தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் தமிழினத்துக்குத் துரோகம் செய்தவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(07) ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப் பல தடவைகள் முன்வந்தபோது சம்பந்தனும், சுமந்திரனுமே அதனைக் குழப்பியடித்தார்கள். அவர்கள் இருவரும் ராஜபக்சக்களுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுபவர்கள்.
வெளிநாடுகளிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு தமிழினத்துக்குத் துரோகம் செய்த அவர்கள் இருவருக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
அவர்களின் கட்சியும் அந்தத் தேர்தலில் படுதோல்வியடைய வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியே வெற்றியடையும். எனவே, தமிழ் மக்கள் எமது கட்சியின் பின்னால் அணிதிரள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நாம் தீர்வு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.