Search
Close this search box.

மரக்கறி, மீன்களின் விலை அதிகரிப்பு!

நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால்  இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் உயரலாம் என மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் அஜித் களுதரகே தெரிவித்தார். இதேவேளை, இந்நாட்களில் மீன் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாததனால் மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக மன்றத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்தார்.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்! ஒருவர் கைது – நடந்தது என்ன?

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (27) காலை வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மண்டூர் கோட்டமுனை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலம் மீட்கப்பட்டதும், அதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதான சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் பங்கேற்பதற்காக சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்த முக்கிய அறிவிப்பு!

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம்  மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (27) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதமாக பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புறப்பட தயாராக இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவசர வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பொலிஸார், தீயணைப்புத் துறையினர் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டு சென்று வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2005 தேர்தல்…! பயமா? எனக்கா?

யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில்  நீங்கள் சில தினங்களிற்கு கூறியிருப்பது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது… அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே. ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது. கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர். ஏனென்றால் அதை அமுல்படுத்துகிற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன். வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் வாக்களித்தார்கள். ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்த விதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை. ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள். எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது. எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்றார்.

மாத்தறை சிசு சம்பவம் தொடர்பில் நீதவானின் உத்தரவு!

மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த DNA பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான்  அருண புத்ததாச இன்று உத்தரவிட்டுள்ளார். தமது சிசு தொடர்பில் டி.என்.ஏ பரிசோதனை செய்யுமாறு பெற்றோர்கள் கோரியபோது, ​​வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பின்னணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச வைத்தியசாலைக்கு வந்து, வைத்தியசாலை அதிகாரிகள் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படும் சிசுவின் சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் நீதவான்  இந்த உத்தரவை வழங்கினார். மேலும் , சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். மதுஷானி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட தினமே குழந்தையை பிரசவித்திருந்த நிலையில்,   குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் குழந்தையின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலை அதிகாரிகள்  சிசுவின் சடலத்தை பெற்றோரிடம் காட்டாமல் இருந்ததும், மற்றும் இது குறித்து அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வந்ததும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. சிசு இறப்பு ஏற்பட்டால் வைத்தியசாலையில் கடைப்பிடிக்கும் வழக்கமான நடைமுறை என்ன என்று மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் ஒருவரிடம் நாம் வினவியிருந்தோம். இதன்போது, சடலம் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு வைத்தியசாலை கண்டிப்பாக பெற்றோரிடம் சம்மதம் கேட்கும் என்றார். இவ்வாறானதொரு பின்னணியில், சிசு பற்றிய தகவல்களை இந்தப் பெற்றோரிடம் இருந்து வைத்தியசாலை அதிகாரிகள் மறைத்துள்ளனரா?

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்..! முகக்கவசம் அணியுமாறும் வைத்தியர் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்புளுவென்சா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். இந்நாட்களில் இன்புளுவென்சா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருகின்றது. அதில் இன்புளுவென்சா ஏ தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். காய்ச்சலுடன் இருமல், சளி, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது இன்புளுவென்சா காய்ச்சலாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களிடம்  அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் குளிர் காலத்தில் இன்புளுவென்சா வைரஸ் பரவும் எனவும், வைரஸ் பரவாமல் தடுக்க முகக் கவசங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்ப்ளூயன்ஸா வைரஸுக்கு தடுப்பூசிகள் இல்லை எனவும் பாராசிட்டமால் மருந்தை செலுத்தி, தண்ணீர் மற்றும் இயற்கையான திரவங்களை எடுத்துக் கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையும் மீறி கடலுக்கு சென்ற இருவர் மாயம்!

எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை காரணமாக இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி குறித்த மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அதிக காற்று வீசி வருவதைக் கருத்தில் கொண்டு இன்றும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரியின் கரகல பிரதேசத்தில் அதிகளவான மழை பதிவாகியுள்ள நிலையில், அது 143.3 மி.மீ மழைவீழ்ச்சியாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்…!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான  பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மேலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். ஆகையினால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.