Search
Close this search box.

இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை…!

இலங்கையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் பதிவாகி வருகின்றது. அதனடிப்படையில் இன்றையதினம்(28) கொழும்பு – செட்டியார் தெருவில் பதிவான தங்கத்தின் விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்(28) 192,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,500  ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாமதமாகும் வடக்கு ரயில் அபிவிருத்திப் பணிகள்..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வடக்கு ரயில்வேயின் அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் பொசன் பௌர்ணமி தின விடுமுறைக்கு முன்னர் பூர்த்தி செய்ய முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வடக்கு ரயில்வேயின் அபிவிருத்திப் பணிகளை ஒகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, பொசன் விடுமுறையை முன்னிட்டு விசேட பேருந்து சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பொசன் பௌர்ணமி தினத்திற்கு முந்திய நாளிலும், பொசன் போயா தினங்களிலும் பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த விசேட பேருந்து சேவைக்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையுடன் இணைந்து விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கால அட்டவணை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழில் கோர விபத்து – முச்சக்கரவண்டிக்கு ஏற்பட்ட கதி! மூவர் வைத்தியசாலையில்..!

யாழ். சாவகச்சேரி  ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் A9 வீதியில் கனரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல்  இடம்பெற்றுள்ளது. கனரக வாகனம்  பின்னால் திருப்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான   விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று நாட்களில் உயிரை பறிக்கும் வைரஸ் : சீனாவின் அதிர்ச்சிகர கண்டுப்பிடிப்பு

சீனாவில் (China) மூன்று நாட்களில் உயிரைப்பறிக்க கூடிய புதிய வகை வைரஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில், குறித்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சீனா உருவாகியுள்ள இந்த புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக அமையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ள நிலையில் இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவுவதுடன் எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வைரஸ் செலுத்தப்பட்டு ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு இறுதியில் அவற்றின் கண்பார்வை பறிபோயியுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா வைரஸின் பாதிப்பு அறிகுறி குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கம் என தெரிவித்த சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அதேவேளை சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகம் பல கோடி மக்கள் உயிரிழந்த நிலையில், மீண்டுமொரு வைரஸை உருவாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக இணைய பாவனைக்கு காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிகவும் விரைவான இணைய வசதியை பெறுவதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்படவுள்ளது. அதற்கமைய எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையம் இலங்கையர்களிடமிருந்து முன்கூட்டிய பதிவுகளை ஏற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பித்துள்ளது. பொதுமக்கள் முழுமையாகத் திரும்பப்பெறக்கூடிய 9 அமெரிக்க டொலர் வைப்பு செய்து Starlink சேவையை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு Starlink இலங்கையில் சேவையை இலக்காகக் கொண்டுள்ளது. கிடைக்கும் என்பது ஒழுங்குமுறை அனுமதிக்கு உட்பட்டது. ஒவ்வொரு coverage பகுதியிலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிறைவேற்றப்படும் முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்படும். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்கை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார். அண்மையில் இந்தோனேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, Starlink வலையமைப்பை ஒருங்கிணைத்தல் தொடர்பாக உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் உடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை பூவை அவமதித்த இலங்கை காலணி நிறுவனம்: தமிழர்கள் கடும் விசனம்

இலங்கையிலுள்ள ( Sri Lanka) பிரபல காலணி நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காலணிகள் கொழும்பு (Colombo) – வெள்ளவத்தையிலுள்ள காட்சியறையிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகைப்பூவை அவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் காலணியில் பயன்படுத்தியமை வடிவமைப்பில் வேண்டுமென்றே உள்வாங்கப்பட்டதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு இந்த விடயங்களை எடுத்துச் சென்று உற்பத்தியில் இந்த சின்னத்தை தவிர்க்கவும், ஏற்கனவே காட்சி அறையில் உள்ள குறித்த காலணிகளை மீளப் பெறவும் நடவடிக்கை எடுக்க தமிழர்கள் சார்பில் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

பாதம் இல்லாத சடலம் மீட்பு…! – வெளியாகிய தகவல்…

பாதம் இல்லாத சடலமொன்று தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.வெயாங்கொடை-வதுரவ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இந்த சம்பவம் ​இடம்பெற்றுள்ளது. புகையிரத தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் ஆண்ணொருவரின்  சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், இந்த சம்பவத்தினால் பிரதான  புகையிரத போக்குவரத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயங்கொடை பொலிஸாரிடம். வெயாங்கொட மொட்டுன்ன பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதுடைய ரொஷான் மஹாநாம என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். தண்டவாளத்தில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், தண்டவாளங்களுக்கு இடையில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு, வெயாங்கொடை புகையிரத நிலையத்திற்கு தகவல் வழங்கினார். அதனையடுத்து சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இறந்தவரின் கால்களில் ஒன்று சடலம் இருந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் விழுந்து கிடந்துள்ளது. மேலும் இறந்தவருடையது என்று சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் கோடாரி ஆகியவையும் அருகில் கிடந்தன. கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், எந்த புகையிரதத்தில் இது இடம்பெற்றது என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் வீட்டில் பற்றியெரிந்த தீ…! – குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர். கிரான்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி இந்த தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையிலேயே தொடர் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் மீது தீ மூட்டிய குற்றச்சாட்டில் இதுவரையில் 25 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வீட்டுக்கு பாரியளவு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டு கட்சியின் காரியாலயத்திற்கு முன் கடும் பதற்றம்! வெடித்த ஆர்ப்பாட்டம்…

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் அந்த இடத்திற்கு வந்து கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்து பயணித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்ரசாவுக்குள் மாணவன் மர்ம மரணம் – மௌலவிக்கு நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு

அம்பாறை – சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது, நேற்றைய தினம்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மௌலவி உட்பட சிசிரிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதேவேளை, குறித்த நால்வரும் கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிரிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் பொருட்டு கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இதன்பின்னர், இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த தவணையின் போது 30, 26, 22 மற்றும் 23 வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்கள் நீதவானால் ஆராயப்பட்டுள்ளது. மேலும், குறித்த சந்தேக நபர்கள், தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை, மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டுக்களை நீதிமன்றில் சமர்ப்பித்தல் மற்றும் வழக்கு தவணைகளில் தவறாது முன்னிலையாகுதல் உள்ளிட்ட பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.