5 ஆயிரம் தந்தால் பரீட்சை பெறுபேறு… மாணவனிடம் டீல் போட்ட கிளிநொச்சி பாடசாலை நிர்வாகம்!
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் தனது கல்வி பொதுத் தர உயர்தர பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார். இன் நிலையில் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்காலச் சந்தாவாக ரூபா 5,000 செலுத்தி உறுப்பினரால் மட்டுமே பரிட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாள் காயத்திரியை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவ் மாணவன் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மரக்காளை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். ஓட்டுமடம் பகுதியில் உள்ள மரக்காளை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறி நுழைந்த கும்பலே வன்முறையில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த உரிமையாளரின் மகன், யாழில் இயங்கிய வன்முறை கும்பலுடன் முன்னர் சேர்ந்து இயங்கிய நபர் எனவும், தற்போது பிரான்ஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்புடன் வைத்தியர் அர்ச்சுனா வெளியேறினார்: பேச்சுவார்த்தை நடத்த கொழும்பு வருமாறு அழைப்பு
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட பேச்சுவார்த்தை ஒன்றுக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியில் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர் விடுதியில் மின்சாரம், குடிநீர் துண்டிப்பு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தங்கியிருக்கும் வைத்தியர் விடுதியில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வைத்தியர் அர்ச்சுனா தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வைத்தியசாலையில் நடந்த ஊழல் மோசடிகளை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியுள்ளதுடன், அவரை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவரை வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை போராட்டகாரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, தான் தங்கியிருக்கும் வைத்தியர் விடுதியில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் டோணி ரசிகர் மன்ற ஏற்பாட்டில் இரத்ததானம்…
இந்திய அணியின் முன்னால் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனியின் பிறந்ததினம் யாழ்ப்பாணம் டோணி ரசிகர் மன்ற ஏற்பாட்டில் வழமை போன்று சிறப்பாக நடைபெற்றது. யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கியதுடன் கைதடி நவீல்ட் சிறுவர் இல்லத்தில் மதிய உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். டோணி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் இவர்களின் சமுக பணிகள் 8 வருடங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப் படுகின்றது.
யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம் – வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக குவியும் மக்கள்..
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது. அத்துடன், கடையடைப்பு கண்டன போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய முயற்சிப்பதாக நேற்றிரவு வெளியான தகவலை அடுத்து, பொதுமக்கள் வைத்தியசாலை வளாகத்தில் கூடிய நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில், அதிகாலை முதல் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஏ 9 வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவ்விடத்தில் பதற்ற நிலை தொடர்வதாக தெரியவருகின்றது.
ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை!
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை என யாழ்ப்பாண பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 5 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இதன்போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் வினவப்பட்டது. ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்திக்குழுவினரால் கேட்கப்பட்டது. இதற்கு தமிழ் பேசும் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் எவ்வித பொறுப்புமின்றி எமக்கு அவர்களைத் தெரியும் ஆனால் கைது செய்ய முடியவில்லை என பொறுப்பற்ற விதத்தில் சாதாரணமாக பதில் கூறினார். இப்பதிலினால் கோபமடைந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், பொலிஸார் எவ்வாறு இப்படி பொறுப்பற்ற விதத்தில் பதில் கூற முடியும் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாது அவர்கள் இங்கேதான் இருக்க வேண்டும் அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை உங்களுக்கு கீழே தான் சைபர் கிரைம் இயங்குகிறது. அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும், அல்லது குறித்த சந்தேக நபர் வசிக்கும் கிராம செயலாளரிடம் அவரது விவரங்களை திரட்டி அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும். இவ்வாறு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஏன் பொலிஸாரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை. ‘ஆப்ரேஷன் சக்சஸ் பேசன்ட் டெத்’ என்று கூறுவது போல் உள்ளது உங்களது பதில் என குறிப்பிட்டார். பொலிஸாரின் அசட்டைத் தனமான பதிலைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பொலிஸார் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு நாங்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அப்படியாயின் பொலிஸ் திணைக்களம் ஏன்? இயங்குகிறது. வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது. சம்பவம் இடம்பெற்று இவ்வளவு நாள்கள் தாண்டியும் ஏன் எவரையும் கைது செய்யவில்லை. ஆட்களைத் தெரியும் கைது செய்ய முடியாது என்று கூறுவது பொலிஸ் தரப்பிலே சந்தேகம் ஏற்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.
சாவகச்சேரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொது மக்கள்!
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண நேற்று இரவு குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது, அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார். இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம், சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், இரவோடு இரவாக வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாவச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகாரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராகவும், அவருடைய தாபன விதி கோவைகளுக்கு எதிரான நடைமுறைகளுக்கு எதிராகவும், அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை (08) 8.00 மணியிலிருந்து நாளை காலை 8:00 மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர்கள் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் ஓர் தனியார் மருந்தகத்தில் மாத்திரம் 10 மாதங்களில் 42,700 போதை மருந்து கொள்வனவு – பாரிய குற்றம் என அறிக்கை சமர்ப்பிப்பு
வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில் போதையினை ஏற்படுத்தும் மருந்து விற்பனை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நிலக்சன் , வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பிரீஸ் , வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகளான பிரசன்னா மற்றும் அரங்கன் , உணவு மருந்து பரிசோதகர் , வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியோர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது, வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஓர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அங்கு குறித்த (போதையினை ஏற்படுத்தக்கூடிய) PREGABALIN CAPSULES மருந்துகள் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தவறான முறையில் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப்பட்டமையுடன் குறித்த வைத்திய நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் ஓர் தனியார் மருந்தகத்தில் தை 2022 லிருந்து ஜப்பசி 2022 வரையான காலப்பகுதியில் 1220 பெட்டி குறித்த (போதையினை ஏற்படுத்தக்கூடிய) PREGABALIN CAPSULES மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒர் பெட்டியில் 35 மருந்துகள் வீகிதம் 1220X35=42700 மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. மருந்து கொள்வனவுக்குரிய பற்றுச்சீட்டுக்கான காசோலையினை குறித்த தனியார் மருந்தகத்தின் இயக்குனரான அரச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் அவரது கையோப்பத்துடன் வழங்கியுள்ளமையும் விசாரணையில் அவதானிக்கப்பட்டுள்ளமையும் குறித்த 42700 மருந்துகள் எங்கு சட்டரீதியற்ற முறையில் விநியோகப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதுடன், இவ்விடயம் தொடர்பாக திணைக்களத்தினால் பூர்வாங்க விசாரணைகள் செய்யப்படல் வேண்டும் மேலும் இது ஓர் பாரிய குற்றம் என்பதுடன் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை செய்யப்பட வேண்டும் என அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்குழுவினால் கையோப்பம் இடப்பட்டு அறிக்கைகள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இதனை முன்னெடுக்க வேண்டியது மாகாண சுகாதார பணிப்பாளர் ஆனால் இது வரை தீர்வில்லை ஆவணங்கள் கீழே இணைப்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தோண்டும் பணி மீள ஆரம்பம்: 40 எலும்புக்கூடுகள் இதுவரை மீட்பு
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் ஓராண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழியின் அகழ்வுப் பணிகள், கடந்த எழு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமையால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் எதிர்வரும் பத்து நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படாத, சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் பகுதிகளில் நாளை முதல் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “கொக்குத்தொடுவாய் இதுவரை காலமும் போதிய நிதியுதவி இல்லாமை காரணமாக காலம் தாழ்த்தப்பட்ட அகழ்வுப் பணியானது போதிய நிதி ஒதுக்கீட்டின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரையில் 40 மனித எலும்புக்கூடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் மீட்கப்பட்ட நிலையில் இன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை அகழ்ந்து எடுத்த பகுதிகளைத் தவிர மிகுதி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதி துப்புரவு செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் அகழ்வுப் பணி தொடரும்.” என்றார். கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய, முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதிக்கு கீழும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறித்த பகுதியின் அகழ்வு பணிக்காக நாளை மாற்று வீதி தயார்படுத்தப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை இன்று உறுதியளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 40 எலும்புக்கூடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் எடுக்கப்பட்டுள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு, நிபுணர் குழு கோரிய நிதி ஒதுக்கீட்டிற்கு நிதி அமைச்சு அனுமதி வழங்காத காரணத்தினால் காலவரையறையின்றி அந்த பணிகள் தாமதமாகியிருந்தன. கடந்த ஏப்ரலில் எதிர்காலப் பணிகளுக்கு ஒரு கோடியே 37இலட்சம் ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. குறித்த தொகையை மீள்பரிசீலனை செய்யுமாறு நீதி அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், கோரப்பட்ட 97 இலட்சம் ரூபாவானது எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் மயில்வணகம் செல்வரட்ணம் கடந்த மே மாதம் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ள மனித உடல்கள் தொடர்பான மேலதிக தடயவியல் பரிசோதனைகளுக்கு தேவையான பணம் கிடைக்குமா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அண்மைய அறிக்கையானது, இலங்கையில் உள்ள பாரிய புதைகுழிகளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அடையாளம் காணவும், பாதுகாக்கவும் மற்றும் விசாரணை செய்யவும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. கொக்குத்தொடுவாய் விசாரணைக்கு முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ, பாரிய புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சட்டவிரோதமாக புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் எலும்புகள் என மார்ச் மாதம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது அனுமானமாகும். 2023ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் உறுப்புகள் மற்றும் ஆடைத் துண்டுகள் தற்செயலாக வெளிப்பட்டன.
முல்லைத்தீவு அக்கராயன் குளத்துக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு…!
முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியை அண்மித்துள்ள பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(05) மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ஐயங்கன் குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.