Search
Close this search box.

யாழில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்த நபர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பை தடுக்க விசேட வேலைத்திட்டம்

இலங்கையில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடு வடக்கில் இரண்டு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – மன்னார் மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் வனவளத்திணைக்களத்தின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அதிகளவிலான சட்டவிரோதமான தேக்கமரங்கள், முதிரைமரங்கள்,பாலைமரங்கள் அறுக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இயற்கை வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படகிறது. முறிப்பு, தண்ணிமுறிப்பு, கோடாலிக்கல்லு, கரிப்பட்டமுறிப்பு, உடையார்கட்டு, விசுவமடு,மன்னாகண்டல் ,முத்தையன்கட்டு, நெட்டாங்கண்டல், துணுக்காய்,ஜயன்கன்குளம், கொக்காவில்,பனிக்கன்குளம், அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, மாங்குளம்,ஒட்டுசுட்டான்  போன்ற பிரதேசங்களில் உள்ள இயற்கை வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் பல நூற்றுக்காணக்கான சம்பவங்கள் இடம்பெற்றாலும் சில சம்பவங்களையே பொலிஸார் கண்டுள்ளார்கள். பல இடங்களில் பெருமளவான அறுக்கப்பட்ட மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் வாகனங்களில் கடத்தப்பட்டமை தொடர்பிலும் பல வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் காணப்படுகின்றன. இவ்வாறன நிலையில் பெருமளவான இயற்கை வளத்தினை அழிப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கோ கட்டுப்படுத்தவோ பொலிஸ் நிலையங்களில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதுடன் வனவளத் திணைக்களத்திடமும் ஆழணி பற்றாக்குறை காணப்படுவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இவற்றை சாதகமாக பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ச்சியாக காடுகளை அழித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

தமிழர் பகுதியில் 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது

கிளிநொச்சியில் (Kilinochchi) 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி படையினரின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (13) இரவு 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சோதனைக்கு உட்படுத்திய போது 1மில்லியன் அமெரிக்க டொலரும் இந்த டொலரை மாற்றுவதற்க்கான சான்று பொருட்களுடன் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் மீட்கப்பட்ட பெருமளவு கஞ்சா – தப்பியோடிய கடத்தல்காரர்கள்..!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (13) அதிகாலை 4:45 மணியளவிலேயே கேரள கஞ்சா   மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலிற்கு  அமைவாக  வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் சிறப்பு அதிரடி படையினர்  இணைந்து தாளையடி பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர். அவ்வேளை கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அங்கு காணப்பட்ட  135  கிலோ கிராம் எடையுள்ள 03 கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றிய வெற்றிலைக்கேணி  கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த கஞ்சாவை பொதிகளை  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள்..!

கிளிநொச்சி – தர்மபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக காற்று வீசி வரும் நிலையில் குளவிக் கூடு கலைந்துள்ளது. இதனால் மாணவர்களை குளவிகள் தாக்கியுள்ளன. குளவிக் கொட்டுக்கிலக்கான மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த  ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்று அதிகாலை(13) 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, தாக்குதலை மேற்கொண்டுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டியை அடித்து உடைத்து, வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அக்குழுவினர் தீ வைத்துள்ளனர். பின்னர் வீட்டின் வெளியே நின்ற ஊடகவியலாளரின், மோட்டார் சைக்கிளுக்கும் , அவரது சகோதரனின்  முச்சக்கரவண்டி மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டு பின்னர் அவற்றுக்கும் தீ வைத்துள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன சேதமடைந்துள்ளன. “திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வீட்டினுள் வீசி விட்டு குறித்த கும்பல் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நிறம் மாறிய மதுபான போத்தல்கள்: சர்சைக்குள் சிக்கிய பொலிஸார்

யாழ்ப்பாணம் -நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் போது, நெடுந்தீவு பொலிஸாரினால் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சீல் வைக்கப்பட்டு, சான்று பொருட்களாக மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்நிலையில், வழக்கு விசாரணைகளின் போது, தன் மீதான குற்றச்சாட்டினை சந்தேக நபர் ஏற்றுக்கொண்டதை, அடுத்து அவருக்கு தண்டம் விதித்த மன்று, நபர் ஒருவர் 10 மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருக்க முடியும் என்பதால் ,அவரிடம் இருந்து மீட்கப்பட்ட மதுபான போத்தல்களில் 10 போத்தல்களை மீள கையளிக்குமாறும் மேலதிக போத்தல்களை அழிக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது. அதனை அடுத்து சான்று பொருளாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட மதுபான போத்தல்களில் 10 போத்தல்களை மீள அந்நபரிடம் ஒப்படைத்த போது, அவற்றில் சில போத்தல்களில் மதுபானத்தை நிறம் மாறி இருந்ததுடன், அடியில் மண்டி படிந்த நிலையில், காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து இது தொடர்பில் நீதிமன்ற பதிவாளரிடம் குறித்த நபர் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாட்டினை பதிவாளர் எழுத்து மூலாக பெற்று, நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து , நீதவானின் உத்தரன்பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை புனரமைக்ககோரி போராட்டம்

கிளிநொச்சி பச்சிலை பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்ற கிராமமான முகமாலை இந்திராபுரம் மக்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து. கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள புகையிரத கடவையானது இதுவரை புனரமைக்கப்படாமலும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையாகவும் காணப்படுவதனால் இதனை பாதுகாப்பான நிரந்தரமான கடவையை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர். இந்த பிரதேசத்தில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த பிரதேசங்களில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வருவதனால் மாற்றுவழிப்பாதை எதனையும் பயன்படுத்த முடியாது உள்ளதாகவும் பிரதேச மக்கள் இவ்வீதியையே பயன்படுத்த பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே குறித்த பாதையை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக அமைத்து தருமாறு கோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதுடன் புகையிரத திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு மனுக்களையும் கையளித்துள்ளனர்.

யாழில் தமிழரசு கட்சியினரை சந்தித்தார் சஜித்பிரேமதாச

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை தமிழரசு கட்சியினரை சந்தித்தனர். இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சிவிகே சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் சந்திப்பை மேற்கொண்டனர்.

மாவா விற்பனை அதிகரிப்பு ; நடவடிக்கை எடுக்காத வவுனியா பொலிஸார்

வவுனியாவில் மாவா எனப்படும் போதைப்பொருளை கலந்த பாக்கு விற்பனை அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி இருந்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் . வவுனியா பூந்தோட்டம் வீதியில் தென்னந்தோட்டத்தடி மற்றும் பூந்தோட்டம் சாந்தி, கற்குழி, தேக்கவத்தை உட்பட வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான மாவா எனப்படும் போதை கலந்த பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியிருந்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதமையால் குறித்த பகுதிகளில் இளைஞர் குழுக்கள் அதிகளவில் கூடி நின்று குறித்த போதை பார்க்கினை கொள்வனவு செய்து உண்பதை அவதானிக்க முடிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் . மேலும் , போதை ஒழிப்பு தொடர்பான யுக்திய நடவடிக்கை இலக்கங்களுக்கு தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் இவ்வாறான விடயங்களை கண்டும் காணாது இருப்பதாகவும் மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர் .