Search
Close this search box.

அநுர கட்சியில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள்!! வெளியான தகவல்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியிலில் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பல் மேலும் தெரியவருவதாவது, “அரிசி கையிருப்புகளை சந்தைக்கு வெளியிடத் தவறிய ஆலை உரிமையாளர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். அத்தோடு, ரத்ன அரிசி ஆலைக்கு சொந்தக்காரரான குறித்த நபர்  இலங்கை வங்கியொன்றில் 3.5 பில்லியன் ரூபா கடனாக பெற்றுள்ளதாகவும் அமைச்சர் வசந்த குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து, அமைச்சர் வசந்தவின் கருத்துக்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலிலும் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்களே உள்ளனர் என தெரிவித்தார்.”

உச்சம் தொட்ட மீன்களின் விலை

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் உள்ளதால் இவ்வாறு விலையுயர்வு ஏற்பட்டுள்ளதாக மீன்வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், கடந்த நாட்களை விட இன்று மீன்களின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தற்போது காலநிலை சீராகிவரும் நிலையில் இந்த விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, மரக்கறி விலைகளில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை பிரதான சந்தையிலுள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள். அத்துடன், பண்டிகை காலம் என்பதால் இந்த விலை மாற்றம் மேலும் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் குடும்பப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் 14 ஆவது வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம் பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளார். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாட்ட நீதவானிற்கு அறிக்கை சமர்ப்பித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். குறித்த உயிரிழந்த தாய்க்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 14 வயதுடைய சிறுவனும் அதிக மது போதையில் இருந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை கோருகிறார்- யஸ்மின் சூக்கா!

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட. அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தடைகளையும், நுழைவு அனுமதித்தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும். அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கும், ஐ.நா சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் அனுப்பிவைத்திருக்கிறது. ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக்கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கிவரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டமானது இலங்கையின் அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிரான தடைகள் மற்றும் விசா அனுமதி தடைகள் தொடர்பான 60 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருப்பதுடன் உலகளாவிய சட்ட வரம்பெல்லையின் பிரகாரம் வழக்குப்பதிவுகளையும் கோரியிருக்கிறது. மனித உரிமைகள் தினத்தையொட்டி (எதிர்வரும் 10 ஆம் திகதி) தயாரிக்கப்பட்டிருக்கும் இக்கோரிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள், நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புடைய கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க ஊழல் மோசடிகள் என்பன பற்றியவையாக இருக்கின்றன. உள்நாட்டு யுத்தத்தின்போதும், அதற்குப் பின்னருமான காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், பலவந்தமான கைதுகள் மற்றும் தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்களும், நாட்டின் அரச கட்டமைப்புக்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பாரிய ஊழல்களும் இக்குற்றங்களில் அடங்குகின்றன. அதுமாத்திரமன்றி இம்மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தடைகளை ஏற்படுத்தும் வகையிலான முறையற்ற தலையீடுகள், அதிகாரத்துஷ்பிரயோகங்கள் என்பனவும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக 1980 களின் இறுதியில் இலங்கையில் பணியாற்றிய இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய இந்திய அமைதிகாக்கும் படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைகளை விதிக்கும்படி மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் கோரப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ‘கடந்தகால மீறல்கள் தொடர்பில் இற்றைவரை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கடந்தகால மற்றும் சமகால குற்றங்களை ஆவணப்படுத்தி, அவற்றுக்கான சான்றுகளைப் பகுப்பாய்வு செய்து, உண்மையைக் கண்டறிவதற்கு ஏதுவான சகல வழிமுறைகளையும் உரியவாறு பயன்படுத்திக்கொள்வது இன்றியமையாததாகும். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பிரிட்டனின் தற்போதைய புதிய அரசாங்கம் எதிர்வரும் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கின்றோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

புத்தளம் ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

புத்தளம் ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் இன்று வெள்ளிக்கிழமை (06) தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சிலாபத்தில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று சீதுவை ரயில் நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது. இதனால், புத்தளம் ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (06) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் கல்வித் தகமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை

சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகமை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார். தனது கல்வித் தகமை தொடர்பில் மெய்யான தகவல்களை வெளியிடத் தவறினால் அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார். அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டுமானால் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் தொடர்பில் தேடி அறிந்து, பிழையான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் அவரை பதவி விலகுமாறு வலியுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். ரன்வல பிழை செய்திருந்தால் அதில் இரண்டு பிழைகள் உள்ளன. பிழைகள் இல்லாத பட்டமொன்று இருப்பதாக மக்களிடம் கூறியமை மற்றும் பொய்யான கல்வித் தகமைகயை காண்பித்து முக்கிய பதவி ஒன்றை வகிக்க முடியும் என கருதியமை ஆகிய இரண்டு பிழைகளை செய்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார். நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்திக்காக மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக ரன்வல தனது இளங்கலை பட்டத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும், கலாநிதி பட்டத்தை ஜப்பானிலும் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான ஓர் பின்னணியில் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு வரை காலக்கெடு!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதுவரை சுமார் 20 வீதமான அறிக்கைகள் மாத்திரமே மாவட்ட மட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, பெப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது அறிக்கைகள் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதேவேளை, காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,361 வேட்பாளர்களில் இதுவரை 1,985 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரிகள் செலுத்தப்படாமையால் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள அரிசி!

தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த நடவடிக்கைகள் இறக்குமதி செயன்முறையை சீர்செய்வதையும், உள்ளூர் சந்தைக்கு அரிசி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, இறக்குமதியாளர்கள் பொருந்தக்கூடிய கடமைகளைத் தீர்ப்பதன் மூலம் பொருட்களை விடுவிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சுமார் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அருக்கொட தெரிவித்துள்ளார். இதற்காக 2,500 முதல் 3,000 அரிசி கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் பலரை ஏமாற்றியவருக்கு நேர்ந்தகதி!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே   தலைமறைவாக இருந்த போது சந்தேகநபர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கைதான சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.