மாணவனின் மரணம் – மௌலவிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!
மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று மன்றில் ஆஜராகி இருந்தனர். பின்னர் இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் மே மாதம் 27 திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
மின்னல் தாக்கம்-மழை 1 மணிக்குப் பின் முன்னெச்சரிக்கை தேவை!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.