளையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான முறைப்பாட்டிற்கமைய, வங்கியின் புறக்கோட்டை கிளையின் கடன் அதிகாரியான பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சத்துபமா தர்ஷனி ரத்நாயக்க என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் வங்கியின் கணக்கு வைத்திருப்பவரின் நிலையான வைப்பு கணக்கில் 63 லட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் வங்கியின் பிரதான கிளையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தனது கணவரின் தாய் மற்றும் நெருங்கிய உறவினர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் அவர்களின் நிலையான வைப்புத்தொகையில் பணத்தை ஏமாற்றியுள்ளார். சந்தேகநபர் வர்த்தக வங்கியின் கடன் நுழைவுத் தரவு அமைப்பில் போலியான ஆவணங்களை வைத்து மோசடி செய்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3லட்சம் மதிப்பிலான இஞ்சி பறிமுதல்…!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின்  பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  சுமார் 3 லட்சம் மதிப்பிலான  60 இஞ்சி மூட்டைகளை மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்  சமையல் இஞ்சி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த  வீட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப் படகில் இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், பிடி இலை, சமையல் இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று  (12) அதிகாலை இலங்கைக்கு மண்டபம் அடுத்துள்ள மரைக்காயர் பட்டினம் கடற்கரையிலிருந்து  நாட்டுப் படகில் இஞ்சி கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று இரவு  மரைக்காயர்பட்டிணம் கடற்கரை ஓரம் உள்ள வீடுகள் மற்றும் மீன் வைக்கும் கம்பெனி உள்ளிட்ட  பகுதிகளில் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மரைக்காயர்பட்டிணம் கடற்கரை ஓரமாக உள்ள வீட்டின் உரிமையாளர் பெயர் தெரியாத நிலையில் அந்த வீட்டின் பின்புறம் இருந்து 60 சாக்கு  மூட்டைகளில் சுமார் 2 டன் எடை கொண்ட  இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இஞ்சி மூட்டைகளை மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் எடுத்து வந்த அந்த வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் முதல் கட்ட விசாரணையில் சமையல் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல் இருந்தது  தெரியவந்தது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சி, இந்திய  மதிப்பு சுமார் 3 லட்சம்  இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சமையல் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போது பிடிபட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் மீட்கப்பட்ட பெருமளவு கஞ்சா – தப்பியோடிய கடத்தல்காரர்கள்..!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (13) அதிகாலை 4:45 மணியளவிலேயே கேரள கஞ்சா   மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலிற்கு  அமைவாக  வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் சிறப்பு அதிரடி படையினர்  இணைந்து தாளையடி பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர். அவ்வேளை கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அங்கு காணப்பட்ட  135  கிலோ கிராம் எடையுள்ள 03 கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றிய வெற்றிலைக்கேணி  கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த கஞ்சாவை பொதிகளை  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.