ரணிலின் ஆட்சி மாற்றப்பட்டால்…சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த எச்சரிக்கை
தற்போதைய அதிபர் முறை மாற்றப்பட்டால் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் மேலும், தற்பொழுது இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால் நல்லது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், ஜனதா விமுக்தி பெரமுனா திட்டங்களை மாற்றும் போது பொருளாதார நிலை மாறும், கடன்கள் எங்கே போகும் என்று தெரியவில்லை. அதிபர் தேர்தலுக்கு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது போன்று அல்ல, பொது வேட்பாளரை தெரிவு செய்து அவருக்கு வாக்களிக்கின்றோம். அதைச் செய்கிறார்கள், தேர்தல் முடிந்துவிட்டால் எங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், எங்கள் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும்,பொதுவான எதிர்பார்ப்பை நியமிக்கப் போகிறோம். வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரவே செய்கின்றோம், தெற்கில் இருந்து யாரோ ஜெயிக்கப் போகிறார்கள், பொது வேட்பாளராக கேள்வி கேட்க ஒருவரைக் கண்டுபிடிப்போம் என தெரிவித்தார்.
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பெருந்தொகை கடன்
2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகை பதினைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வங்கி மேற்கொண்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில் மூன்று முறை சித்தியடைந்த மாணவர்களுக்கு மாத்திரமே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தக் கடன் வட்டியில்லாது மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருட சலுகைக் காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
யாழில் வெளிநாட்டு பிரஜைக்கு சொந்தமான வீடு முற்றுகை…! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!
யாழ்ப்பாணம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் நேற்றையதினம்(07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே குறித்த ஆயுதங்களை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர். சுன்னாகம் ஈவினைப் பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான வீட்டிலே வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த நபர் பல்வேறுபட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், குறித்த விடயத்தில் வெளிநாட்டு பிரஜைக்கும் தொடர்புள்ளதா அல்லது வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் கோர விபத்து – தந்தையும் மகளும் பரிதாபமாக பலி
கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடருந்து கடவையில் மோட்டார் வண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரில் பயணித்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் தொடருந்து தாமதமாகலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார திருகோணமலையில் சந்திப்பு
சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டல் அமைப்பின் உறுப்பினர் ராம் நிக்கலஸின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களுடனான சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை திருகோணமலையிலுள்ள ரிங்கோ ரெஸ்ட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட அரச உத்தியோகத்தர்களும், சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன் போது வேலைவாய்ப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெரிவித்ததோடு மக்களுடைய குறைகளையும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்கின்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும், புணர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் திருகோணமலை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பலத்த காற்று வீசக்கூடும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று (08 ஆம் திகதி) முதல் அடுத்த சில நாட்களில் ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.