பெண்ணொருவர் சுட்டுக்கொலை
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (05) இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக டி56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ரணில் தரப்பு அதிரடி அறிவிப்பு
கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களின் பட்டியல் பிமல் ரத்நாயக்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.