Search
Close this search box.

ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் சரிந்து விழுந்த பாரிய மண் திட்டு…!

ஹட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடம் பகுதியில் உள்ள ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் நேற்றையதினம்(03) இரவு பாரிய மண் திட்டு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று(04) காலை நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மீண்டும் அப் பகுதியில் உள்ள மண் திட்டு சரிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் பயன்பாடுகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் பகுதி என்பதால் நிரந்தர கொங்ரீட் மதில் சுவர் எழுப்பி வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் இதற்கான தீர்வை ஹட்டன் நகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவுள்ள தமிழ் பொதுவேட்பாளர்…!ஆனந்தசங்கரி எதிர்ப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு  தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொதுவேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில்,  தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களிற்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேடிவந்த வாய்ப்புக்களை நாங்கள் தவறவிட்டுள்ளோம். இலங்கை வரலாற்றில் சிங்கள தலைவர் ஒருவர் சமஸ்டியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டபோது, வாக்களிக்க வேண்டாம் என தூண்டிய இப்பொழுது உள்ளகட்சிகள்தான் அப்பொழுதும் இருந்துள்ளன. மக்களிற்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறிவிட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் தகுதியோடு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. 22 பேரும் எவ்வாறு பாராளுமன்றம் வந்தார்கள், சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளருக்கு என்ன நடந்தது என்பதை அறிவோம். 48 வீதம் சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்டவர் பெற்றிருந்தார். அது இலங்கை வரலாற்றில் நடக்காத விடயம். குற்றவாளிகள்தான் தக்களுடைய ஊத்தைகளையும், குற்றங்களையும் மறைப்பதற்கு புதிதாக கண்டுபிடித்தது போல தனி வேட்பாளரை பிரேரிக்கின்றார்கள். அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் அதற்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம். அவ்வாறு மக்கள் மத்தியில் தகுதியானவர்கள் எல்லோரும் ஒதுங்கி இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் வேட்பாளர் ஒருவரை போட வேண்டும் என்ற கருத்துக்கு நான் மாறாக உள்ளேன். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பேசும்போது என்னைப் போன்றோரின் ஆலோசனைகளை பெறுவதில்லை. இவ்வாறான முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசும்போது அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை பெற வே்ணடும். அவ்வாறு பெறுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனது அரசியல் சுத்தமாகவே உள்ளது. 2005ம் ஆண்டு முதல் தடவையாக சமஸ்டியை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டார். அந்த நேரத்தில் அவருக்கு மாறாக செயற்பட்டு அல்லது மக்களை தூண்டிவிட்டு அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னீர்கள். வி.பு,லி / களை மறைமுகமாக தோற்கடிக்கும் நோக்கத்தோடு, யார் விடுதலைப்புலிகளை அழிப்பேன் என்று யாழ்ப்பாணத்தில் ஆரூடமிட்டாரோ அவரை ஆதரித்தீர்கள். கடந்த கால வரலாற்றை பார்க்கின்ற போது நீங்கள் பதவிக்காகவும், பலவித நன்மைகளிற்காகவும்  உங்களிற்காக உழைத்தீர்களேயன்றி, மக்களிற்காக உழைக்கவில்லை. மக்களிற்கு 2005ம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை தடுத்த நீங்கள் யாரும் அரசியலில் இருக்க தகுதியற்றவர்கள். அந்த தேர்தலில் சிங்கள மக்கள் 48 வீதம் வாக்களித்திருந்தார்கள். எமது மக்களை 2 வீதமாவது வாக்களிக்க விட்டிருந்தால் இன்று சமஸ்டி ஆட்சி இருந்திருக்கும். இவர்களில் யாரேனும் ஒருவர் தனது தகுதியை வைத்து தனது வரலாற்றை வெளியிடட்டும் பார்ப்போம். என்னைப்பொறுத்தவரையில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். 3 லட்சம் மக்களை காப்பாற்றுங்கள் என்று நான் கூறியபோது நீங்கள் வெளிநாடுகளில் இருந்தீர்கள். நான் மீண்டும் மீண்டும் அந்த மக்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டேன். ஒருவரும் வாய் திறக்கவில்லை.  இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வரச்சொன்ன போது நீங்கள் போகவில்லை. அவ்வாறு கடந்த நாட்களில் மக்களை கொண்டு சென்று நடுக்கடலில் தள்ளிவிட்டு, இன்று கரம் நீண்டுகின்றீர்கள். உங்களால் அரசியல் செய்ய முடியாது ஒதுங்கினால் நன்றாக இருக்கும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் – புதிய விலை விபரம் இதோ..!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.. அதன்படி இன்று (04) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் திருத்தப்பட்ட விலைகளை தற்போது லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்  150 ரூபாவினால் குறைக்கப்படுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,790 ரூபா எனவும், 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,525 ரூபாய் எனவும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 712 ரூபா என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

போதையில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரி நடை பயணம்…! வவுனியா இளைஞனின் நெகிழ்ச்சியான செயல்…!

‘போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம்’ என்ற தொனிப் பொருளில் வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ள வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் நேற்றையதினம் (03) மாலை முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த குறித்த ரோஷன் என்கின்ற இந்த இளைஞர் தற்போது தனது உடல்நல குறைவிலிருந்து சற்று தேறிய நிலையில் இந்த நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார். அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து இந்த எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரியே குறித்த நடை பயணத்தை அவர் ஆரம்பித்துள்ளார். வவுனியா நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பித்த நடைபயணமானது நேற்று (03) மாலை முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளது இந்நிலையில் இன்றையதினம்(04) குறித்த நடைபயணமானது ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வழியாக ஓமந்தையை சென்றடைந்து நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆபத்தாக பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம் – இலங்கை வந்த வெளிநாட்டவர் பரிதாப மரணம்…

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் புகையிரத சுரங்கப்பாதையில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளபர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக நானுஓயா ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எல்ல பிரதேசத்தை நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ரயிலின் கதவில் ஆபத்தான முறையில் பயணித்தமையால் சுரங்கப்பாதையில் மோதி இவர் உயிரிழந்ததாக  தெரியவருகின்றது. நானுஓயா மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரத சுரங்கப்பாதையில் மோதி இவர் உயிரிழந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து உயிரிழந்தவரது சடலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரின் உதவியுடன் ஹப்புத்தளை ரயில்  நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இரு விழிகளையும் இழந்த நிலையிலும் உயர்தர பரீட்சையில் சாதித்த மட்டு. மாணவன்…!

ஏனைய மாணவர்களுக்கு என்ன பாடத்திட்டங்கள் உள்ளதோ அதனையே நாங்கள் கற்கின்றோம்.சில ஆசிரியர்களும் மாணவர்களும் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு விசேட கல்வி என நினைக்கின்றார்கள்.அவ்வாறான கருத்துகள் மாற்றம்பெறவேண்டும் என உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷோபன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு விழிகளையும் இழந்த மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவனான பாலச்சந்திரன் ரிஷோபன் என்னும் மாணவன் உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றி இரண்டு A சித்திகளையும் ஒரு B சித்தியையும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(03)  மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த மாணவன் கல்விப்பணிமனையினால் கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. சில ஆசிரியர்கள்,மாணவர்கள் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடையவர்களுக்கு விசேட கல்வி இருக்கின்றது. அதன்மூலம் அவர்கள் இலகுவாக சித்தியடைகின்றார்கள் என்று.  அவ்வாறு இல்லை நாங்களும் ஏனைய மாணவர்கள் பயிலும் அதே பாடத்திட்டத்தினையே பயில்கின்றோம்.எங்களை இயலாதவர்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.இவ்வாறான நிலை மாறவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். குறித்த மாணவன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவினை சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவரின் மகனாவார். இரு விழிகளையும் இழந்த நிலையில் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையிலும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து இந்த சாதனையினை படைத்துள்ளார். இதேநேரம் குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்தின் கல்வியை பூர்த்திசெய்வதற்கான உதவிகளை வழங்குமாறு குறித்த மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனடா வாசியை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி – யாழில் சிக்கிய போலி வைத்தியர்!

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களை தயாரித்து மருத்துவர்  என தன்னை அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடியே 42 இலட்சம் ரூபா இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவர் என்றும், 29 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழுவால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடம் இருந்து அதிசொகுசு கார் ஒன்றும், 15 பவுண் நகைகளும், 5 இலட்சம் ரூபா பணமும், 5 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் தான் ஒரு மருத்துவர் என்பதற்குரிய போலி ஆவணங்களையும், அடையாள அட்டையையும் உருவாக்கி மோசடிகளை மேற்கொண்டுள்ளார். கனடாவில் உள்ள ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட இவர், மருத்துவ மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்துள்ளது என்றும், அதனால் வெளிநாடு செல்லவுள்ளேன் என்றும் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் காணி ஒன்று தனக்கு உள்ளது என தெரிவித்து, அதற்குரிய ஆவணங்களையும் அனுப்பியதுடன், அதை ஒரு கோடியே 42 இலட்சத்துக்கு விலைபேசியியுள்ளார். அதை நம்பி கனடாவில் இருந்து உண்டியல் பண பரிமாற்றம்  மூலமும், வங்கிக் கணக்கு ஊடாகவும் ஒரு கோடியே 42 இலட்சம் ரூபா கைமாற்றப்பட்டுள்ளது. பின்னர் இவர் அனுப்பிய காணி ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்துகொண்ட கனடா தரப்பு இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனைதொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை மேற்கொள்கின்றேன் என தெரிவித்து வெளிநாடுகளில் உள்ள பலரிடம் பணம் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சந்தேகநபரால் மேலும் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மேலதிக  விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா – தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பாராளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவின் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் கடந்த முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2ஆம் திகதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ஆம் திகதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம் பற்றி உடனடியாக அறிவிக்கப்படும். இதுவரையான வாக்கு எண்ணிக்கையில் NDA கூட்டணி 239 இடங்களிலும், I.N.D.I.A கூட்டணி 97 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

பதுளை, நுகே சந்தி பகுதியில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (03) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஹம்பாவெல, ஹிந்தகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. காட்டு விலங்குகளிடமிருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார இணைப்பில் சிக்கியதாலேயே இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேர்!

வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (03) மாலை இந்தச் சம்பவம் எங்குருவாதொட, உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பிரதேசவாசிகளும் எங்குருவாதொட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.