பால்ட்டிமோரில் சரக்குக் கப்பல் மோதியதால் சேதமடைந்த பாலம் வெடி வைத்து தகர்ப்பு
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், பால்ட்டிமோரில் சரக்குக் கப்பல் மோதியதால் சேதமடைந்த Francis Scott Key பாலம் வெடிவைத்து முழுமையாக தகா்க்கப்பட்டது. இலங்கையை நோக்கி டாலி (Dali) என்ற சரக்குக் கப்பல் பால்டிமோா் நகரிலுள்ள படாஸ்ப்ஸ்கோ (Patapsco) ஆறு வழியாக கடந்த மாா்ச் மாதம் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதியது. இதன்போது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது. இந்த விபத்தின் போது, ஆற்றில் மூழ்கிய 8 பேரில் இருவர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டனர். பாலத்தின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கப்பலில் இருந்த இந்தியப் பணியாளா்கள் முன்கூட்டியே அதிகாரிகளை எச்சரித்ததால், பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. இதனையடுத்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த Francis Scott Key பாலத்தின் இடிபாடுகளை அகற்றி, எஞ்சிய பகுதிகளை வெடி வைத்து தகர்த்துள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழிற்கு விஜயம்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளார். இதன்போது சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் மற்றும் அமெரிக்கன் கோனர் அமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளேன் – என அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு..!
நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வெழுச்சி நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது, பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த “உப்புக் கடலை உரசிய நினைவுகள்” என்ற கவி நூல் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் குமுதினி படகில் வெளியிடப்பட்டது. இந்த நூலை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து, குமுதினி படகில் இருந்து கடலில் மலர் தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. அத்தோடு, உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்த நினைவேந்தலில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை S.பத்திநாதன், மத தலைவர்கள், படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 1985/05/15 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் இருந்து யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி குமுதினி படகில் மக்கள் பயணித்தபோது கடற்படையினரால் 07 மாத பெண் குழந்தை, பெண்கள் அடங்கலாக 36 பேர் நடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
ஆள் கடத்தலுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும்!
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார். ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், “ரஷ்ய-உக்ரைன் போரில் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. கடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு, எதிராக தராதரம் பாராமல், சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதை முதலில் வலியுறுத்த வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆள் கடத்தல் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிக சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆள் கடத்தலில் பலர் சிக்கி உள்ளனர். எனவே, இந்த ஏமாற்று முயற்சிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது. இந்த ஆள் கடத்தல் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0112 401 146 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோருகிறோம். அத்துடன், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி முற்றாக அங்கவீனமடைந்த அல்லது யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு 55 வயது வரையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.55 வயதின் பின்னர் அவர்களுக்கு சம்பளமோ அல்லது ஓய்வூதியமோ வழங்கப்படாதது குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் கவனம் செலுத்தியது.முப்படைகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த சலுகை சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். எனவே, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து அனுமதியைப் பெற எதிர்பார்க்கிறோம். அத்துடன், சட்டபூர்வமாக இராணுவத்தை விட்டு வெளியேறாமல் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.தற்போது பொது மன்னிப்புக்காக சுமார் 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 357 ஆக காணப்பட்டது. அத்துடன் சட்டவிரோதமான முறையில் சேவையிலிருந்து விலகி மீண்டும் பணிக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை 799 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இராணுவ வீரர்களுக்கான காணிகளை விரைவாக வழங்குவதற்கும் சலுகைகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்றை அமைத்துள்ளார். உறுமய வேலைத்திட்டத்துடன் ஒரே நேரத்தில் இடம்பெறும் இந்தப் பணிகளுக்கு காணி அமைச்சும் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது. இது இராணுவ வீரர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட தனித்துவமான நடவடிக்கை என்பதை குறிப்பிட வேண்டும்” என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்களால் வாள்வெட்டு – தந்தை மற்றும் மகனுக்கு ஏற்பட்ட துயரம்..!
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாள் வெட்டுத்தாக்குதலுக்கு 44 வயதுடைய தந்தையும், 22 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ளதாகவும், மகன் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையிலும், தந்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். முன் கோபத்தினால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன் வெடித்த போராட்டம் – பதாகைகளை அகற்றியதால் பதற்றம்..!
ஆர்ப்பாட்டமொன்று காரணமாக இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரத்தை மீள வழங்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இலஞ்சம், ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகவே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகளை அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதையடுத்தே, அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில முனசிங்கவிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.
யாழ்.போதனாவில் சிசுவை கைவிட்டு சென்ற சிறுமி சிக்கினார்..! வன்புணர்ந்த இளைஞனும் கைது
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற 15 வயதுடைய சிறுமி நேற்று (14) பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். அத்துடன் சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய 25 வயதான இளைஞளும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயரும் குறித்து சிறுமியுடன் உதவிக்கு நின்றுள்ளார். சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் சிறுமியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து, அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த சிறுமியையும் அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில், மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
O/L பரீட்சைக்கு தோற்றிய இரு மாணவிகள் மாயம்!
நேற்று (14) கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்கு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் கினிகத்தேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர். அதில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கினிகத்தேன, அக்ரஓயா மற்றும் நாவலப்பிட்டி நாகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவிகளும் நண்பிகள் என தெரியவந்துள்ளது. பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஒருசில மாணவர்கள் பார்த்துள்ளனர். காணாமல் போன மாணவிகளின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
CEB-யில் பல்வேறு ஊழல் மோசடிகள்!
இலங்கை மின்சார சபையின் சுமார் 130 பொறியியலாளர்கள் அண்மைக்காலமாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இலங்கை மின்சார சபையின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாலித பெரேரா, பொறியியலாளர்களுக்கான 330 வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார். “கடந்த வருடம் மற்றும் இம்மாதம முதல் 4 மாதங்களில் 130 பேர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஓய்வு பெற்றவர்களை பணியில் சேர்க்காததால், 330 பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஏ.எஸ்.மின் ஆலையை வாங்க முன்வந்தபோது, அதை செய்யாமல் அவசரகால கொள்முதல் ஊடாக பலகோடி ரூபாய் மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோப் குழுவில் தெரியவந்துள்ளது.
முன்னணி தமிழ் பாடசாலையொன்றின் பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கிடையே வெடித்த கலவரம்!
அனுராதபுரம் (Anuradhapura) நகரில் அமைந்துள்ள முன்னணி தமிழ்மொழி பாடசாலையொன்றின் பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் (13.05.2024) காலை நடைபெற்றுள்ளது. இந்த வருட க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்காக அனுராதபுரம் நகரில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அதே பாடசாலையில் பரீட்சை மண்டபம் வழங்கப்பட்டுள்ளது. இதே நேரம் கம்பிரிகஸ்வெவ பிரதேச பாடசாலையொன்றின் மாணவர்களும் அங்கு பரீட்சை எழுத வந்துள்ளனர். ஆரம்பம் முதல் இருதரப்புக்கும் இடையில் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த திங்கட்கிழமை காலை மாணவர்கள் இருதரப்பாக மோதிக்கொண்டுள்ளனர். இதன்போது பரீட்சை மண்டபத்திற்குள் அத்துமீறிய மாணவன் ஒருவரின் தாயார் ஏனைய மாணவர்களை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார். இதன் காரணமாக ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பரீட்சை முடிவுற்ற பின்னர் கம்பிரிகஸ்வெவ பிரதேச மாணவர்களை பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகளில் ஏற்றி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.