Search
Close this search box.

கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து விற்பனை; யாழில் சிக்கிய இருவர்

யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்த 190,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த மர்ம நபரொருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் கண்காணிப்பு கமராவின் காணொளியை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர் சாவல்கட்டு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்படி, விசாரணையில் குறித்த சந்தேக நபர் 30,000 ரூபா பணத்திற்கு ஆறுகால் மடத்தைச் சேர்ந்தவருக்கு கையடக்கத் தொலைபேசியை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கையடக்கத் தொலைபேசியை வாங்கியவரும் கைது செய்யப்பட்டு கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டது. மேலும், கையடக்கத் தொலைபேசியை திருடியதாக கருதப்படும் சந்தேகநபர் சைக்கிள் திருட்டுகளில் ஆறுமாத காலம் தண்டனை பெற்று விடுதலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர்! இன்று அதிகாலை சம்பவம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று (3) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினரின் கார் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது பயணித்த எவருக்கோ காயம் ஏற்படவில்லை என தெரியவருகின்றது. அத்தோடு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நடத்தப்பட்ட வன்முறை: மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அட்டூழியம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி கைத்தொழில் பேட்டை பகுதியில் உள்ள பண்ணையொன்றில் பெருமளவானவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருபது வரையான மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக வந்தவர்கள் பண்ணையில் உள்ள வீட்டில் பெருமளவு சேதங்களை ஏற்படுத்தி தீவைத்து சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் சம்பவ இடமான பண்ணைக்கு வந்த சிலர் அங்கு நின்ற ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். முன் பகையே தாக்குதலுக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் சேவைகளில் சிக்கல் – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பல்லேவெல மற்றும் கனேகொட ரயில் நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா ரயில் நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில்வே துணைப் பொது முகாமையாளர் ஜெ.என்.இந்திபொலகே இதனைத் தெரிவித்தார். சீரற்ற வானிலையுடன் பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம் மற்றும் புத்தளம் மார்க்கத்திலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில ரயில்கள் சேவைகள் தாமதமாக வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பல ரயில் நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் களனிவெளி பாதையில் இயங்கும் புகையிரத சேவை வாகா புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வாள்வெட்டுத் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தாய் பலி! – தனிப்பட்ட தகராறால் இலங்கையில் பயங்கரம்

கண்டி – மஹியாவ பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர்  ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (1) இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி மஹியாவ  பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய வேளாங்கனி எஷிராணி என்ற தாயே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலையுடன் தொடர்புடைய மஹியாவ எம். டி பிரிவில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரும் சந்தேக நபரும் அயலவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரச மற்றும் தனியார் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் (3,4) மூட தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை இன்று (3) மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், அரச அல்லது தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாளை (4) பாடசாலை மீள ஆரம்பிக்கப்படுமா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மோசமான வானிலை காரணமாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சேதமடைந்துள்ள வீடுகள் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்..!

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்க செலவில், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இது தொடர்பான முழுமையான திட்டமொன்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் அமுல்படுத்தப்படவுள்ளது. தற்போது பொது நிர்வாக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட செயலகங்கள், பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேச செயலகங்களின் அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கிராம சேவகர்கள் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த அனைத்து அதிகாரிகளின் அர்ப்பணிப்பையும் பாராட்டிய ஜனாதிபதி, சேவைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காகவும் பொதுமக்களுக்கு அன்றாட வாழ்க்கை நிலைமைகளை பேணுவதற்காகவும் வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் அரசாங்கம் உடனடியாக வழங்கும் என்றும் தெரிவித்தார். 25 மாவட்ட செயலகங்களின் கீழ் அமைந்துள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அதிப திலகரத்ன தெரிவித்தார். முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் பெறுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ள இடர்களைக் கையாள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய தேவையான வாகனங்கள், படகுகள் அல்லது ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு உடன்பாடு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கிணங்க கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவம் என்பன அந்த பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் கலந்துகொண்ட இச்சந்திப்பில் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் டிஜிட்டல் முறையில் இணைந்து கொண்டனர். தேவையற்ற வகையில் வீதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது நீர்நிலைகள் உள்ள இடங்களில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார். அவசர நிலைகளைத் தெரிவிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் செயற்படும். சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் இதன் ஊடாக இணைக்கப்பட்டு வசதிகள் செய்து தரப்படும் எனவும் பதில் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார். இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக அனர்த்தமுள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த அலுவலகங்கள் அனைத்திலும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் இன்று இரவு முழுநேரப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தெரிவித்தார். இரத்தினபுரி, குருவிட்ட, ஏலபாத்த, கலவான, அயகம, கிரியெல்ல, நிவித்திகல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது சீரற்ற காலநிலை காரணமாக 2574 குடும்பங்களில் 9398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 528 குடும்பங்களைச் சேர்ந்த 2219 பேர் 18 பாதுகாப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி உத்தியோகத்தர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தெரிவிக்கின்றார். இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ள மற்றும் வெளியில் தங்கியுள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்களின் உணவு மற்றும் சுகாதாரத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மேலும் வலியுறுத்தினார். இதேவேளை, 22 பிரதேச செயலகங்களில் நெலுவ, தவலம, நாகொட, நயாகம, வெலிவிட்டிய திவித்துறை, பத்தேகம மற்றும் எல்பிட்டிய ஆகிய 07 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக காலி மாவட்ட பதில் செயலாளர் சி.டி. ராஜகருணா கூறினார். நெலுவவை அண்டிய பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், அனர்த்தம் காரணமாக 1348 குடும்பங்களைச் சேர்ந்த 3455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இருவர் காணாமல் போயுள்ளனரர். பிரதான பாதுகாப்பு நிலையமொன்றில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 608 பேருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பதில் மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார். மாத்தறை மாவட்டத்தில் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்துரலிய, அக்குரஸ்ஸ மற்றும் பிடபெத்தர ஆகிய பிரதேசங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட செயலாளர் கணேஷ் அமரசிங்க கூறினார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட அறிவிப்பு

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் இணைப்பு மற்றும் வசதிகளை இது எளிதாக்கும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட செயற்பாட்டு அறையின் தொலைபேசி இலக்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (02) மாலை 06:00 மணி முதல் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்படும் விசேட பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விசேட செயற்பாட்டு அறை பொலிஸ்  தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதுடன் அவசரகால நிலைகள் மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இதன்படி, 011 2 42 18 20 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசேட செயற்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், 011 2 43 92 12, 011 20 130 36 அல்லது 011 20 130 39 ஆகிய எண்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களை வழங்க முடியும். அத்துடன் disaster.ops@police.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.