நியமனக் கடிதங்களை வழங்கி வைத்த வடக்கு மாகாண ஆளுநர்!
வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (03) வழங்கிவைத்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக சி.சுஜீவாவும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக கு.காஞ்சனாவும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) அ.யோ.எழிலரசியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இரு வெதுப்பகங்களிற்கு 160,000/= தண்டம்!
கடந்தமாதம் 12.06.2024 ஆம் திகதி நல்லூர் சகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டன. குறித்த வெதுப்பகங்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்குகள் கடந்த 24.06.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டன. வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு பேக்கரியை மூடி சீல்வைக்குமாறும், மற்றைய பேக்கரியை விரைந்து திருத்தி அமைக்குமாறும் கட்டளை வழங்கினார். குறித்த பேக்கரி பா. சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டது. அத்துடன் வழக்கினை நேற்று (03) ஒத்திவைத்தார். இன்று வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ. லெனின்குமார் இரு பேக்கரி உரிமையாளர்களிற்கும் தலா 80,000/= தண்டம் அறவிட்டதுடன், திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் பேக்கரிகளை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கினார்.
யாழில் சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில் பொலிஸார் விசேட சோதனை
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில், பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளார் என்று தரவுகள் வெளிக்காட்டியுள்ளன. அந்தப் பெண் அதுவரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து , மேற்படி தம்பதியர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இதையடுத்து, இது தொடர்பில் குறித்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் அனுமதி பெற்றதையடுத்தே இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசம் – திருகோணமலை இளைஞர்கள் அதிரடியாக கைது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு இளைஞர்கள் குழு ஒன்று அமைதியின்மையை ஏற்படுத்துவதாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலின் பிரகாரம் பஸ் நிலையத்திற்கு விரைந்த பொலிஸ் குழு, அங்கு அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர். அதன் போது, இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, நான்கு இளைஞர்களும் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை, கடமைக்கு இடையூறு விளைத்தமை, பொது இடத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் ரூபாவிற்கு ஆள்மாறாட்டம்: இரு பெண்களுக்கு விளக்கமறியல்
வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு சொந்தமான காணி ஒன்றினை ஆள் மாறாட்டம் செய்து உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதான இரு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார். இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம் காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார். காணி உரிம மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து, அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ஆள்மாறாட்டம் செய்து, சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்த போது தான் நோய்வாய்ப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மாணவனின் தலையில் தாக்கிய ஆசிரியர்
பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்வதற்கு மாணவன் மறுப்புத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த சம்பவமானது முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தலையில் தாக்கியுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவன் பாடசாலை செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்பட்ட ஆசிரியருடன் பெற்றோர் சந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதிபர் குறித்த ஆசிரியருடன் தாம் பேசுவதாக தெரிவித்ததாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியர் தம்முடன் கலந்துரையாடாத நிலையில் விடயம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்திய நிலையில் காவல்துறையினர் நேற்றைய தினம் குறித்த மாணவனையும் பெற்றோரையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளனர். இதன் போது குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயம்.
முல்லைத்தீவு(Mullaitivu) – மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று(02.07.2024) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வாள்களுடன் இரண்டு வீடுகளுக்கு சென்ற குழுவினர் குறித்த வீட்டில் இருந்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு வாள் வெட்டில் படுகாயமடைந்த இருவரும் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார்-மடுமாதா நினைவுத் தபால் முத்திரை வெளியீடு
மன்னார், மடுமாதா திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவுத் தபால் முத்திரை நேற்று வெளியிடப்பட்டது. மன்னார், மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் மடு அன்னை அரசியாக முடி சூட்டப் பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை நேற்று மடு திருத்தலத்தில் வெளியிடப்பட்டது. மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ். என்ரனி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தபால் மா அதிபர் ரூவன் சத்குமாரவினால் மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட இந்த விசேட முத்திரை, மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தபால் திணைக்கள அதிகாரிகள், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பிந்து மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
யாழில் உணவகத்திற்கு சீல் ; 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிப்பு !
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று, உணவகத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது, பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த முறை அறிவுறுத்தப்பட்ட அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து திருத்த வேலைகளை செய்யாதமை, தொடர்ந்து சுகாதார சீர்கெட்டுடன் உணவகத்தினை நடாத்தி சென்றமை உள்ளிட்டவற்றை கண்டறிந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளருக்கு எதிராக யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, திருத்த வேலைகள் முடிவடையும் வரையில் உணவகத்தை சீல் வைத்து மூட உத்தரவிட்ட மன்று, 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது.
பாடசாலை மற்றும் கோவிலுக்கு அருகில் மதுபானசாலை. எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்த மக்கள்..
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இயக்கச்சி சந்தியில் புதிதாக மதுபான சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதையடுத்து கிராம மக்கள் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (02)காலை 10.00 மணியளவில் இயக்கச்சி சந்தி ஏ09 வீதி அருகே இடம்பெற்றது. குறித்த மதுபான சாலை அமைய இருக்கும் இடத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் பாடசாலை அமைந்துள்ளதாகவும், எதிரில் கோவில், இயக்கச்சி பொதுச்சந்தை என அதிகளவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுகின்ற இடமாகவுள்ளதாகவும், குறித்த இடத்தில் பேரூந்து தரிப்பிடம் ஒன்று உள்ளதெனவும் அதில் தூர பிரதேசங்களில் இருந்து வரும் பாடசாலை மாணவர்கள் பேரூந்துக்காக காத்திருக்கும் இடமாக உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கினால் பல குற்றச்செயல்கள் இடம்பெறும் எனவும் பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பும் கிடைக்கபெறாது எனவும் தெரிவித்தனர். இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள அனைத்து கடைகளும் போராட்டத்தின் போது கதவடைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். போராட்டத்தின் முடிவில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் பளை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பளை பிரதேச அமைப்பாளரிடமும் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.