Search
Close this search box.

இன்று மத்திய மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது. கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் எதிர்வரும் 22ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இன்று (13) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் நிலவும் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த “அத தெரண” வினவிய போது தெரிவித்தார். எவ்வாறாயினும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்று தமது பிரச்சினைகளுக்கு திட்டவட்டமான தீர்வு வழங்கப்படாவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி அத்தியாவசிய சேவைகள் வாபஸ் பெறப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்க தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மண்ட் எச்சரித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்….

பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இன்று, இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்ளிட்ட பல முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைக்காக தங்கம் வென்ற காலிங்க!

11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டி ஜப்பானில்  நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய காலிங்க குமாரகே 45.92 வினாடிகளை எடுத்துள்ளார். இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட நதிஷா ராமநாயக்க நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் போட்டியை முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 54.02 வினாடிகள் ஆகும். இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை.

முச்சக்கர வண்டியை திருடிய சிறுவன் கைது

முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொடஉயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ கட்டுகுருந்த பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியின் சாரதியாக இருந்த சந்தேக நபரிடம் இருந்து 5,200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட  நீண்ட விசாரணையின் போது, ​​எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று வீடுகளில் திருடப்பட்டு குறைந்த விலைக்கு பலருக்கு விற்பனை செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் எண்டர்சன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் எண்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 2003 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான எண்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார். தனது முகநூல் கணக்கில் பிரியாவிடை குறிப்பில், தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20 ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் நன்றி என எண்டர்சன் கூறியுள்ளார். 41 வயதான எண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால், அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்க முடியும். ஜேம்ஸ் எண்டர்சன் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துப்படுத்தி 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19, இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது. ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி கிடைக்கும் அறிகுறி!

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், படிப்படியாக திட்டமிட்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். “தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வணிகத் தேவைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொருளாதாரத்திற்கு சில பங்களிப்பு செய்வதற்காக பொருளாதார செயல்முறை மற்றும் வணிக செயல்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கே தற்போது கட்டுப்பாடு உள்ளது. அடுத்த வருடத்தில் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம். எனினும் படிப்படியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். மேலும், நாட்டில் தற்போதுள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தவிர வேறு மாற்று வழிகள் இல்லை ன நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து  கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதற்கட்ட விசாரணையில் வாட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாள் கடந்த 9ம் திகதி நடைபெற்றதுடன், கால அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. எனினும், சந்தேகத்திற்குரிய இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வாட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும். அத்துடன் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சரும் ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தீவகத்தின் வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு மற்றும் காரைநகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய கட்சியின் பொறுப்பாளர்கள் வட்டார செயலாளர்கள் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு நேற்று (10) வேலணை துறையூர் முருகன் ஆலைய பொது மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் வரலாறும் உண்டு. 90ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை முன்னெடுத்து வருகின்றேன்”. அதன் ஓர் அங்கமே நாம் இந்த தீவக மண்ணில் மக்களின் கோரிக்கையுடன் கால் பதித்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்த செயற்பாடும் அமையும். இதே நேரம் நீண்ட காலமாக ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதியாக நான் இருக்கின்றேன். இதற்கு இந்த தீவக மக்களின் பங்களிப்பு அதிகமானதாக இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில், எம்மால் வளர்க்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட முடிந்தது. அதேபோன்று எமது மக்களின் வாழ்வாதார எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த முடிகின்றது. அதேபோன்று, எதிர்காலத்திலும் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறையில் சாத்தியமானதாக இருக்கும். அந்தவகையில் எமது மக்கள் போதிய அரசியல் பலத்தினை எமக்கு வழங்குவார்களாயின், எமது மக்களின் அபிவிருத்திதை மட்டுமல்லாது அரசியல் அபிலாசைகளையும் எம்மால் பெற்றுத்தர முடியும் என்ற யதார்த்தத்தையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் மக்களுக்கு சரியான வழியைக் காட்டுவதாகவும் மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாகவும் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன் ஏனைய கட்சிகள் போன்று இழுபட்டு செல்லும் வகையில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகள் இருக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

செயற்கை நுண்ணறிவு – புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சி ஆரம்பிக்கப்படும்!

  புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்த போதிலும், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய சட்டங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்தகட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மொரட்டுவ பௌத்த மன்ற மண்டபத்தில்  நடைபெற்ற மொரட்டுவ இலங்கை பௌத்த சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 1924 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி ஆர்தர் வி.தியெஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மொரட்டுவ இலங்கை பௌத்த சங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மொரட்டுவ பௌத்த மண்டபத்திற்கு 1925 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் 1929 ஜூன் 24 ஆம் திகதி மொரட்டுவ பௌத்தர்களின் பௌத்த தலைமையகமாக அப்போதைய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஜே. ஸ்டென்லி இதனைத் திறந்து வைத்தார். மொரட்டு மகா வித்தியாலயத்திற்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நடப்பட்டது. நூறு வருடங்களைப் பூர்த்தி செய்யும் மொரட்டுவ பௌத்த மண்டபத்தின் திருத்தப் பணிகள் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் மொரட்டுவ பௌத்த விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். மொரட்டுவ பௌத்த சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வளாகத்தில் சந்தன மரச்செடியை நடும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். மொரட்டுவ பௌத்த சங்கத்தின் உப தலைவர் தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நூற்றாண்டு நினைவுப் பதிப்பை வழங்கி வைத்தார். மொரட்டுவை பௌத்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் ரஞ்சித் கமநாயக்க, உப தலைவர்களான பிரதீப் ஸ்ரீயந்த பெர்னாண்டோ, தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, காமினி பெரேரா, பிரதேச செயலாளர் கீர்த்தி பெரேரா ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசை வழங்கி வைத்தனர். அதன்பின்னர் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் மொரட்டுவை முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. மொரட்டுவ மகா வித்தியாலயத்தின் டபிள்யூ. ஏ. இமாஷ சாவிந்திர ஆஷிங்ஷன என்ற மாணவனால் வரையப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படத்துடன் கூடிய மொரட்டு பௌத்த மண்டபத்தின் படமும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது: ”இன்று முழு உலகமும் காலநிலை மாற்றத்தால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. இந்நாட்களில் நாம் எதிர்கொள்ளும் கடுமையான சூரிய வெப்பம் நாம் இதுவரை சந்திக்காத ஒரு சூழ்நிலை. இந்தக் காலநிலை வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டிய கடினமான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இத்துடன், கடும் நீர் பிரச்சினையையும் சந்திக்க வேண்டியுள்ளது. பௌத்த தர்மத்தின்படி இந்த சிக்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் முக்கிய பிரச்சினையாக காலநிலை மாற்றப் பிரச்சினை மாறும். புத்தரின் போதனைகளின்படி பார்த்தால் நாகரீகத்தின் பேராசையின் காரணமாகவே நாம் இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேகமாக முன்னேற விரும்பினர். வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி மனித சமுதாயம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்துள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதில் நாம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். மேலும் உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945 இல் அணுகுண்டு வெடித்தபோது, இனி தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பாடசாலையில் படிக்கும் போது கணனி, கையடக்கத்தொலைபேசி எதுவும் இருக்கவில்லை. ஆனால் தற்போது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கை நுண்ணறிவு வரை சென்றுள்ளோம். இப்போது இருப்பது செயற்கை நுண்ணறிவின் ஆரம்பமாகும். அடுத்த இரண்டு தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவு எங்கே செல்லும் என்ற கேள்வியை நாம் எதிர்கொள்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கும் புத்த மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நம் மனதால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே புத்தரின் போதனைகள் சுட்டிக்காட்டுகிறது. மனதைக் கட்டுப்படுத்தினால் முன்னேறலாம். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. மனதைக் கட்டுப்படுத்துவது மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் புத்தரின் போதனைகள் மனித குலத்திற்காக செய்யப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தினால் பேராசையை ஒழிக்க முடியும். இந்த மனித மனதிற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தற்போது வந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு தகவல்களை இணைக்க முடியும். செயற்கை நுண்ணறிவு அதற்கேற்ப செயல்படுகிறது. அப்படியானால், புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு வேறு மதத்தைப் போதிக்குமானால் அது பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, நாம் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர காலத்தில் பௌத்தம் இலங்கைக்கு வந்ததுடன், அதன் பின்னர் பௌத்தம் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்தது. இந்து மதம், மஹாயான தர்மம் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் அதில் தாக்கம் செலுத்தியுள்ளன. இக்காலத்தில் செயற்கை நுண்ணறிவும் அதில் இணைகிறது. அப்படியானால் செயற்கை நுண்ணறிவு வேறு ஒரு தர்மத்தைப் போதிக்குமா என்று சிந்திக்க வேண்டும். மக்கள் தங்கள் கையில் இருக்கும் கைபேசியுடன் தர்மத்தை இணைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். இது பௌத்தம் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தவும் புதிய சட்டவிதிகளை நாம் கொண்டு வருகிறோம். தொழில்நுட்ப மேம்பாட்டு சட்ட வரைவை தொழில்நுட்ப அமைச்சு தயாரித்துள்ளதுடன், அதன் கீழ் செயற்கை நுண்ணறிவு மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. நாமும் அதையே செய்ய வேண்டும். மேலும், புத்தரின் போதனைக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சியைத் தொடங்க அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதை இந்த ஆண்டு நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டாலும், செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஆண்டுக்கு அது ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப புதிய சட்டங்களை முன்வைத்து அந்த செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார். மொரட்டுவெல்ல தம்ம நிகேதன சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவர் அமரபுர கல்யாணிவங்சிக ஸ்ரீ சத்தம்ம யுக்திக நிகாயவின் மகாநாயக்க வண, மாகால்லே நாகித தேரர், பாணந்துறை சங்க சபையின் நீதித்துறை சங்க நாயக்க கொரலவெல்ல வாழுகாராம மகா விஹாராதிபதி வண, நெகின்னே ஆரியஞான தேரர், மொரட்டுவ ஒழுக்காற்று அதிகார சபையின் தலைவர், மொரட்டுவ, இந்திபெத்த ஸ்ரீ சுதர்ம ரத்னாராம விகாராதிபதி வண, கம்பளை சுகுணதஜ தேரர், மொரட்டுவ ஹொரேதுடுவ புரான சங்கிகாரமயவின் விகாராதிபதி, அங்குலானே ஞானவிமல பௌத்த நிலையத்தின் தலைவர் வண, உடுகம விமலகித்தி தேரர் உட்பட மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள், மொரட்டுவ இலங்கை பௌத்த சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.