Search
Close this search box.

முல்லைத்தீவில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவு கூரப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக  முல்லைத்தீவில் இருவேறு இடங்களில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதியில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

பாடசாலை மாணவிக்கு பிறந்த குழந்தை!

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர்  தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, வடமராட்சி துன்னாலை பகுதியை அவர்கள் விலாசமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரசவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவிற்கு சவால் விடும் சீன போர்க்கப்பல்: பசுபிக் கடற்பரப்பில் புதிய நகர்வு

இந்தியாவிற்கு சவால் விடும் சீன போர்க்கப்பல்: பசுபிக் கடற்பரப்பில் புதிய நகர்வு பிரமாண்ட போர் கப்பலை சீனா(China) தயாரித்து சமீபத்தில் அறிமுகம் செய்தமையானது இந்தியாவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. 80 ஆயிரம் தொன் நிறையுள்ள பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாக இது அமைந்திருந்துள்ளது. இதற்கு ஃபியூஜியன் என சீன தரப்பு பெயரிட்டுள்ளது. மிக நவீன தொழில்நுட்பத்தில் இந்த கப்பலை சீனா தயாரித்துள்ளதால், அந்நாட்டு கடற்படையில் இதன் வரவு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது. குறித்த கப்பல் சீன கடற்படையில் இணைந்தபின், இந்திய – பசிபிக் கடல் பகுதியில் அதன் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டமானது இந்திய கடற்படைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்திய கடற்படையில் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்ஸ் விக்ராந்த் ஆகிய இரு விமான தாங்கி போர்க்கப்பல்கள் மாத்திரமே கொண்டுள்ளது. தற்போது அமெரிக்கா, சீனா, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ரஷ்ய கடற்படைகளில் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் காணப்படுகின்றன.

எல்லை மீறிய வெப்பநிலை: 08 வருடங்களின் பின்னர் வரலாறு காணாத அதிகரிப்பு

எல்லை மீறிய வெப்பநிலை: 08 வருடங்களின் பின்னர் வரலாறு காணாத அதிகரிப்பு 08 வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு நாட்டின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார தெரிவித்துள்ளார். பல்வேறு காலநிலை காரணங்களால் இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் சராசரியாக 39 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் கடந்த 2016 ஆம் ஆண்டுதான் இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது. இந்த நாட்டில் சராசரி வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் பேராசிரியர் திலக் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதன்படி, இதனை சமாளிக்க மக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் கொடிய நோய்!

நாட்டில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் கொடிய நோய்! நாட்டில் இளைஞர்களிடையே டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இளைஞர்கள் இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பூஞ்சை தொற்றினால் இந்த தோல்நோய் பரவுவதாகவும் தோல்நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார். தகுதி வாய்ந்த வைத்தியர்களிடம் இதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு போதைமருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது

வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு போதைமருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது வவுனியா நகரை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்க்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிசார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரும் வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.