யாழ்.சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபரிடமிருந்து 3 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கையில் குவியும் அமெரிக்க டொலர்..!
புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி முறையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 543 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 11.4 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த நாட்டிற்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்ட தொகை 19.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
பொருளாதார பாதிப்பால் துறவறத்தை கைவிடும் பௌத்த துறவிகள்
வருடாந்தம் 2,000 பௌத்த துறவிகள் தமது துறவறத்தை கைவிட்டு வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியும் இதற்கு ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னணி பௌத்த துறவிகள் மத்தியில் இந்த தகவலை வெளியிட்ட அவர், பொருளாதாரத்தை புத்துயிர் பெற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக பௌத்த மதகுருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக இலங்கையின் படையினர் ரஸ்யா மற்றும் உக்ரெய்ன் ஆகிய நாடுகளுக்கு கூலிப்படையினராக செல்வதற்கும் பொருளாதார நெருக்கடியே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நெருக்கடி நிலையிலும் எம்.பி.க்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகை..!
தாங்க முடியாத வாழ்க்கைச் செலவில் இலங்கையர்கள் தவிக்கும் வேளையில் நிவாரணமாக வாகனம் கொண்டு வருவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்றின் கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுப்பணித்துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள நிர்வாக தர அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை போன்று தங்களுக்கும் வாகன உரிமம் வழங்க வேண்டும் என்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சாதகமாக பரிசீலித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாவனைக்காக வரியில்லா வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்தவுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அதனை நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் – கல்வி அமைச்சு எடுத்த நடவடிக்கை
சப்ரகமுவ மாகாணத்தில் 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் சாமர பமுனு ஆரச்சி குறிப்பிட்டார். இதற்கிணங்க முதற்கட்டமாக, 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இதற்கிணங்க ஆரம்பப்பிரிவுக்கு 877 ஆசிரியர்களும் கனிஷ்டப்பிரிவுக்கு 159 ஆசிரியர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் 75 இலட்சம் வாக்குகளை சஜித் பெறுவார்…! ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை…!
ஜனாதிபதி ரணிலுடன் இணைவதற்கு எமது கட்சிக்கு எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில், சஜித் இணைய வேண்டும் எனக் கட்சியில் உள்ள ஓரிருவரே பரிந்துரைக்கின்றனர். ஆனால், அவருடன் இணைவதற்கு எமது கட்சிக்கு எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது. கட்சியில் உள்ள 95 சதவீதமான உறுப்பினர்கள் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். சஜித் பிரேமதாசவும் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளார். இரு தரப்பையும் இணைப்பதற்கு வெளிநாடொன்று முற்படுகின்றது என்ற கருத்தையும் நான் ஏற்கவில்லை. எமது கட்சியை வெளிநாடு வழிநடத்த முடியாது. சஜித் ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற கோரிக்கை தொடர்பில் நாம் எந்தவொரு தரப்புடனும் கலந்துரையாடவில்லை. அதற்கான தேவைப்பாடும் கிடையாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் 75 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார் எனவும் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டி – 14 இளைஞர்கள் அதிரடிக் கைது
மஹரகம – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகம பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர். இது ஒரு பந்தயப் போட்டி என்றும், இணையத்தில் வெளியான செயலி மூலம் அவர்கள் இதில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண் வேடமணிந்த இளைஞர் ஒருவரும் வழங்கத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. போட்டியில் பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
க.பொ.த பரீட்சை நிலையத்தின் பெண் மேற்பார்வையாளர் கைது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வாட்ஸ்அப் மூலம் வெளியிட்ட பரீட்சை நிலையத்தின் பெண் மேற்பார்வையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பரீட்சை இடம்பெறும் போது ஆங்கில வினாத்தாளை புகைப்படம் எடுத்து ஹசலக்க பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பி வைத்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதாகியுள்ளார். அந்த வினாத்தாளினை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் வகுப்பு ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
நிட்டம்புவ – திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள மரண இல்லம் உள்ள வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் விசாரணைகளின் போது மின்விளக்குகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வயர் வீதியில் இருந்த உயர் மின் கம்பியில் மோதியதில் குறித்த நபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் திஹாரியா கலகெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஏனைய நால்வரும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை ஒத்திவைப்பு
யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் நாளை(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்திற்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானமை மற்றும் தவிர்க்கமுடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவே இவ்வாறு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் அல்லது கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆந் திகதி முதல் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, நாளை(13) முதல் இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.