முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்: தமிழ் மக்களுக்கு ரணில் பதில் கூறவேண்டும் என்கிறார் சுரேஷ் பிரேமசந்திரன்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் மக்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் மக்கள் இறந்தனர். கஞ்சிக்காக வரிசையில் நின்ற வயோதிபர்கள், குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறாக மோசமாக கொல்லப்பட்ட உறவுகளை நினைவேந்துவதற்கு அரசாங்கம் தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இறுதி காலங்களில் அந்த மக்கள் எவ்வாறான நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார்கள் என்பதை வருங்கால தலைமுறை அறிந்து கொள்வதற்காக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மூதூரில் கஞ்சி வழங்கிய பெண்களை பொலிஸார் மோசமாக கைது செய்தனர். இது ஒரு அசிங்கமான விடயம். இனிமேல் இவ்வாறான விடயம் நடைபெற கூடாது. ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
கோர விபத்தில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்..! ஆசிரியை கைது..
களுத்துறை – பாணந்துறையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பெண் ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை நிவ்டாவ சந்தியில் வசித்து வந்த அவித்யா ரசிது பெர்னாண்டோ என்ற 18 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். பாணந்துறை ஹொரண வீதியில் பின்கொட்டுவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பண்டாரகவில் இருந்து பாணந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார சைக்கிள் ஓட்டுநரான இளைஞன் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சஜித், அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஆனால் அது தொடர்பான விவாதத்தை நடத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இன்று மற்ற இரண்டு முக்கிய வேட்பாளர்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். தயவுசெய்து அந்த விவாதத்தை நடத்துங்கள். ஏனெனில் இந்த விவாதத்தில் இருவரும் பங்கு பெறாத போக்கே காணப்படுகிறது. நான் உண்மையில் ஜனாதிபதியிடம் பொது விடுமுறையை அறிவித்து இந்த விவாதத்தைப் பார்க்குமாறு இலங்கை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கோரினேன். இவர்கள் இருவரின் விவாதத்தைப் பார்த்து எப்படி நாட்டைக் கட்டியெழுப்ப போகிறார்கள் என்று பார்ப்போம். ஏனெனில் சவால்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப போகிறார்கள் என முதலில் பார்க்க வேண்டும். இது ஒரு வாய்ச்சவடாலே. இதை செய்ய முடியாது என்பது இரு தரப்புக்கும் தெரியும். ஒருவர் கடும் சிங்களத்தில் பேசுகிறார். மற்றையவர் கடும் ஆங்கிலத்தில் பேசுகிறார். இருவரும் பேசுவது இருவருக்குமே புரியாது. வாய்ச்சவடாலின்றி செயலில் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி மீட்பு!
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட அலதெனிய பொலிஸார் வேனையும் குழுவினரையும் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரில் ஒருவர் இந்த மாணவியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரான சந்தேக நபர், தனது நண்பர்களுடன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வேனை பயன்படுத்தி இந்த பாடசாலை மாணவியை கடத்த வந்துள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் மாணவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு பல முறை சென்றுள்ள நிலையில் இந்த காதல் உறவு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் திருமணமானவர் என தெரியவந்ததையடுத்து மாணவி அவரை கைவிட்டுச் சென்றதுடன் சந்தேக நபரின் அழுத்தத்தினால் மாணவியின் பெற்றோர், அவரை குலுகம்மான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளனர். அங்கிருந்தவாறு பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாணவி கடத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தியத்தலாவை விபத்து – பாடசாலை மாணவியும் பலி!
தியத்தலாவை ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்று (15) இரவு உயிரிழந்தார். அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தியத்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்எதண்ட பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதான சிறுமியின் சடலம் தற்போது பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 2024 ஃபொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயம் கடந்த மாதம் 21 ஆம் திகதி தியத்தலாவை நரியகந்த பந்தய திடலில் இடம்பெற்றது. அன்று மாலை பந்தயத்தில் பங்கேற்றிருந்த கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 07 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பந்தய உதவியாளர்கள் நான்கு பேரும், பார்வைாளர்கள் மூன்று பேரும் அன்று அந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவியொருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.
இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசு அவதானம்!
2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார். “போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து எமது நாட்டுக்கு ஏற்ற இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சபையின் நம்பிக்கையாகும். அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர். அதனை ஒரு லட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை. எண்ணிக்கையில், ராணுவத்தில் ஏற்படும் இயற்கையான குறைவைக் கணக்கிட்டு, 2030க்குள், ராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 அளவில் வைத்திருப்பதே எங்கள் தற்போதைய எதிர்பார்ப்பாகும். மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும். புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம். எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.
பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!
மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் பல வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்டிருந்த பொதிகளில் ஏராளமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பல பொதிகளில் இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 150 போதை மாத்திரைகள், 466 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கொக்கெய்ன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 9 மில்லியன் ரூபா என சுங்கம் தெரிவித்துள்ளது. குறித்த போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் கனடா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தெஹிவளை, வெள்ளவத்தை, வெயாங்கொடை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். எனினும், இந்த முகவரிகள் போலியானவை என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலங்கை சுங்கப் பிரிவினரின் விசாரணையின் முடிவில் போதைப்பொருள் அடங்கிய பொதிகளை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
வவுனியா சிறுமி கூட்டு வன்புணர்வு – மேலும் ஒருவர் கைது!
வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (15) தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாகவும், அதற்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட 4 பேர் அண்மையில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிசார் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியின் முகாமையாளரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
முதலிடத்திற்கு முன்னேறிய வனிந்து!
சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 ஓவர் சகலதுறை வீரர்கள் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை மற்றுமொரு வீரருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதன்படி, பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுடன் அவர் இந்த முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.