தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்க செலவில், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இது தொடர்பான முழுமையான திட்டமொன்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் அமுல்படுத்தப்படவுள்ளது.
தற்போது பொது நிர்வாக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட செயலகங்கள், பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேச செயலகங்களின் அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கிராம சேவகர்கள் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அந்த அனைத்து அதிகாரிகளின் அர்ப்பணிப்பையும் பாராட்டிய ஜனாதிபதி, சேவைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காகவும் பொதுமக்களுக்கு அன்றாட வாழ்க்கை நிலைமைகளை பேணுவதற்காகவும் வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் அரசாங்கம் உடனடியாக வழங்கும் என்றும் தெரிவித்தார்.
25 மாவட்ட செயலகங்களின் கீழ் அமைந்துள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அதிப திலகரத்ன தெரிவித்தார்.
முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் பெறுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ள இடர்களைக் கையாள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய தேவையான வாகனங்கள், படகுகள் அல்லது ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு உடன்பாடு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கிணங்க கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவம் என்பன அந்த பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் கலந்துகொண்ட இச்சந்திப்பில் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் டிஜிட்டல் முறையில் இணைந்து கொண்டனர்.
தேவையற்ற வகையில் வீதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது நீர்நிலைகள் உள்ள இடங்களில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அவசர நிலைகளைத் தெரிவிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் செயற்படும். சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் இதன் ஊடாக இணைக்கப்பட்டு வசதிகள் செய்து தரப்படும் எனவும் பதில் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக அனர்த்தமுள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த அலுவலகங்கள் அனைத்திலும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் இன்று இரவு முழுநேரப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தெரிவித்தார்.
இரத்தினபுரி, குருவிட்ட, ஏலபாத்த, கலவான, அயகம, கிரியெல்ல, நிவித்திகல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது சீரற்ற காலநிலை காரணமாக 2574 குடும்பங்களில் 9398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 528 குடும்பங்களைச் சேர்ந்த 2219 பேர் 18 பாதுகாப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி உத்தியோகத்தர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தெரிவிக்கின்றார்.
இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ள மற்றும் வெளியில் தங்கியுள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்களின் உணவு மற்றும் சுகாதாரத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.
இதேவேளை, 22 பிரதேச செயலகங்களில் நெலுவ, தவலம, நாகொட, நயாகம, வெலிவிட்டிய திவித்துறை, பத்தேகம மற்றும் எல்பிட்டிய ஆகிய 07 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக காலி மாவட்ட பதில் செயலாளர் சி.டி. ராஜகருணா கூறினார்.
நெலுவவை அண்டிய பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், அனர்த்தம் காரணமாக 1348 குடும்பங்களைச் சேர்ந்த 3455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இருவர் காணாமல் போயுள்ளனரர். பிரதான பாதுகாப்பு நிலையமொன்றில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 608 பேருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பதில் மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மாத்தறை மாவட்டத்தில் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்துரலிய, அக்குரஸ்ஸ மற்றும் பிடபெத்தர ஆகிய பிரதேசங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட செயலாளர் கணேஷ் அமரசிங்க கூறினார்.