பல்லேவெல மற்றும் கனேகொட ரயில் நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா ரயில் நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில்வே துணைப் பொது முகாமையாளர் ஜெ.என்.இந்திபொலகே இதனைத் தெரிவித்தார்.
சீரற்ற வானிலையுடன் பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம் மற்றும் புத்தளம் மார்க்கத்திலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில்,
சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில ரயில்கள் சேவைகள் தாமதமாக வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல ரயில் நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் களனிவெளி பாதையில் இயங்கும் புகையிரத சேவை வாகா புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.