Search
Close this search box.

யாழ்.போதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கார் – வெளியான தகவல்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக மறித்தவாறான நிலையில் நபர் ஒருவர் காரினை நிறுத்தி சென்றுள்ளார். அதனால் மருந்து களஞ்சியத்தில் இருந்து வைத்தியசாலை வாகனம் வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் , வைத்தியசாலை ஊழியர்கள் , காரின் சாரதியை தேடி உள்ளனர். நீண்ட நேரமாகியும் காரின் சாரதி அவ்விடத்திற்கு வராதமையால் , வைத்தியசாலை பணிப்பாளர் ஊடாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து , விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அயலில் உள்ள கடைகளில் விசாரித்த போதிலும் காரின் சாரதியை கண்டறிய முடியாததால் , காரினை அவ்விடத்தில் இருந்து கனரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு , பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காரின் இலக்க தகட்டின் ஊடாக அதன் உரிமையாளரை கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்…!

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று(27) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராக கடமையாற்றிய இளைஞன் ஒருவர் மன அழுத்தம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த இளைஞன் வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை நோயாளர் விடுதியில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையஇளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு பேரணி

வவுனியா (Vavuniya) பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று (27) கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை பூராகவும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 57 வது நாளாகவும் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், நேற்றைய தினம் (26) கொழும்பில் (Colombo) பாடசாலை ஆசிரியர், அதிபர்களது போராட்டத் தளத்தில் அவர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்தும், தமது நியாயமான கோரிக்கையாக காணப்படுகின்ற சம்பள உயர்வை உடனடியாக தர வேண்டும் எனக் கூறியும் இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா பூங்கா வீதியில் உள்ள வவுனியா பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள்பீட கட்டிட தொகுதியிலிருந்து ஆரம்பித்த பேரணி நகர் வழியாக பழைய பேருந்து நிலையத்தை சென்றடைந்து நிறைவடைந்திருந்தது.

யாழில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்…!

யாழ்ப்பாணம் உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர்  யாழ் கோப்பாய் இராச பாதையிலும்  மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வவுனியாவில் மக்கள் குடிமனைக்குள் நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் நோர்வே பெண்: கிராம மக்கள் எதிர்ப்பு

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மக்கள் குடிமனைக்குள் நாய்களுக்கான காப்பகம் ஒன்றினை பெண் ஒருவர் அமைத்து வரும் நிலையில் கிராம மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த காப்பகத்திற்கு முன்னால் இன்று (27.06) காலை திரண்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் பொது மக்களுடன் கலந்துரையாடி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தனர். நோர்வே நாட்டில் இருந்து வந்துள்ள பெண் ஒருவர் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மக்கள் குடிமனைகளின் மத்தியில் உள்ள வெற்று காணி ஒன்றில் நாய்களுக்கான காப்பகம் ஒன்றினை அமைத்து வருவதுடன், தற்போது கட்டக்காலியாக வீதிகளில் திரிந்த 42 நாய்களை அக் காப்பகத்தில் தங்க வைத்துள்ளார். இதனையடுத்து, குறித்த காப்பகத்தினால் அப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குடிமனைக்குள் நாய்கள் காப்பகத்தை அமைக்க யார் அனுமதி கொடுத்தது எனவும் தெரிவித்து அக் காப்பகத்தை மக்கள் இல்லாத பகுதியில் அமைக்குமாறு கோரி அக் கிராம மக்கள் காப்பகம் முன் ஒன்று கூடினர். அப்பகுதிக்கு வருகை தந்த வவுனியா பொலிசார் மற்றும் மகறம்பைக்குளம் பொலிசார் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன், காப்பகத்தையும் பார்வையிட்டனர். அத்துடன் காப்பக உரிமையாளரிடம் காப்பகம் அமைப்பதற்கான அனுமதிகளை கேட்டிருந்தனர். எனினும் காப்பக உரிமையாளர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் சுகாதார பிரிவினர், கால்நடை வைத்தியர் ஆகியோரின் அனுமதியை பெறவில்லை என்பது இதன்போது தெரிவய வந்தது. இதனையடுத்து புதிதாக நாய்களை கொண்டு வருவதை நிறுத்துமாறு அறிவுறுத்திய பொலிசார், முறையான அனுமதி பெற்ற பின் நடத்துமாறு உரிமையாளருக்கு தெரிவித்தனர். பொதுமக்கள் நாய் காப்பகத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ததுடன், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்கும் முறைப்பாடு செய்து கடிதம் வழங்கியுள்ளனர்

செட்டிக்குளம் வைத்தியசாலையின் அசண்டையீனம்? பறிபோனது நோயாளியின் உயிர்…!

வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் வைத்தியசாலை அசமந்த போக்கினால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம்(26) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) அன்று நெஞ்சுவலி காரணமாக செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையினர் நோயாளியை உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அறிவித்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் இதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நோயாளியை வவுனியா வைத்தியசாலைக்கு  மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். நோயாளர் காவு வண்டி புறப்பட்டு ஏறக்குறைய 15 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில் மேலதிகமாக மேலும் ஒருவரை ஏற்றிச்செல்ல இருப்பதாக கூறி குறித்த நோயாளர் காவு வண்டியை மீண்டும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியசாலை தரப்பினர் திருப்பி அழைத்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், மீள வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டியில் இருந்த நோயாளி செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையிலே உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் அதேவேளை, மேலதிக சிகிச்சை வழங்க தாமதமானதாலேயே உயிரிழந்துள்ளார் என உறவினர்களும் அப்பிரதேச மக்களும் வைத்தியசாலை மீது குற்றம் சாட்டுகின்றனர் மேலும், இறந்தவரின் உடல் இன்றைய தினம் (27) வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மரண விசாரனை அதிகாரியின் விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவத்தால் செட்டிகுளம் வைத்தியசாலை பகுதி சற்று பதற்றமான நிலை காணப்படுவதுடன் உயிரிழந்தவரின் உறவினர்கள், கிராம மக்கள் வைத்தியசாலைக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் சிக்கிய கடத்தல் பொருட்கள்

மன்னார் சௌத்பார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 46 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் சவுத்பார் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான கஜபா அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிறிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதி ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.அங்கு தொண்ணூற்றெட்டு (98) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 46 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டதாக இராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் பால்புதுமையினர் நடைபவனி

பால்புதுமையினர் தங்களது உரிமைகளை வலியுறுத்தி, தங்களையும் சக மனிதர்களாக எண்ண வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து நேற்று புதன்கிழமை (26) வவுனியாவில் நடைபவனியொன்றை முன்னெடுத்தனர். இந்த நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சென்றடைந்ததோடு நிறைவு பெற்றது. ‘யாழ். சங்கம்’ என்ற பால்புதுமையினத்தவர்களுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நடைபவனியில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். இந்த நடைபவனியில் தமது உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகள் கொண்ட மனிதப் பிறப்புக்களே என்பது போன்ற கருத்துக்கள் பால்புதுமையினர் இதன்போது முன்வைத்திருந்தனர்.  

கிளிநொச்சியில் கும்பலொன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நபர்!

கிளிநொச்சியில் 24 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த 2ம் திகதி கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், தன்னை  அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது  தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்த அவர், குறித்த கும்பல் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த நபர் தப்பி சென்ற வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், அங்கு  சாட்சியங்களைப்  பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்  குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் பரபரப்பு; கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்று செவ்வாய்க்கிழமை (25) இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். அதனை அவதானித்த கடை ஊழியர்கள் அப்பகுதியில் நின்றவர்கள் பெற்றோல் குண்டை வீசியவர்களை துரத்தி சென்ற போதிலும், அவர்கள் தப்பியோடி விட்டனர். சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.