Search
Close this search box.

கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள்..!

கிளிநொச்சி – தர்மபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக காற்று வீசி வரும் நிலையில் குளவிக் கூடு கலைந்துள்ளது. இதனால் மாணவர்களை குளவிகள் தாக்கியுள்ளன. குளவிக் கொட்டுக்கிலக்கான மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விக்னேஸ்வரன் எம்.பி- சஜித் பிரேமதாச யாழில் முக்கிய சந்திப்பு…!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழில் நேற்றையதினம்(12)  இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு  யாழ் நல்லூர் கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்தார். இந்நிலையிலேயே விக்னேஸ்வரனையும் சந்தித்து அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திடீரென போராட்டத்தில் குதித்த இ.போ.ச. ஊழியர்கள் – பாடசாலை மாணவர்கள், பயணிகள் பெரும் சிரமம்..

இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள், சாலைக்கு முன்பாக  இன்று(13)   போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை  வலியுறுத்தியும், ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும்  குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி  இந்த கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த  செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு, கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை  ஊழியர்களுக்கும், தனியார் பேரூந்து ஊழியர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்திருந்து. இதன்போது இரு தரப்பினர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர். இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார் பேரூந்துகளும், வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்ட இடத்தில் கல்முனை தலைமையக பொலிஸார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

எனது ஆட்சியில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் இலவச உணவு…! யாழில் சஜித் உறுதி…!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில்,  நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இலவச உணவு வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றார். அந்தவகையில் நேற்றையதினம்(12)  யா/ சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் ஆயிரத்து 200 மாணவர்கள் கல்வி கற்கின்றீர்கள். 3 மாணவர்கள் மருத்துவத்துக்கும், 2 மாணவர்கள் பொறியியல் பீடத்துக்கும், 5 மாணவர்கள் முகாமைத்துவ பீடத்துக்கும் தெரிவாகியுள்ளனர். விக்ரோரியாக் கல்லூரிக்கான பேருந்து நான் வழங்கிய 88 ஆவது பேருந்தாக உள்ளது. இலவசக் கல்வியை வளர்ச்சியடையச் செய்ய இது முக்கியமான காரணமாக உள்ளது. சிலர் எனது இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஏனென்றால் அவர்களால் இதைச் செயற்படுத்தமுடியாது. இலங்கை வரலாற்றில் எதிர்கட்சியால் நாடு அபிவிருத்தி செய்யபட்டமை எமது காலத்திலேயே ஆகும். அதேவேளை, எனது ஆட்சியில் நாட்டிலுள்ள 10ஆயிரத்து 906 பாடசாலைகளுக்கும் இலவச உணவை வழங்குவேன் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – விலையும் உயரும்..!

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பருவத்தில் கீரி சம்பா, சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் மூலம் தரமான அரிசியை பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் அனுராதா தென்ன கோன் தெரிவித்துள்ளார். அரிசி தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலை 320 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக சம்பா அரிசிக்கான தட்டுப்பாடும் தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துள்ளது. நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை பயன்படுத்தி அரிசி உற்பத்தி செய்ய இயலாது என்றும், அதற்கு சில வழிமுறைகளை கையாண்டு, திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். கடந்த காலங்களில் கீரி சம்பா, சம்பா அரிசியை உணவகங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் அதிகளவில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சாமானியர்களும் இந்த அரிசி வகைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு நாட்டில் பெரும் கிராக்கி நிலவுவதுடன், தற்போதுள்ள தேவையை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம் நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு…

நாட்டில் முதியோரின் எண்ணிக்கை  வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் பிறக்கும் போதே ஆயுட்காலம் 79 வயதுக்கு மேல் உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்  குறிப்பிட்டுள்ளார். “எமது நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.  நம் நாட்டில் பிறக்கும் போது சராசரி ஆயுட்காலம் 79.7% ஆகும். புதிய மதிப்பீட்டின்படி பெண்களுக்கு 83 வயதாக அதிகரித்துள்ளது. இதனால், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நமக்குள்ள இன்னொரு பிரச்சனையாகும். எனவே, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து மாகாண சபை வைத்தியசாலைகளையும் உட்படுத்தி இதற்காக சுமார் 70 பில்லியன் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நோய் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட வேண்டும். அதற்கேற்ப, தொற்றுநோயியல் பிரிவு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். புதிய திட்டத்தின் கீழ் அதைச் செய்து வருகிறோம்” என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, நாட்டில்  ஏற்பட்டிருந்த மருந்து தட்டுப்பாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த  ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்று அதிகாலை(13) 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, தாக்குதலை மேற்கொண்டுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டியை அடித்து உடைத்து, வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அக்குழுவினர் தீ வைத்துள்ளனர். பின்னர் வீட்டின் வெளியே நின்ற ஊடகவியலாளரின், மோட்டார் சைக்கிளுக்கும் , அவரது சகோதரனின்  முச்சக்கரவண்டி மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டு பின்னர் அவற்றுக்கும் தீ வைத்துள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன சேதமடைந்துள்ளன. “திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வீட்டினுள் வீசி விட்டு குறித்த கும்பல் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விடுதலை பெறவிருந்த கைதிக்கு ஏற்பட்ட சோகம் – சிறையில் திடீர் மரணம்..

பதுளை – தல்தென திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்குளி  பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைதி  போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தல்தென திறந்தவெளி சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதி விடுதலை பெற இருந்த நிலையிலேயே திடீர் சுகயீனமுற்றுள்ளார். இந் நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று   சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகர்- சுமந்திரன் எம்.பி கொழும்பில் திடீர் சந்திப்பு…!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(12)  கொழும்பில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலையில் அதிகாலையில் விபத்து: கொழும்பு செல்வோருக்கு வெளியான அறிவிப்பு..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின்  61 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று  அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மத்தளையில் இருந்து கொட்டவை நோக்கி பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக கொழும்பு  நோக்கிச் செல்லும் ஒரு மருங்கு தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. இதனால் கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் மற்றைய மருங்கை பயன்படுத்த முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.