கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட அலதெனிய பொலிஸார் வேனையும் குழுவினரையும் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரில் ஒருவர் இந்த மாணவியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரான சந்தேக நபர், தனது நண்பர்களுடன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வேனை பயன்படுத்தி இந்த பாடசாலை மாணவியை கடத்த வந்துள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் மாணவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு பல முறை சென்றுள்ள நிலையில் இந்த காதல் உறவு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் திருமணமானவர் என தெரியவந்ததையடுத்து மாணவி அவரை கைவிட்டுச் சென்றதுடன் சந்தேக நபரின் அழுத்தத்தினால் மாணவியின் பெற்றோர், அவரை குலுகம்மான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளனர்.
அங்கிருந்தவாறு பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாணவி கடத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.