Search
Close this search box.

இயற்கை-எரிவாயு-விலை-அதிகரிப்பு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.73 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.564 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

தலைபிறை-தென்பட்டது-17ஆம்-திகதி-பெருநாள்

துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. இதன்படி இம்மாதம் 17ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட முடியுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

சர்வதேச-சமுத்திர-தினம்-இன்றாகும்

இன்று(08) சர்வதேச சமுத்திர தினமாகும். ”மாற்றமடையும் புவியின் சமுத்திரங்கள்” என்பதே இவ்வருட சர்வதேச சமுத்திர தின தொனிப்பொருளாகும். மனித செயற்பாடுகளாலும் கவனயீனத்தினாலும் இன்று சமுத்திரங்கள் அழிந்து வருகின்றன. மனித குலத்தின் வாழ்வாதாரத்தையும் பூமியிலுள்ள ஏனைய அனைத்து உயிரினங்களையும் சமுத்திரங்கள் ஆதரிக்கின்றன. பூமிக்கு தேவைப்படும் 50 வீத ஒட்சிசனை சமுத்திரங்களே உற்பத்தி செய்கின்றன. சமுத்திரங்கள், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான புரத உணவுக்கான முக்கிய ஆதாரமாகவுள்ளது. இத்துணை வளங்களை எமக்கு அள்ளி வழங்கும் சமுத்திரம் இன்று, ஆபத்தான நிலையில் இருக்கின்றது என்றால் அது பிழையில்லை. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் சமுத்திரங்களுக்கு விடுவிப்பதால், இன்று சமுத்திரத்தில் வாழும் உயிரினங்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 8.8 மில்லியன் தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சமுத்திரங்களில் விடுவிக்கப்படுகின்றன. SEA OF SRI LANKA எனும் கடற்பிராந்தியத்தில் வருடாந்தம் 0.24 – 0.64 மில்லியன் தொன் பிளாஸ்ட்டிக் பொருட்கள் விடுவிக்கப்படுகின்றன. எமது சமுத்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.

ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஈழத்தமிழர்களின் தற்போதைய நிலை

ஒரு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய அரசாங்கத்தால், தொலைதூர பிரதேசமான டியாகோ கார்சியாவில் இருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள், தாம், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். ருவாண்டா என்ற இந்த ஆபிரிக்க நாட்டை அவர்கள் திறந்த சிறை என்று விபரிப்பதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய உடன்படிக்கை தொடர்பில் இங்கிலாந்தின் அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ளன. கையொப்பமிடப்படாத இராஜதந்திர குறிப்புகளைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் கீழ் இந்தத் தகவல்களை வெளியிடுவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், பிபிசி ருவாண்டாவுக்கு சென்று அங்குள்ள புலம்பெயர்ந்த நான்கு தமிழர்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் இருந்து அனுப்பப்பட்ட தமக்கு சிக்கலான மருத்துவத் தேவைகள் ருவாண்டாவில் பூர்த்தி செய்யப்படவில்லை என்று குறித்த நால்வரும் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு வாரத்திற்கு 50 டொலர்கள் வழங்கப்படுகின்றன. எனினும், அவர்கள் ருவாண்டாவில் தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தாம் நான்கு பேரும் தெருவில் துன்புறுத்தல் மற்றும் தேவையற்ற பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர். தம்மை பொறுத்தவரையில் தாம் “சுய சிறையிலடைக்கப்பட்டவர்கள்” என்று குறித்த நால்வரும் கூறியுள்ளனர். வெளியே செல்ல மிகவும் பயமாக உள்ளது. இந்தநிலையில் தமக்கு நிரந்தரமாக இங்கிலாந்தில் வாழ்வதற்கு இடம் கிடைக்கும் என்று காத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் தவறகன முடிவு முயற்சிகளுக்குப் பின்னரே இந்த நான்கு இலங்கைத் தமிழர்களும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் இப்போது இராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியேறி, தலைநகர் கிகாலியின் புறநகரில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில், பிரித்தானிய அதிகாரிகளால் பணம் செலுத்தப்படும் குடிமனையில் வாழ்கின்றனர். இலங்கையில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளானதன் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு செல்ல முயற்சித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களில் மூன்று பேரில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உள்ளடங்குகிறார் நான்காமவர் குறித்த பெண்ணின் தந்தையாவார். தமது மகளுடன் ருவாண்டாவில் தங்கியிருக்க அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கும் ருவாண்டாவுக்கும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இந்த இலங்கை தமிழர்கள் ருவாண்டாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையிலும் டியாகோ கார்சியாவிலும் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த தமிழ் பெண் கூறியுள்ளார். ருவாண்டாவில் தமக்கு தொந்தரவுகள் இருக்கின்றபோதும், பொலிஸாரின் உதவிக்கு அணுகவில்லை என்று குறிப்பிட்ட அவர்கள், துஸ்பிரயோகத்தின் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சீருடை அணிந்த சட்ட நடைமுறைப்படுத்தலை நம்பவில்லை என்று கூறியுள்ளனர் எனினும், டியாகோ கார்சியா முகாமில் இருந்ததை விட ருவாண்டாவில் தங்களின் வாழ்க்கை நிலைமை சிறப்பாக இருப்பதாக கார்திக் மற்றும் லக்சானி என்ற பெயர்களை கொண்ட இந்த இலங்கை தமிழர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் தவறான முடிவு முயற்சியைத் தொடர்ந்து டியாகோ கார்சியாவிலிருந்து விமானம் மூலம் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது தமிழர், இன்னும் இராணுவ மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தாம் இலங்கைக்கோ இங்கிலாந்துக்கோ செல்லமுடியாது என்றநிலையில், ருவாண்டாவில் இருக்க விரும்பவில்லை என்றால்,பாதுகாப்பான மூன்றாவது நாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரை டியாகோ கார்சியா முகாமுக்குத் திரும்பலாம் என்று அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இலங்கையர் குழுவினரை நிரந்தரமாக மீள்குடியேற்ற ருவாண்டா “பாதுகாப்பான மூன்றாவது நாடாக” கருதப்படுகிறதா என்ற பிபிசி கேள்விகளுக்கு இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம் பதிலளிக்கவில்லை. இது இவ்வாறிருக்க மேலும் சுமார் 60 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்னும் டியாகோ கார்சியா தீவில் தங்கியுள்ளனர். இந்நிலையில், நாங்கள் டியாகோ கார்சியாவிற்கு வந்தபோது தங்கள்  உயிரைக் காப்பாற்றியதற்காக பிரித்தானியாவுக்கு நன்றி சொல்ல வேண்டுமா அல்லது எங்கள் வாழ்க்கையை முடக்கியதற்காக அவர்களுடன் கோபப்பட வேண்டுமா என்று ருவாண்டாவில் வசிக்கும் மயூர் என்பவர் அவரின் ஆதங்கத்தை பிபிசியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ள ராஜபக்சாக்கள் தயார்- மகிந்த தெரிவிப்பு

பொதுத் தேர்தலாக இருந்தாலும், அதிபர் தேர்தலாக இருந்தாலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். குறித்த தகவலை சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு தேர்தலுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாரெனவும் அது தொடர்பில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிரான அவரது அறிக்கை குறித்து அவரிடம் வினாவிய போது, அவர் மட்டுமல்ல கட்சியின் 99 சதவீதம் பேரும் அந்த நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக மகிந்த தெரிவித்துள்ளார். இதனுடன், இந்த அரசாங்கத்தின் செயல்திட்டங்களுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒப்புதல் அளிக்காதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு மகிந்த பதிலளிக்கையில், “இந்த அரசாங்கத்தின் செயல் திட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை அதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. எங்களுக்கு சுதந்திரம் உள்ளதுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளது எனவே எந்த நேரத்திலும் எங்கள் கருத்தை தெரிவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்…! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு…!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் தமிழினத்துக்குத் துரோகம் செய்தவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று(07) ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப் பல தடவைகள் முன்வந்தபோது சம்பந்தனும், சுமந்திரனுமே அதனைக் குழப்பியடித்தார்கள். அவர்கள் இருவரும் ராஜபக்சக்களுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுபவர்கள். வெளிநாடுகளிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு தமிழினத்துக்குத் துரோகம் செய்த அவர்கள் இருவருக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். அவர்களின் கட்சியும் அந்தத் தேர்தலில் படுதோல்வியடைய வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியே வெற்றியடையும். எனவே, தமிழ் மக்கள் எமது கட்சியின் பின்னால் அணிதிரள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நாம் தீர்வு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் கடந்த மே மாதம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2023 ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (ஜனவரி – மே) ஒப்பிடும் போது இது 11.8 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இலங்கையின் பொருளாதார கொள்கை சீர்திருத்தங்கள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கியூபா வரும் ரஷ்ய போர் கப்பல்கள்: உஷார் நிலையில் அமெரிக்கா

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட நான்கு ரஷ்ய கப்பல்கள் அடுத்த வாரம் கியூபா தலைநகர் ஹவானாவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் 12 முதல் 17 வரை குறித்த கப்பல்கள் தலைநகரில் நங்கூரமிடும் என்று கியூபா வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கசான் மற்றும் மூன்று கடற்படைக் கப்பல்கள் அமெரிக்காவிற்கு மிக அருகில் உள்ள கியூபாவை வந்தடையவுள்ளன. கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தூரம் 145 கிலோ மீற்றர் ஆகும். இதனால் ரஷ்ய கப்பல்கள் குறித்து அமெரிக்கா உஷார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடனான ரஷ்யாவின் உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதங்களை ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார்.

திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவர்கள்: தமிழ் பாடசாலையில் சம்பவம்

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த இரண்டு மாணவர்கள்  பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் இருவரும் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் ஆறு வயது மாணவனும், ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு வரும் போது போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் இருபத்தொரு வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதியத்தலாவ, கெஹெல் உல்ல பிரதேசத்தில் வசிக்கும் இளைஞராவார். குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது இந்த சந்தேகநபர்,போதை மாத்திரைகளை கொடுத்த பின்னர், அவர்கள் பாடசாலைக்கு வந்து அவற்றை சாப்பிட்டதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளாார். இச்சம்பவம் குறித்து  பாடசாலை அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்கள் காரணமாக, வாகனங்களில் பயணிக்கும் போது கொண்டு செல்லப்படவேண்டிய முக்கிய ஆவணங்கள் தொடர்பில் காவல்துறை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மின்சாரம் மற்றும ஹைப்ரிட் வாகனங்களுக்கு 3 ஆவணங்களும் கனரக வாகனங்களுக்கு 5 ஆவணங்களும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சாதாரண வாகனகளுக்கு .. ஓட்டுநர் உரிமம் (Driving License) வருமானச் சான்றிதழ் மற்றும் அதன் நகல்(புகைப்பட நகல் கண்ணாடியில் ஒட்டப்பட வேண்டும்) (Vehicle Revenue License Service) வாகன காப்பீடு (vehicle insurance) உமிழ்வு சான்றிதழ் என்பன அவசியம். (Emission Certificate) கனரக வாகனங்களுக்கு ஐந்தாவதாக வாகனத் தகுதிச் சான்றிதழ் அவசியமாகும், எனினும், மின்சார அல்லது ஹைப்ரிட் வாகனங்களுக்கு உமிழ்வு சான்றிதழ் அவசியம் இல்லை. அத்துடன், வாகனத்தில் பயணிக்கும் போது வாகனப் பதிவுச் சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என காவல்துறை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில் வாகனம் ஒன்றை எடுத்துச் செல்வது தொடர்பான சம்பவத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் வாகனப் பதிவுச் சான்றிதழ் அவசியம் என தவறாக கூறியமை சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.