Search
Close this search box.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் நிலையான வைப்புகளில் பாரியளவில் மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மக்கள் வங்கியின் பிரதான கிளையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான முறைப்பாட்டிற்கமைய, வங்கியின் புறக்கோட்டை கிளையின் கடன் அதிகாரியான பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சத்துபமா தர்ஷனி ரத்நாயக்க என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் வங்கியின் கணக்கு வைத்திருப்பவரின் நிலையான வைப்பு கணக்கில் 63 லட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் வங்கியின் பிரதான கிளையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தனது கணவரின் தாய் மற்றும் நெருங்கிய உறவினர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் அவர்களின் நிலையான வைப்புத்தொகையில் பணத்தை ஏமாற்றியுள்ளார்.

சந்தேகநபர் வர்த்தக வங்கியின் கடன் நுழைவுத் தரவு அமைப்பில் போலியான ஆவணங்களை வைத்து மோசடி செய்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sharing is caring

More News