Search
Close this search box.

இராணுவத்துக்கு வழங்கப்படபோகும் காணிகள்-ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இராணுவ வீரர்களுக்கு காணிகளை வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இராணுவ சேவை அதிகாரசபையின் தலைவர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுப்பினரொருவர் இக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது சேவையிலுள்ள, ஓய்வு பெற்ற, பணியின் போது உயிர் நீத்த பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், மற்றும் இராணுவத்தினருக்கு அரச காணி வழங்கப்படவுள்ளது. இராணுவ வீரர்களுக்கு காணி வழங்கும் வேலைத்திட்டம் இதற்கு முன்னர் பல தடவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அது வெற்றிகரமாகவும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தப்படாமையால் இவ்விடயம் தொடர்பில் பரிசீலித்த ஜனாதிபதி மேற்படி குழுவை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இராணுவத்தினருக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் பரிசீலித்து அதற்கான பணிகளை துரிதமாக ஏற்பாடு செய்வது சம்பந்தப்பட்ட குழுவின் பொறுப்பாகும்.

ஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்-வெளியான தகவல்

நாட்டின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியினால் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அது குறித்து சிந்திக்கலாம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய விவசாய வர்த்தகத்துறை ஒன்று நாட்டிற்கு அவசியம்!

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் உள்ள தடைகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத்துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதுருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை நேற்று (14) காலை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். பெருந்தோட்டத்துறைக்குத் தேவையான புதிய திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி கூடங்கள், விரிவுரை மண்டபங்கள், கணினி ஆய்வகங்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான தொழில் ஆலோசனை மையங்கள் இங்கு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதுடன் AI மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மையமும் இங்கு நிறுவப்பட உள்ளது. இந்த புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 750 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் பதிவிட்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது. மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமே இந்நாட்டின் கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும் என சுட்டிக்காட்டினார். இலங்கையை அண்டியுள்ள நாடுகளின் சனத்தொகை பல பில்லியன்களால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது என்றும் அந்த நாடுகளில் உள்ள நடுத்தர மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயத்தை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் தொழிலை உயர்த்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவதற்கான சட்ட வரைபுக்கு நேற்று (13) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ”1978ஆம் ஆண்டு முதல் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்று தேவைப்பட்டது. அன்று எம்.டி.எச். ஜெயவர்தனவின் இருப்பிடமாக விளங்கும் இந்தப் பகுதியில், இவ்வாறான பயிற்சி நிறுவனத்தை நிறுவுவதற்குத் தேவையான காணி வழங்கப்பட்டது. அப்போது இந்தப் பகுதி நகரமயமாக்கப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக நவீன் திசாநாயக்க இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தார். பின்னர் நியமிக்கப்பட்ட பெருந்தோட்ட அமைச்சர்கள் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்தனர். இந்த நிறுவனத்தை அபிவிருத்தி செய்யும் போது, ஒரு வளாகத்தை தோட்டப் பகுதிக்கு மாற்றுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். கண்டி, மாத்தளை மாவட்டங்களைப் போன்று அனைத்து முக்கிய பயிர்களும் பயிரிடப்படும் மாவட்டத்தில் ஒரு வளாகத்தை திறப்பது மிகவும் முக்கியமானது. இந்தத் தொழிற்துறையில் பணிபுரிந்த எனது நண்பர்கள் பயிற்சிக்காக நுவரெலியா செல்ல வேண்டியிருந்தது. நமது விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் இத்தகைய நிறுவனங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம் இன்று மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது. விவசாயத்தின் மூலம் இந்த நிலையை அடைய வாய்ப்பு கிடைத்தது. நான் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டில் விவசாய உற்பத்தி தடைப்பட்டிருந்தது. மேலும், ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், நமது ஆடைத் தொழிலுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் இருக்கவில்லை. எனவே முதலில் இந்த நாட்டில் நெற்பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்ய பாடுபட்டோம். 2022, 2023 இல் சிறுபோகம் மற்றும் 2023 இல் பெரும்போகத்தில் வெற்றியளித்ததன் காரணமாக, இந்த திட்டத்தைத் தொடர எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, விவசாயத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டது என்றே கூற வேண்டும். இப்போது இந்த நாட்டுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் ஏனைய தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை எதிர்கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். கடனை அடைக்க எங்களுக்கு கால அவகாசம் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, அதிலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை. மேலும் நாம் எப்போதும் கடனில் வாழ முடியாது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைபுக்கு நேற்று (13) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்போது நாம் இந்த திட்டத்தை முன்னோக்கி செயல்படுத்த வேண்டும். வரலாற்று ரீதியாக நமது விவசாயம், ஏற்றுமதி விவசாயமாக மாறிவிட்டது. சிங்கள மன்னராட்சியின் போது தானியங்கள் பயிரிடப்பட்டன. மேலும், ஈர மண்டலத்தில் வாசனைப் பொருட்கள் பயிரிடப்பட்டன. வெள்ளையர்களின் வருகைக்குப் பின் தேயிலை, தென்னை, இறப்பர் என்பன பயிரிடப்பட்டன. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு நாம் ஒரு நாடாக முன்னேறவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் டி.எஸ். சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் நாம் அரிசியில் மட்டுமே தன்னிறைவு அடைய முடிந்தது. இப்போது நாட்டில் விவசாயத்தை நவீனமயமாக்கவும், ஏற்றுமதி விவசாயத் தொழிலை மேம்படுத்தவும் தேவையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஆகியவை நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பயிர்களாக மாறியுள்ளன. வெள்ளையர்கள் விரட்டப்பட்டு தோட்டங்களை நாம் கையகப்படுத்தியதால் அவர்கள் கென்யாவில் தேயிலை உற்பத்தியை ஊக்குவித்து எமக்கு போட்டியாக செயற்படுகின்றனர். வியட்நாமும் இறப்பர் செய்கையை மேம்படுத்தி இலங்கையுடன் போட்டியிடுகிறது. எனவே, இந்தப் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் தோட்டத் தொழிலை மாற்றியமைக்க வேண்டும். தற்போது விவசாயத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதனால் நாம் தோட்டங்களை விவசாய வர்த்தகமாக மாற்றி உற்பத்தியை பலப்படுத்த வேண்டும். தேயிலை மற்றும் இறப்பர் செய்கையை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று எமது தேயிலை தொழில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் அதனை சாதகமாக செய்கின்றன. நாட்டின் பாரம்பரிய பயிர் உற்பத்தியைப் பலப்படுத்த வேண்டும். நமது நாடு கோகோவா, கருவா மற்றும் ஏனைய மசாலாப் பொருட்களையும் மீண்டும் நடுகை செய்ய வேண்டும். புதிய பயிர்களை விளைவிக்க வேண்டும். அதற்காக இத்துறைக்கு புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, உற்பத்தியை அதிகரிக்க சிறு தோட்ட உரிமையாளர்களையும் இந்த நவீனமயமாக்கல் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். விவசாயத்தை மேம்படுத்தினால் மட்டுமே கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும். எனவே தற்போதுள்ள பயிர்கள் மற்றும் காணிகளையும் சிறந்த முறையில் பயன்படுத்தி 05 இலட்சம் ஏக்கர் புதிய காணியில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்கு நவீன விவசாயமும், நவீன விவசாய வர்த்தகமும் அவசியம். இந்த நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் இலங்கையை சூழவுள்ள நாடுகளின் சனத்தொகை பல பில்லியன்களால் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் உலக மக்கள் தொகைக்கு உணவுச் சந்தையை வழங்க நாம் தயாராக இருக்க வேண்டும். பழைய தோட்டத் தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வியாபாரத்தை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும். புதிய சட்டத்தின் ஊடாக நிறுவனங்களுக்கு இடையில் போடப்பட்டிருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கி சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சூழலை உருவாக்க எதிர்பார்க்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார். விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர: ”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும். இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது. நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பட்டத்தை வழங்க முடியும். பெருந்தோட்ட கைத்தொழில் தொடர்பான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் பல்கலைக்கழகமாக இந்த நிறுவனம் மாற்றப்படவுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தை சகல வசதிகளுடனும் கூடிய பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்கடியான காலத்தில் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டார். போராட்டம் நடந்த நேரத்தில், பிரதமர் இல்லாமல் ஒரு வாரம் கடந்தது. அப்போது நாட்டை பொறுப்பேற்க எந்த தலைவரும் இருக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்று, விவசாயிகளை மீண்டும் விவசாய நிலங்களுக்கு அனுப்புவதற்குத் தேவையான உரங்களை வழங்கியிருக்கிறார். நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொண்டு வருவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. அதனாலேயே கடந்த இரண்டு போகங்களில் நாட்டுக்குத் தேவையான அரிசியை விவசாயிகள் உற்பத்தி செய்தனர். தற்போது தேயிலை தொழில்துறையும் வழமைக்கு திரும்பியுள்ளது. காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனையை பதிவு செய்ய முடியும். இன்று நாட்டின் பொருளாதாரம் நிலைத் தன்மையை அடைந்து வருகிறது. ஜனாதிபதி நாட்டில் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளார். அந்த வேலைத் திட்டத்தை சீர்குலைக்காவிட்டால் அடுத்த சில வருடங்களில் மீண்டும் வீழ்ச்சியடையாத பொருளாதாரம் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்படும் என்பது உறுதி” என்று தெரிவித்தார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டத்தரணி நவீன் திஸாநாயக்க: ”பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நானே சமர்ப்பித்திருந்தேன். அப்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் ஒரு கிலோ தேயிலை 270 ரூபாய்க்கு கிடைத்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே தேயிலை கிலோ 600 ரூபாய்க்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக நான் எடுத்த தீர்மானங்களை அடுத்து வந்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்களினால் முன்னோக்கி நகர்த்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும். தேயிலை தொழில் துறையை மேம்படுத்த வர்த்தகம் வலுவடைய வேண்டும். உலக சந்தையில் நம் நாட்டின் தேயிலையின் நாமம் நிலைபெற வேண்டும். அதற்கு இந்த நிறுவனம் வலுவான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார். அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான டி. பி.ஹேரத், காதர் மஸ்தான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் புஷ்பிகா சமரகோன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் கண்டனம்!

நினைவுகூரல் உரிமையை மறுதலித்து 3 பெண்கள் உட்பட 4 தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், திருகோணமலை மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது நினைவு கூரல் என்பது ஒவ்வொரு மனிதனும் அடிப்படை உரிமையாகும். உலகளாவிய அனைத்து சர்வதேச சட்டங்களும் அதனை ஆழமாக வலியுறுத்துகின்றன. இந்நிலையில் திருகோணமலை சேனையூரில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் மிகுந்த வேதனையை ஒட்டுமொத்த தமிழ் மக்களிற்கும் ஏற்படுத்தி உள்ளது. சொல்லணாத்துயர் வலி சுமந்த இந்த நாட்களில் தங்கள் உறவுகளை நினைந்து பிரார்த்திப்பதற்கு அந்த நாட்களில் அவர்கள் பட்ட துயரத்தை கஞ்சி பருகி உயிரை பிடித்திருந்த அவலத்தை நீள நினைந்து தாமும் கஞ்சி காய்ச்சி குடிப்பதும் பரிமாறுவதும் குற்றமாக அரச இயந்திரத்தால் பார்க்கப்படுவது இலங்கையில் 15 ஆண்டுகளாகியும் பேரினவாத மனநிலையில் மாற்றம் வராத கொடூர முகத்தின் வெளிப்பாடாகும். இது தொடர்ந்தும் இனங்களிற்கு இடையேயான நல்லெண்ணத்தை ஆழமாக பாதிக்கும் செயற்பாடாகும். புனிதமான கோவிலில் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சிய பெண் பிள்ளைகள் உள்ளிட்டோரை அஜாரகமாக கைது செய்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பாரிய எதிர்ப்பை வெளிக்காட்டி அரசின் கோர முகத்தை துகிலுரித்து அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழ் தேசியம் பரப்பில் வாழும் மூத்ததலைவர் திருகோணமலையை தற்போதும் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.இரா. சம்பந்தன் அவர்களுடைய மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதும் பிணை கூட வழங்கப்படாமல் பெண்பிள்ளைகள் உள்ளிட்டோர் விளக்கமறியலில் இரு வாரம் வைக்கப்பட்டிருப்பதும் மனதை வருத்துகின்றது. உடனடியாக அனைத்து தமிழ்தேசிய சக்திகளும் இவர்களின் விடுதலைக்கு சகல எத்தனங்களை செய்ய வேண்டுவதுடன் அனைத்து முற்போக்கு மற்றும் உலகளாவிய சக்திகளதும் கவனத்தை ஈர்த்து அரசிற்கு அழுத்தத்தை பிரயோகித்து நினைவுகூரலுக்கான உரிமையை உறுதிப்படுத்துமாறும் வலிசுமந்த இந்த நாட்களில் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.

4 வருடங்களின் பின்னர் கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது. பெண்ணின் கள்ளக்காதலனே  அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது தெரியவந்தது. இதன்படி, நான்கு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. நிலுஷிகா சந்தமாலி  2020  ஜூன் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரின் தாயார் அந்த நேரத்தில் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார். தனது முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது இரண்டு குழந்தைகளுடன் “பதல சாந்த” என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியிலேயே சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் கள்ளக்காதலனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பதல சாந்த” என்ற நபரை கைது செய்தனர். இதன்போது, அவரை அடித்துக் கொன்று  உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது. குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது. அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை உடல் குளிந்து காணபபட்ட நிலையில், துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போது அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர். சடலம் நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் கண்டுள்ளனர். அப்போது, ​​அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்தது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு நகரை சுற்றி நோட்டமிட்ட உலங்கு வானூர்தி: அச்சத்தில் மக்கள்

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை மக்கள் நினைவு கூருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும். இந்நிலையில் இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ளது. இந்த வரும் என்றும் இல்லாதவாறு கடந்த இரு தினங்களாக உலங்கு வானூர்தி வானை சுற்றி நோட்டமிட்ட வண்ணம் இருக்கின்றது. இதனால் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஒரு வித அச்சத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவச்சாவடி அகற்றம்!!

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி நேற்றய தினம் அகற்றப்பட்டது. கடந்தகாலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியாமாவட்டத்தின் ஓமந்தை உட்படபல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. அவற்றில் பல சாவடிகள் அகற்றப்பட்டநிலையில் ஓமந்தை சோதனை சாவடி மாத்திரம் நான்குவருடங்களாக அகற்றப்படாமல் இருந்தது இந்நிலையில் நேற்றயதினம் அது அகற்றப்பட்டது.

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை!

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியதால், இரத்த உறைவு, பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, குறித்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் பாதகமான விளைவு ஏற்படாது என்றும், இலங்கையர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது..

மதுபான உரிமப் பத்திரம் வழங்கும் சூதாட்டம்!

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக மதுபான உரிமப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் முறையான திட்டமிடல் இல்லாமல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் கலவரங்களும்  இடையூறுகளும் ஏற்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுபான கடைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இது அரசியல் சூதாட்டமாகும். இது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 2022 ஜூலை முதல் தற்போது வரை மது விற்பனைக்கான உரிமப் பத்திரங்களைப் பெற கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான தகவல்களையும், இந்நிறுவனங்களின் பனிப்பாளர்கள் தொடர்பான தகவல்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கோரிக்கைகளின் பிரகாரம் உரிமப் பத்திரம் வழங்கப்பட்டவர்களது விபரங்கள் குறித்தும், இவற்றை வழங்குவதில் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவை எவை என்பது குறித்தும், மதுபான அனுமதிப் பத்திர அரசியல் சூதாட்டத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார். மதுபான உரிமம் வைத்திருக்கும் நபர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகளின் வகைகள் மற்றும் அந்த வரிகளை அறவிடும் நிறுவனங்கள், அந்த மதுபான நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டுக்கான வரியை சரியாகச் செலுத்தியுள்ளனவா? இது 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரிப்பா அல்லது குறைவா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த மதுபான நிறுவனங்கள் வரி செலுத்தாதிருந்தால், செலுத்த வேண்டியுள்ள வரி நிலுவைத் தொகை? இதில் யார் ஈடுபட்டுள்ளனர்? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் பாராளுமன்றத்தில்  கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.