Search
Close this search box.

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு – கைதானவருக்கு பிணை…!

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதன்கிழமை  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குச்சவெளி சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்த குறித்த வழக்கானது விசாரணைக்காக நீதிவான் ஜீவராணி கருப்பையா முன்னிலையில் இன்று  எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கில் எதிரி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி தேவராஜா ரமணன் இன்றையதினம் முன்னிலையாகியிருந்தார். குறித்த கைதானது, கண்கண்ட சாட்சியங்கள், ஆதாரங்கள் எவையும் இன்றி ஊகத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த நபர் புல்மோட்டை – இல்மனைற் தொழிற்சாலையில் கடமையில் இருந்ததாகவும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து எவ்வித சான்றுப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை போன்ற சமர்ப்பணங்களை எதிராளியின் சார்பாக சட்டத்தரணி முன்வைத்திருந்தார். இதையடுத்து சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை, திரியாய், ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் மார்ச் 14ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பாக அங்கு பணியாற்றிய வைத்தியரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நபர் ஒருவர் குச்சவெளி பொலிசாரினால்  சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு அரச சொத்துக்கு தீங்கு விளைவித்தமை மற்றும் தண்டனை சட்டப்பிரிவுக்குக்கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் 67 நாட்களுக்குப் பின்னர் குறித்த நபர் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் சீரற்ற வானிலை!

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை, அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையின் அடுத்த 24 மணித்தியாலங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக இந் நிலைமை ஏற்படவுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று அனுஷ்டிப்பு:

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்படி, இன்று போரின் இறுதிநாளாக கருதப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி போரின் முடிவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியில் பெருமளவிலான தமிழ் மக்கள் போர் வளையத்தில் சிக்கிக்கொண்டனர். இதன்போது தமிழ் மக்கள் மீது குண்டு வீசி கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றன. சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போர் வளையத்தில் சிக்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கு மக்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக ஒரு பிடி அரிசி கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நாட்களில் உணவின்றி தவித்த அவர்கள் வீடுகளில் இருந்துகொண்டு வந்த அரிசியை மட்டுமே பயன்படுத்தி கஞ்சி காய்ச்சிக் குடித்து உயிர் பிழைத்ததுடன் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்திருந்தனர். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வெற்றியை ஒரு குழுவினர் கொண்டாடும் நிலையில், இறுதி யுத்தத்தின் போது தாம் அனுபவித்த கசப்பான நினைவுகளை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இதன்படி, கடந்த கடந்த 15 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் மே 11 முதல் மே 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த ஆண்டும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் முள்ளிவாயக்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முள்ளிவாய்க்கால் வார இறுதி நிகழ்வுக்கு தமிழ் மக்கள் தயாரகி வருகின்றனர். புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், முள்ளிவாய்க்கால் தினத்தையொட்டி இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் படையினர் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர முயற்சிக்கும் எந்தவொரு குழுவினரும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்களால் வாள்வெட்டு – தந்தை மற்றும் மகனுக்கு ஏற்பட்ட துயரம்..!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாள் வெட்டுத்தாக்குதலுக்கு 44 வயதுடைய தந்தையும்,  22 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ளதாகவும், மகன் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையிலும், தந்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். முன் கோபத்தினால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மின்னல் தாக்கம்-மழை 1 மணிக்குப் பின் முன்னெச்சரிக்கை தேவை!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

முல்லைத்தீவில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவு கூரப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக  முல்லைத்தீவில் இருவேறு இடங்களில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதியில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

எல்லை மீறிய வெப்பநிலை: 08 வருடங்களின் பின்னர் வரலாறு காணாத அதிகரிப்பு

எல்லை மீறிய வெப்பநிலை: 08 வருடங்களின் பின்னர் வரலாறு காணாத அதிகரிப்பு 08 வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு நாட்டின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார தெரிவித்துள்ளார். பல்வேறு காலநிலை காரணங்களால் இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் சராசரியாக 39 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் கடந்த 2016 ஆம் ஆண்டுதான் இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது. இந்த நாட்டில் சராசரி வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் பேராசிரியர் திலக் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதன்படி, இதனை சமாளிக்க மக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணங்களிலும் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். இதேவேளை,  வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், ‘கவனம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேற்படி பிரதேசங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர் நியமனங்களில் அநீதி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof) கவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அசோக பிரியந்தவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதியமைச்சரைச் சந்தித்து இவ்வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார். “கிராம உத்தியோகத்தர் நிமயனத்திற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் நியமனம் பெறும் எண்ணிக்கையினரை விட அதே போன்ற ஒரு மடங்கு தொகையினர் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்படி கிண்ணியாவிலிருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனவே, 5 அல்லது 6 பேருக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும். எனினும் தற்போது இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படுகின்றது. ஏனைய பிரதேச நியமனங்களோடு ஒப்பிடுகையில் கிண்ணியா பிரதேசத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.எனவே, இது குறித்து மீள் பரீசீலனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.