பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?- சகோதரர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை நூறு வீதம் தாங்கள் நம்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியத் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, யாரோ ஒரு பெண் இங்கு வந்து நான்தான் துவாரகா என அறிவிப்பதுடன், இது போன்ற வரலாற்றை மாற்றியமைக்கும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படி அவர்கள் உயிருடன் இருப்பதாக யாரும் கூறினால் அவர்களை அழைத்து வர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருவேளை, தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர் 14 வருடங்கள் குடும்பத்தை விட்டு விலகியிருக்கமாட்டார். அவர் வேறு எந்த நாட்டிலும் சொகுசு வாழ்க்கை வாழக்கூடியவர் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு ஒன்றை செய்து, அவர்கள் தங்களுடைய நாட்டிலேயே இறுதி மூச்சை விட்டதாக உலக மக்களுக்கு அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி டென்மார்க்கில் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வை நடத்துவதற்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இனியும் தலைவரின் பெயரை பயன்படுத்தி பணம் பெற வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரன் மேலும் தெரிவித்துள்ளார்.
O/L மாணவர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு!
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய ஜூன் மாதம் 4 ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கை மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் கிடைக்காத அதிபர்கள் தேவையான தகவல்களை அந்தந்த மாகாண மற்றும் பிரதேச அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக தகவல் தேவைப்படும் மாணவர்கள் அவர்களுடைய பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டு அறிந்து கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை!
ஹோகந்தர ஹொரஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (15) இரவு 7.30 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நபர் ஒருவர் தடியால் தாக்கியதில், அதுருகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹோகந்தர, ஹொரஹேன வீதியில் வசிக்கும் 26 வயதுடைய திருமணமான இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்கிய நபரும் இன்று (16) காலை அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய நபர், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டு 10 நாட்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டவர் என அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் நண்பர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். நுகேகொட குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினர். கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
யாழில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கழுத்தை நெரித்து கொலை! சந்தேகத்தில் சிக்கிய கணவன்
யாழ்ப்பாணம் தாளையடியில் பெண்ணொருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று குறித்த சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவது தெரியவந்துள்ள நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபரை இன்றையதினம் (16) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்தியிருக்கலாம் என சந்கேம் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே குறித்த பணம் எப்படி ஈட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி அவர் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீட்டை செலுத்தமாறு நீதிமன்றம், மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது. இதன்படி ஒன்றரை கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பணத்தை செலுத்த தம்மிடம் வசதி இல்லை எனவும் எனவே அதனை பகுதி பகுதியாக செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் தருமாறு மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இவ்வாறு கோரிய நிலையில், கடந்த 13 ஆம் திகதி சுமார் 3 கோடி ரூபாய் (28 மில்லியன்) செலுத்தப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வௌியாகியுள்ளது. எஞ்சிய பணத்தை செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் கோரியிருந்த நிலையில் திடீரென இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த பணம் ஈட்டப்பட்ட விதம் தொடர்பில் ஆராயுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து சாரதி..! இலங்கையில் துயரம்!
நுவரெலியாவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை, பயணிகளுடன் செலுத்தி சென்ற சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 41 வயதான இரண்டு பிள்ளைகளில் தந்தையான ஆரத்தனகே என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந் நிலையில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை சந்தியை அண்மித்த பகுதியில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக பேருந்தை வீதி ஓரத்தில் நிறுத்தியுள்ளார். உடனே பேருந்தின் நடத்துனர் சாரதி அருகே ஓடிவந்து நிலைமையை ஆராய்ந்த போது சாரதி மாரடைப்பினால் அவதியுற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். உடனடியாக மற்றுமொரு வாகனம் ஒன்றில் சாரதியை அருகில் உள்ள லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார். இதையடுத்து சாரதியின் உடல் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பேருந்தை நிறுத்தி இருக்காவிட்டால் பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்ககூடும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்களை உற்பத்தி செய்யப்போகும் இலங்கை!!
சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன்(Premitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார். ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவத்திற்கு நிபுணத்துவம் உள்ளதாகவும் இலங்கை உற்பத்தி தொழில்துறை குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபடவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார். “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ராணுவத்துக்கும் ராணுவத்துக்கும் இடையிலான தொடர்பு நன்றாகவும் உயர் மட்டத்திலும் உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தியாவின் உற்பத்திப் பிரிவு வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கை கவனிக்க வேண்டிய ஒரு முன்மாதிரி இது, அதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும், ”என்று அவர் மேலும் கூறினார்.
உயிரிழந்த பெண்ணை உயிர் பெறச்செய்த கிராம உத்தியோகத்தர்!
உயிரிழந்த பெண் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தேக்கவத்தை கிராம உத்தியோக பிரிவில் கடமையாற்றும் 52 வயதான கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கமைய, இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது வேறொரு பிரிவில் கடமையாற்றும் போது உயிரிழந்த பெண் ஒருவரின் பெயரில் அவர் உயிருடன் இருப்பதாக குறித்த கிராம உத்தியோகத்தர், மௌலவி ஒருவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த கடிதத்தை பயன்படுத்தி களுத்துறை பிரதேசத்தில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றிற்கு போலி பத்திரம் தயாரித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், விசாரணையில், குறித்த பெண்ணை தனக்குத் தெரியாது எனவும் குறித்த பெண் கேட்டதையடுத்து இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்..! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். யாழ்ப்பாண விஜயத்தின் போது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளது. ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் தற்போதைக்கு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளை அவதானித்து வருகின்றனர் என தெரியவருகின்றது.
வவுனியா, கூமாங்குளம் வீட்டு வளாகத்தில் நுழைந்த 5 அடி நீள முதலை..
வவுனியா, கூமாங்குளம் கிராமத்தில் வீட்டு வளாகத்தில் 5 அடி நீள முதலை ஒன்று நுழைந்துள்ளது. இதனை அவதானித்த உரிமையாளர் வனஜூவராசி திணைக்களத்தினருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த வனஜூவராசிகள் உத்தியோகத்தர்கள் கிராமத்தவர்களின் ஒத்துழைப்புடன் முதலையினை பிடித்து காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனர்.