முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்றையதினம் (17.06.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. போர் முடிவடைந்ததன் பின்னர், பூர்வீகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது, அரசாங்கத்தினால் தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்பட்டு 4238 பெரும்பான்மை குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசனக் குளங்களும் அதனுடன் சேர்ந்த காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, 2022ஆம் ஆண்டு 28676 இளைஞர், யுவதிகளுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், இன்று வரை அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.