Search
Close this search box.

குடிவரவுத் திணைக்களம் மக்களிடம் மீண்டும் விடுத்துள்ள கோரிக்கை

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டையை கொண்டு வருமாறு குடிவரவுத் திணைக்களம் மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது வரையிலும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் தரவுகள் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் டிஜிட்டல் அடையாள அட்டைகள் வெளியிடப்படவில்லை. இதனால் கடவுச்சீட்டு பெற வேண்டும் என்றால் புதிய மற்றும் தெளிவான அடையாள அட்டையுடன் வந்து சேவையை பெற்றுக் கொள்ளுங்கள். கடந்த சில நாட்களாக தெளிவற்ற அடையாள அட்டையுடன் வந்து பலர் சேவையை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பி செல்கின்றார்கள். இதனால் புதிய அடையாள அட்டையை விண்ணப்பித்து பெற்றுக் கொண்டு கடவுச்சீட்டு பெற வாருங்கள். அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் கடவுச்சீட்டை வழங்குவதே தமது திணைக்களத்தின் எதிர்பார்ப்பாகும் என அவர் மேலம் தெரிவித்துள்ளது.

வெளியாகிய அதி விசேட வர்த்தமானி: சஜித் தரப்பு குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளின் சேவை காலத்தை மேலும் 8 வருடங்கள் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல(Lakshman Kiriella) குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (10) கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை கூறியுள்ளார். ”இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற்று வரும் காலப்பகுதியில் திடீரென இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் ஊடாக, கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் செயலாளர் 8 வருடங்கள் பதவி வகித்து அந்த பதவிகளை விட்டு வெளியேறியதன் பின்னர், மேலும் 16 வருடங்கள் நிறைவேற்று உறுப்பினர்களாக பணியாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதை

சிலாபம், ஜேம்ஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர அகழ்வாராய்ச்சியின் போது பழைய சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் குழுவொன்று பராமரிப்பு நோக்கத்திற்காக இவ்வாறான அவசர அகழ்வை மேற்கொண்டுள்ளனர். சுரங்கப்பாதைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் செங்கல் சுவரின் ஒரு பகுதியும் தோண்டப்பட்ட இடத்தில் மிகத் தெளிவாகக் காணப்பட்டது. தற்போதைய சிலாபம் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ள கட்டிடம் டச்சு காலத்தில் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சிறைச்சாலையில் இருந்து சிலாபம் துறைமுகம் வரை ரகசிய சுரங்கப்பாதை இருந்ததாக தொல்லியல் பதிவுகள் இருப்பதாக தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் டேவிட் கயான் இந்திக்க தெரிவித்தள்ளார். இந்த சுரங்கப்பாதையின் பாகங்கள் இதற்கு முன்னரும் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால் இது தொடர்பாக முறையான அகழ்வாராய்ச்சி எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரம்: ரணிலிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena), கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் கோரிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை கையளித்துள்ளார். அத்துடன், குறித்த கடித்தத்திற்கு அதிபரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். வரியில்லா வாகன உரிமம் கோரி இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 116 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். எவ்வாறாயினும், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதை ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியாக எதிர்ப்பதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அமைச்சர்களுக்கான வரியில்லா உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் நாடாளுமன்ற சபை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கண் நோயாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கண் நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்படும் ‘பிரெட்னிசோலோன்’ கண் திரவத்தின் 21510 குப்பிகள் தரம் குறைந்ததாக காணப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிடுகின்றார். இந்தக் கண் திரவத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தேசிய கண் வைத்தியசாலையின் இரு நோயாளிகள் முழுமையாக பார்வையற்றவர்களாகவும், நுவரெலியா பொது வைத்தியசாலையின் சுமார் பதினைந்து நோயாளிகள் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இந்த பாரதூரமான எதிர்விளைவுகள் ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும், அங்கவீனமுற்ற நோயாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். எனவே தற்போதைய சுகாதார அமைச்சரும், செயலாளரும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் (srilanka) அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான அழகுசாதன பொருட்கள் கிறீம் வகைகள் போன்ற எவ்வித தர நிர்ணயங்களுக்கும் உட்படுத்தப்படாது சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். நாட்டில் பயன்பாட்டில் காணப்படும் அழகுசாதன கிறீம் வகைகளின் இரசாயன கலவை குறித்து பரிசோதனை செய்வதற்கு போதியளவு ஆய்வு கூடங்கள் இல்லாமை பாரிய பிரச்சினை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது நாட்டில் பாரிய சுகாதார பிரச்சினைகளை உருவாக்கும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிடம் போதியளவு ஆய்வுகூட வசதிகள் கிடையாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும், இந்த கிறீம் வகைகளை பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடிய உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வுகூடங்களை பயன்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு: இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை. முன்னதாக, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) கருத்துரைத்திருந்தார். எனினும், இந்த கருத்து சொந்த கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சி தரப்பிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், சட்டமா அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமையின் மத்தியில், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமே நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), சட்டமா அதிபரின் கருத்தை கேட்பாரா என்ற கேள்வியும் அரசியல் தரப்பில் எழுப்பப்பட்டு வருகிறது. அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் ஆறு வருட கால எல்லையானது சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரம் இல்லாமல் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது என்ற வாதம் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்படுகிறது. எனவே, ஆறு ஆண்டுகளுக்கு மேல் பதவிக் காலத்தை நீடிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால், தற்போதுள்ள ஐந்தாண்டு வரம்பை வாக்கெடுப்பு நடத்தாமல் மேலும் ஓராண்டுக்கு நீடிக்க முடியும் என்றும் வாதிடப்படுகிறது. இந்தநிலையில், அனைத்து சாத்தியமான மற்றும் அசாத்தியமான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கோழி இறைச்சி குறித்து கடும் எச்சரிக்கை

கோழி இறைச்சி நுகர்வு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை, குறிப்பாக வெள்ள நிலைமைகளினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொதுப் பணியாளர் ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கோழி இறைச்சி கொள்வனவு செய்யும் போது மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அண்மைய வெள்ள நிலைமைகளினால் மாசடைதல்களுக்கு உள்ளாகும் பண்ணை விலங்குகள் மூலமான நோய்த் தொற்றுக்கள் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல கோழிப் பண்ணைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் அவற்றின் பல கோழிகள் கொல்லப்பட்டதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வெள்ள நீரின் ஊடாக பல்வேறு நோய்க் கிருமிகள் பரவியிருக்கலாம் எனவும், எலிக் காய்ச்சல் வைரஸ் போன்றன பரவியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். பக்றீரியா தொற்று காரணமாக பண்ணைகளில் கோழிகள் உயிரிழப்பதாகவும் வெள்ளம் காரணமாக இவ்வாறான பக்றீரியாக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு பரவியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். வெள்ளத்தில் கொல்லப்பட்ட கோழிகள் சில கடைகளில் இறைச்சியாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அவ்வாறான சில கடைகளில் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுவாக கோழி இறைச்சியின் தோல் பகுதி வெள்ளை நிறமாகவன்றி சிகப்பாக காணப்பட்டால் அவை வெள்ளத்தில் கொல்லப்பட்ட கோழிகளாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு வெள்ளத்தில் உயிரிழந்த விலங்குகள் மீட்போல்ஸ் மற்றும் சொசேஜஸ் செய்வதற்கு அனுப்பி வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர் சங்கம்: பாடசாலை விடுமுறை தொடர்பில் குழப்பநிலை

இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்நாளுக்கான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன்  நடைபெற்ற பேச்சு தோல்வி அடைந்துள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி தமது உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை – மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.