இரு விழிகளையும் இழந்த நிலையிலும் உயர்தர பரீட்சையில் சாதித்த மட்டு. மாணவன்…!
ஏனைய மாணவர்களுக்கு என்ன பாடத்திட்டங்கள் உள்ளதோ அதனையே நாங்கள் கற்கின்றோம்.சில ஆசிரியர்களும் மாணவர்களும் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு விசேட கல்வி என நினைக்கின்றார்கள்.அவ்வாறான கருத்துகள் மாற்றம்பெறவேண்டும் என உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷோபன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு விழிகளையும் இழந்த மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவனான பாலச்சந்திரன் ரிஷோபன் என்னும் மாணவன் உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றி இரண்டு A சித்திகளையும் ஒரு B சித்தியையும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(03) மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த மாணவன் கல்விப்பணிமனையினால் கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. சில ஆசிரியர்கள்,மாணவர்கள் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடையவர்களுக்கு விசேட கல்வி இருக்கின்றது. அதன்மூலம் அவர்கள் இலகுவாக சித்தியடைகின்றார்கள் என்று. அவ்வாறு இல்லை நாங்களும் ஏனைய மாணவர்கள் பயிலும் அதே பாடத்திட்டத்தினையே பயில்கின்றோம்.எங்களை இயலாதவர்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.இவ்வாறான நிலை மாறவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். குறித்த மாணவன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவினை சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவரின் மகனாவார். இரு விழிகளையும் இழந்த நிலையில் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையிலும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து இந்த சாதனையினை படைத்துள்ளார். இதேநேரம் குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்தின் கல்வியை பூர்த்திசெய்வதற்கான உதவிகளை வழங்குமாறு குறித்த மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலை மாணவிகளின் பெறுபேறு இடைநிறுத்தமானது இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
திருகோணமலை(Trincomalee) சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறு பேறு இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, “பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது. காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல. இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்த பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. சாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரேமொழியை பேசும் நாம் இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடுவது ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற்றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளேன். இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை. கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு வடிவம் இது. என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூதூரில் வாய்க்காலுக்குள் பாய்ந்த ஹயஸ் வாகனம்…! அதிகாலையில் நடந்த விபரீதம்…!
மூதூரில் ஹயஸ் வாகனமொன்று வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் ஹயஸ் வாகனமொன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று(30) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த ஹயஸ் வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்திருந்த நிலையில் விபத்தின் போது சாரதி எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னைகளில் தீவிரமடையும் வெண்நிற ஈ தாக்கம்…! உயரும் தேங்காய் விலை
திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் உள்ள தென்னை மரங்கள் வெண்நிற ஈ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக சம்பூர் பிரதேச தென்னை செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சம்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான தென்னை மரங்கள் வெண்நிற ஈ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால் தமது தென்னை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றன. இவ்வாறு வெண்நிற தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நோய் தாக்கம் அதிகரிக்குமாக இருந்தால் தேங்காய்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும் எனவும் சம்பூர் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு , அதற்குரிய ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் சம்பூர் பகுதி தென்னை செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு கொடூர தாக்குதல் – தாய்க்கு நேர்ந்த கதி..
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் தமது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கியதாகக் கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். 7 வயதுடைய தனது மகன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய குறித்த தாய் காணொளியொன்றையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபரை ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த காணொளியில் மற்றுமொறு பெண், இரண்டரை வயது சிறுவன் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. அது தொடர்பிலும் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலை நேர உணவகங்களுக்கு ஏற்பட்ட கதி..! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
திருகோணமலை – மூதூர், தோப்பூர் பிரதேசத்திலுள்ள மாலை நேரக் கடைகள் நேற்று திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உணவு கையாண்டமைக்காக இரண்டு மாலை நேர சிற்றூண்டி நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகள் ஐ.எம்.றினூஸ் தெரிவித்தார். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் ஆலோசனைக்கமைய மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்! ஒருவர் கைது – நடந்தது என்ன?
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (27) காலை வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மண்டூர் கோட்டமுனை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலம் மீட்கப்பட்டதும், அதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதான சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் பங்கேற்பதற்காக சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அதிகாலையில் பயங்கர விபத்து; குடைசாய்ந்த கார்…!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பகுதியில் கார் விபத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் என்பவர் தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் கொழும்புக்கு சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர். காரில் பயணித்து மூன்று பிள்ளைகளும் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தில் காயமடைந்த கணவனும் மனைவியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீனா அரசாங்கத்தினால் உதவிப் பொருட்கள்…!
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிப் பொருட்கள் உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(23) நடைபெற்றது. சூம் தொழினுட்பத்தினூடாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர்களுக்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் 500 மில்லின் பெறுமதியிலான மீன்பிடி வலைகள், 500 மில்லியன் பெறுமதியிலான வீட்டுத் திட்டம், 500 மில்லியன் பெறுமதியிலான அரிசி போன்றவை அனுப்பி வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை நடந்த கோரவிபத்து.. சம்பவ இடத்தில் பலியான சிறுமி
திருகோணமலை – ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்தோடு, இச் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே, குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்