2.5 – 3 மீற்றர் வரை உயரும் கடல் அலைகள்..! இலங்கைக்கு சற்றுமுன் சிவப்பு அபாய எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (28) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், அந்த பிரதேசங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலில் ஈடுபடுவோரை, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்பிட்டியிலிருந்து கொழும்பு , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஏனைய கடற்பரப்புகளில் கடல் அலையானது 2.5 – 3 மீற்றர் வரை உயரலாம் என திணைக்களம் குறிப்பிடுகின்றது. இதன் காரணமாக கல்பிட்டி, கொழும்பு , காலி முதல் மாத்தறை வரை கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்! – வெளியான தகவல்…
நீண்ட விடுமுறை வார இறுதி காரணமாக எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் பரவியதன் பின்னர் இவ்வருடம் வெசாக் காலத்தில் அதிக எரிபொருள் நுகர்வு இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் எரிபொருள் விலை மாதாந்த திருத்தம் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் எரிபொருள் விலை குறையும் என தெரியவந்துள்ளது .
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்த நபர் அட்டகாசம்! கேள்வி கேட்ட ஊழியர் மீது கொடூர தாக்குதல்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவரை கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை, மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, மதுபோதையில் வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள்ளே நுழைந்து சிகிச்சையளிக்க கோரியுள்ளார். இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த நபர், அலுவலக மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார். இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மற்றும் வாள்வெட்டில் காயமடைந்தவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் , இது தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர் http://<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fchuttuviral%2Fvideos%2F850545783583059%2F&show_text=true&width=476&t=0″ width=”476″ height=”591″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
வாரியபொல வந்துரஸ்ஸ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வந்துரஸ்ஸ, மாவத்தை ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த நபரின் சடலம் மாவத்தை ஏரியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வந்துரஸ்ஸ கலயாய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் வைத்தியசாலையில் வைத்து குறித்த நபரின் பிரேதப் பரிசோதனை இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விலங்கு வேட்டைக்காக போடப்பட்டிருந்த சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் வந்துரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான நபர் பரிதாப மரணம்
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மில்லபெத்த, பிட்டகொலகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த நபர் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த போது குளவி கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்நிலையில், ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மரணித்த நபரின் சடலம் லுணுகலை ஹொப்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரட்ண தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மாலை நேர உணவகங்களுக்கு ஏற்பட்ட கதி..! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
திருகோணமலை – மூதூர், தோப்பூர் பிரதேசத்திலுள்ள மாலை நேரக் கடைகள் நேற்று திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உணவு கையாண்டமைக்காக இரண்டு மாலை நேர சிற்றூண்டி நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகள் ஐ.எம்.றினூஸ் தெரிவித்தார். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் ஆலோசனைக்கமைய மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்…! ரணில் எடுத்துள்ள நடவடிக்கை
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி தீர்வுகளை வழங்குமாறு அதிபர் அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) முன்வைத்துள்ளதுடன், பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குறித்த குழுவை விரைவில் நியமிக்குமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் மரணத்தில் சந்தேகம்..! கணவன் உட்பட மூவர் கைது
முல்லைத்தீவு பகுதியில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (27.05.2024) முல்லைத்தீவு – முள்ளியவளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் இம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில், பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை வவுனியா – ஆச்சிகுளம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பபெண் திருமணம் செய்து 7 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் (26.05.2024) கிணற்றில் குறித்த பெண் விழுந்து இறந்துள்ளதாக முறைப்பாடு செய்வதற்காக கணவன் காவல் நிலையம் சென்றுள்ளார். இதன்போது காவல்துறையினர் வருகை தரமுன்னர் அயலவர்கள் கிணற்றில் விழுந்த பெண்ணை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். இருப்பினும் பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில், நேற்று 27.05.2024 சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசேதனைக்கு உட்படுத்தப்பட்டபோது குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதான சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து முள்ளியவளை காவல்துறையினரால் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் கணவருடன் வாழ்ந்துவந்த நெடுங்கேணியினை சேர்ந்த மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரையும் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவனை கொலை செய்யப் போவதாக மிரட்டி குடும்பத்தை கட்டி வைத்து கொள்ளை! முல்லைத்தீவில் பரபரப்பு
முல்லைத்தீவு மாவட்டம், நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் நுழைந்தவர்கள் கத்தி முனையில் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நட்டாங்கண்டல் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட குழு வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்துவிட்டு மிரட்டியுள்ளனர். வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்களில் ஒருவர், வாசல் கதவைத் திறந்த பின்னர் மற்றையவர்கள் உள்நுழைந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். வீட்டு உரிமையாளரின் 14 வயது மகனைக் கொலை செய்யப் போவதாக மிரட்டிய கொள்ளையர்கள், அந்தச் சிறுவனின் தாய், தந்தையின் கண்களை மூடிக் கட்டி விட்டு மகனை நகைகளை எடுத்துத் தருமாறு மிரட்டியுள்ளனர். கொள்ளையர்களில் ஒருவர் பொலிஸ் என அடையாளப்படுத்தப்பட்ட ரீ சேட் அணிந்து வந்திருந்தார் என்றும், வீட்டின் உரிமையாளரை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தே உள்நுழைந்தார் என்றும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களால் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், ஒரு மோட்டார் சைக்கிள் எரிபொருள் தீர்ந்த நிலையில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்பே முடிவு! – தமிழரசின் தீர்மானத்தை அறிவித்தார் சுமந்திரன்
“ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னரே எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனத் தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும். அதுவரையில், பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகிய மூவரையும் சம அளவிலேயே பார்த்துச் செயற்படுவது என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கூறிய சுமந்திரன் எம்.பி., மேலும் தெரிவித்ததாவது:- “ஜனாதிபதித் தேர்தல் குறித்து எங்களுடைய கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் கூடிப் பேசியபோது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரிய நேரத்திலே அது சம்பந்தமான முடிவை நாங்கள் எடுப்பதாகவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்துவிட்டு அதன் பின்பு சரியான தீர்மானம் எடுக்கப்படும். இப்போது இருக்கின்றவர்களில் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் ரணில், சஜித், அநுர என்ற மூவரையும் நாங்கள் இப்போது சம தூரத்தில் வைத்துப் பார்த்துச் செயற்படுவோம் என்று தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம். அப்படி அவர்களைச் சம தூரத்தில் வைத்து நாங்கள் செயற்படுவதாக இருந்தால் எந்தவொரு வேட்பாளர் நியமனத்தையும் நாங்கள் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் ஒரே தூரத்தில் வைத்துத்தான் நாங்கள் செயற்படுவோம். குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வந்தபோது அவரது கூட்டத்தில் பங்குபற்றியிருந்தேன். அதன்போது அவரோடும் பேசியிருந்தேன். ரணில் விக்கிரமசிங்க இங்கு வந்த போதும் கூட அரச நிகழ்வுகளிலே நாங்கள் பங்குபற்றியிருக்கின்றோம். ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற சூழ்நிலையிலும் எவரையும் நாங்கள் சந்திப்போம். குறிப்பாக சஜித் பிரேமதாஸ வடக்குக்கு வந்தால் அவரையும் சந்திப்போம். இவர்களைத் தவிர வேறு வேட்பாளர்கள் வந்தால் அவர்களையும் நாங்கள் சந்திப்போம். இப்படி அனைவரையும் சந்தித்துப் பொது வெளியிலே உரையாடி வெளிப்படைத் தன்மையோடு மக்களிடத்தே நாங்கள் நடாத்திய உரையாடல்களையும் தெரிவித்து மக்களுடன் கலந்தாலோசித்து சரியான தீர்மானத்தை நாங்கள் எடுப்போம் என்பதையும் உறுதியாகச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.” – என்றார்.