Search
Close this search box.

மாமாவை வெட்டிக் கொலை செய்த மருமகன்!

மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாகவும், சந்தேக நபரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மஹிந்தானந்தவுடன் வாய்த்தர்க்கம் – பாராளுமன்ற உறுப்பினர் படுகாயம்!

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (03) பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவிற்கும் மஹிந்தானந்த அளுத்கமவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது. பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சம்பவத்தை சமரசம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், கூட்டம் முடிந்து வௌியேறும் போது மஹிந்தானந்த அளுத்கம மற்றும் குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் மாடிப்படியில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் மாடிப்படியில் இருந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குணதிலக்க ராஜபக்ஷவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் அததெரண பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவை தொடர்பு கொண்டு வினவியது. இதற்கு, பதிலளித்த அவர், குணதிலக ராஜபக்சவுடன் வாக்குவாதம் செய்ததாகவும், எனினும், அவரை தள்ள முயற்சிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, அவ்விடத்திற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை அழைத்துச் செல்ல முற்பட்ட போது அவர் தவறி விழுந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

78 என்ற இலக்கை போராடி வென்ற தென்னாபிரிக்கா!

2024 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 19 ஓட்டங்களையும் மற்றும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் என்ரிச் நோர்ட்ஜே அதிகப்படியாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன்படி, 78 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. தென்னாபிரிக்கா அணி சார்பில் டி கொக் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்!

சீரற்ற வானிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி,  காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி, பாதுக்கை, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, மஹரகம, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, பொரலஸ்கமுவ, பெபிலியான, கலகெதர ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் ஏனைய தரப்பினரின் உதவியுடன் உடைந்த பிரதான நீர் குழாயை மீளமைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நேரத்தில் தேவையில்லாமல் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டாம் என்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் சபை மக்களை கேட்டுக்கொள்கிறது.

சீரற்ற வானிலை – 16 பேர் பலி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவிக்கிறது.

களனி, கம்பஹா, கடுவெல பாடசாலைகளுக்கு விடுமுறை!

களனி மற்றும் கம்பஹா கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடுவெல கல்வி கோட்டப்பிரிவு  பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக மாகாண கல்விப் பணிப்பாளரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நாட்டின் வானிலையில் மாற்றம்!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்று தொடக்கம் (04 ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.