யாழில் பாரிய பணமோசடி: மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண் கைது
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தவகையில், யாழ். மானிப்பாய் (Manipay) பகுதியை சேர்ந்த குறித்த பெண் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை, அதனை கொடுக்க மறுத்ததால், இளைஞன் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதனடிப்படையில், காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட பூசாரி உட்பட 5 பேர் கைது!
ஓமந்தை, விளாத்திக்குளம் பகுதியில் வைத்து பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விளாத்திக்குளம் பகுதியில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிகையில் ஈடுபட்ட போது புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பகுதியிலிருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின் தவசிகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 5 பேரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்பு.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் சனிக்கிழமை (29) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் வைத்தியசாலையில் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையிலிருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கிச் சென்றுள்ளார். இந்நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் மரணமடைந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு செவன்ற பொலிசார் அச் சடலத்தை மீட்டனர். வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தர். வீதியால் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்தும் வவுனியா பொலிசார் மற்றும் போக்குவரத்து பொலிசார் ஆகியோர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய இளைஞன் கயிறு இறுகி மரணம்: வவுனியாவில் துயரம்
வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்குப் பயம் காட்டக் கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவரைக் காணவில்லை என மாமடுப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த இளைஞன் ஞாயி்ற்றுக்கிழமை (30) தூக்கிட்டு மரணித்த நிலையில் நந்திமித்திரகம பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டார். தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காகக் கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் குறித்த கயிறு இறுகி மரணித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாமடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் 25 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று (1) திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையிலேயே 25 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான 25 இந்திய மீனவர்களும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழில் அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளர் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்பு…! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இரவு எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றையதினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்த நபர், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளரான 43 வயதுடைய சரவணபவானந்தன் சிவகுமார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் தீக்காயத்திற்க்கு உள்ளானது தொடர்பான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறீதரன் எம்.பியின் குடும்பத்தை அச்சுறுத்திய மர்ம நபர்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வசிக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் இன்றையதினம் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள் அணிந்தவாறு வருகைதந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதை, கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று காலை யாழ் இந்துக்கல்லூரியை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் இவ்வாறான அச்சுறுத்தும் வகையிலான குழுக்களின் நடமாட்டம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் துணிகரம்…! வீதியால் சென்ற பெண்களின் சங்கிலிகள் அறுப்பு…!
வவுனியாவில் (Vavuniya) வீதியால் சென்ற பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். வவுனியா, கோயில்குளம் பகுதியில் இன்று குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒரு பவுண் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, சிதம்பரபுரம் (Chidambarapuram) பகுதியிலும் பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். எனவே பொது மக்கள் நகைகளுடன் வீதியில் செல்லும் போது அவதானமாகவும், பின் தொடர்பவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிகமான விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்.பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது!
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழில். வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார் , மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு என்பவற்றை மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை , வாகனங்களுக்கு தீ வைத்தமை , நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்றிற்கு பெற்றோல் குண்டு வீசியமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் , குறித்த சந்தேகநபரின் வன்முறை கும்பலை சேர்ந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக , வீடு உடைப்புக்கள் , வாகனங்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.