Search
Close this search box.

இஸ்ரேலியர்கள் தொடர்பில் மாலைத்தீவு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

மாலைத்தீவு அரசாங்கம் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடைசெய்யும் வகையில் நாட்டின் சட்டங்களை மாற்றுவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அலி இஹுசன் (Ali Ihusaan) இந்த முடிவை அறிவித்துள்ளார். அவரின் கூற்றுப்படி, நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் கடவுச்சீட்டில் மாலைத்தீவிற்குள் நுழைவதைத் தடைசெய்ய தேவையான சட்டத் திருத்தங்களை விரைவில் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காசா மீதான இஸ்ரேலியப் படைகளின் பேரழிவுத் தாக்குதல்கள் பெருகிவரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11 ஆண்டுகளின் பின் கனேடிய – சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

கனேடிய மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பதினொரு ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் (bill blair) சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டொங் யூனை சந்தித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரி லா பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீனாவினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் குறித்து கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ரஸ்யாவிற்கு வழங்கப்பட்டு வரும் பொருளாதார உதவிகள் மற்றும் தாய்வானுக்கு அருகாமையில் மேற்கொள்ளப்படும் இராணுவ பயிற்சிகள் போன்றன குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் தீ பரவல்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே ரயிலில் தீ பரவியுள்ளது. இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த  ரயிலின் பின் இயந்திரத்தில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. ஹப்புத்தளை நிலையத்திற்கு அருகில் ரயிலில் தீ பரவியதாகவும், ரயில் ஹப்புத்தளை நிலையத்திற்கு வந்த பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொடி மெனிகேவின் ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஓடிய பேருந்து: காவல்துறை எடுத்த நடவடிக்கை

தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு முன்னெச்சரிக்கை எதுவுமின்றி தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்தார். கொழும்பு – எம்பிலிப்பிட்டிய சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். புவக்பிட்டியவில் உள்ள களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் சாரதி, பேருந்தை இயக்கிச் செல்லும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய சாரதியுடன் சம்பந்தப்பட்ட பேருந்தும் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை போஷிக்கும் யுகத்தை உருவாக்குவோம்!

இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாளிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது. இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்கி, விவசாயியை மையமாக வைத்து கிராமம், நகரம், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கடன் மீளச்செலுத்த முடியாத மோசடி மிக்க வியாபாரிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மோசடி மிக்க வியாபாரிகள், பணக்காரர்களின் பக்கமல்லாது விவசாயினதும் சாதாரண மக்களினதும் நலன்களின் பக்கம் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் விவசாயிகள் பெற்ற கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயி பாதுகாக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (02) திருகோணமலை, கந்தளாய் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாயிகளின் நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்க ஜனாதிபதி செயலணி, உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எமது நாட்டிலுள்ள விவசாயி நாளுக்கு நாள் ஏழ்மை நிலைக்கு ஆளாகி வருகிறார். விவசாய துறைக்கான, திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், அதிகாரிகள் இருந்தும் விவசாயத்துக்கு முறையான தேசிய கொள்கை இல்லாததே இத்துறை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாட்டின் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபித்து, மாவட்ட மட்டத்திலும், கமநல மத்திய நிலையங்கள், விவசாய அமைப்புகள் மட்டங்களிலும் விவசாயியை முன்னேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரினதும், நாட்டு மக்கள் அனைவரினதும் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். கோட்டாபய ராஜபக்ச எடுத்த ஒருதலைபட்சமான தீர்மானத்தால் விவசாய விளைச்சலும் விவசாய உற்ப்பத்திகளுக்கான விலைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. விவசாய நிலங்களில் இருந்து டொலர்களை ஈட்டும் யுகத்தை உருவாக்குவோம், விவசாய நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் தரத்தை உயர்த்தி, விவசாயப் பொருட்கள் நாட்டில் நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுவது போல, ஏற்றுமதி விவசாயத்துக்கு இட்டுச்சென்று, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏற்றுமதி மூலம் வருமானம் பெற்று டொலர்களை ஈட்டும் சூழல் உருவாக்கித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலை, பெரும் விளைச்சலை ஒரே நேரத்தில் சந்தையில் போடாமல், விலையைக் குறைக்காமல் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், நுகர்வோருக்கு நியாயமான விலையும் கிடைக்கும் வகையில் முறையான சேமிப்பு களஞ்சிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இதுதவிர, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களைநாசினி தெளிக்கும் திட்டத்தையும், பயிர்ச்செய்கை அறிவுறுத்தல்களை கையடக்கத் தொலைபேசி வழியாக பெற்று, பயிர்களை விற்பனை செய்யக்கூடிய பொதுவான விவசாயப் பயன்பாட்டு முறையையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். விவசாயிகளுக்காக பிரத்தியேக வங்கி, விவசாயிகளுக்கு சரியான மூலதன அணுகலைப் பெறுவதற்கு நிதி வசதிகளுடன் கூடிய வங்கிக் கட்டமைப்பு உருவாக்கப்படும். தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு யானை – மனித மோதலை குறைக்க புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். பயிர் சேதத்திற்கு பயிர் இழப்பீட்டு முறைகள் மற்றும் சொத்து சேதத்திற்கு புதிய காப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவோம். இதன் ஊடாக விவசாயிகளைப் பலப்படுத்துவோம். தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்கப்படும், அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.  நமது ஏற்றுமதி பயிர்களுக்கு சர்வதேச சந்தையை இழந்து வருகிறோம்.  இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு விவசாயத்தை முன்னேற்க இரசாயன உரங்கள் தேவை.  நெல், மரக்கறிகள், பழங்கள், ஏனைய பிரதான பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு உரங்கள் தேவை. சகல பயிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது உரம் இட வேண்டியிருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கும். விவசாயிகள் எதிர்நோக்கி வரும் அவல நிலையை முடிவுக்குக் கொண்டு வருவோம். சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பலர் இவர்களை மறந்துவிட்ட போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை மறந்துவிடவில்லை. இவர்களுக்கு 30 இலட்சம் ரூபா வழங்கி ஓய்வூதியம் இல்லாமல் சேவை நீக்கம் செய்ய அரசாங்கம் எடுத்த திட்டத்தை பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியே அதனை தோற்கடித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 26% ஆக அதிகரித்துள்ள வறுமை விகிதம் – ஜனாதிபதி அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 26% ஆக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வருமானம் இல்லாத மற்றும் கல்வி வசதிகள் இல்லாத ஒரு பகுதி இருப்பதாகவும் அதனை 2032 ஆம் ஆண்டளவில் 10% ஆகக் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். எனவே, இந்த திட்டத்தை தொடர வேண்டும். இந்தப் பரவலான ஏழ்மைக்கு தீர்வு காணும் வகையில்தான் வாரிசுரிமையில்லா நில உரிமை வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மேலும், கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் புதிதாக சிந்திக்க வேண்டும் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் அறிவிப்பு..!

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கைக்கான நான்காவது ஆலோசனையும் இரண்டாவது மீளாய்வும் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அமர்வில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொருளாதார ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் சீர்திருத்த முயற்சிகளை மேலும் மேம்படுத்தும் மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கான வெற்றிகரமான மீளாய்வுக்கு அனைத்து நாடுகளின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நவம்பர் 17ம் திகதியுடன் முடிவடையும் ரணிலின் காலம்! விரட்டியடிக்கவுள்ள மக்கள்! லால்காந்த சூளுரை

எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலம் முடிவடைகிறது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் அமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தேர்தலை ஒத்தி வைப்பது குறித்த யோசனைக்கு நாடாளுமன்றில் கை உயர்த்தும் உறுப்பினர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மக்களை சந்திக்க முடியாது ஒளிந்திருக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் அழுத்தம் மிகுந்த ஆட்சியிலிருந்து விடுபட மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர் எனவும், இந்த ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்பது உறுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் திட்டமிட்டு திணிக்கப்படும் சிங்கள மொழி : அன்னராசா குற்றசாட்டு

மொழி தொடர்பாக நாங்கள் எவ்வளவு பேசினாலும் அடிப்படையில் இருந்து நாம் ஏமாற்றப்படுகின்றோம் என வடமாகாண கடற்றொழில் பிரதிநிதி அ.அன்னராசா (A. Annarasa) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கடற்றொழிலாளர்களது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (02) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மொழியிலே நாங்கள் கேள்வி எழுப்பும் பொழுது சிங்கள மொழியில் பதிலளிக்கும் கடிதமொன்றை அனுப்பியதன் மூலம் உள்ளூர் இழுவைமடி சட்டத்தினை அரச அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றமை தெளிவாக புலப்படுகின்றது. எங்கள் மொழியில் ஒரு கடிதத்தை கூட வழங்க முடியாத அளவிற்கு இலங்கை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இருக்கின்றார். சிங்களம் தெரியாத வடக்கு கடற்றொழிலாளர்கள் இதை எங்கு கொண்டு வாசிப்பது?” என அவர் தெரிவித்துள்ளார்.

கிராமிய தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய கடன் திட்டம் அறிமுகம்

கிராமிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கடன் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் கிராமத்தின் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மற்றைய கடன் திட்டங்களின் மூலம் கடன் பெற்றிருந்தாலும் அறிமுகப்படுத்தப்படும் புதிய கடன் திட்டத்தில் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். குறித்த கடன் திட்டத்தின் மூலம் 5 இலட்சம் பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, வீட்டிலேயே அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பெண்கள் இந்தக் கடன் அமைப்பில் இணைந்து புதிய வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.