Search
Close this search box.

அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்ட இலங்கை வந்த விமானம்! பின்னணியில் இலங்கை பெண்.

டுபாயிலிருந்து (Dubai)  இலங்கை நோக்கி வந்த விமானம், அதில் பயணித்த  இலங்கை பெண்ணின் அவசர மருத்துவ தேவைக்காக கராச்சி (Karachi) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்தில் பயணித்த 57 வயது பெண் ஒருவரின் உடல் நிலை பயண நடுவில் மோசமாகியதால் விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பயணியின் உடல்நிலை மோசமானதை அறிந்துகொண்ட விமானி, உடனடியாக கராச்சி விமான நிலையத்துக்கு தொடர்பு கொண்டு அவசரமாக விமானத்தை தரையிறக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், அவருக்கான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்குமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விமானம் தரையிறங்கிய பின் உடனடியாக குறித்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். மேலும், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்த மத்திய சுகாதார அதிகாரி அந்த பெண்ணின் இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளார். இந்நிலையில், அவரது உடலை தற்போது கராச்சியிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நானாகவே பதவி விலகுகிறேன் : வைத்தியர் அர்ச்சுனா பகிரங்க அறிவிப்பு

என்னை நீங்கள் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் நானே விலகிக் கொள்கின்றேன் என  வைத்தியர் அர்ச்சுனா (Archuna) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “விடுதலை புலிகள் என காணாமல் ஆக்கப்பட்ட 44000 பேருடன் என்னையும் ஒருவன் என சொன்னால் அது எனக்கு பெருமிதமே. அந்த வழியில் என்னை கைது செய்ய முற்படுகின்றீர்களாயின் அதையும் தாராளமாக செய்து கொள்ளுங்கள். மேலும், என்னை பதவியில் இருந்து விலக்க நினைக்கின்றீர்கள் என்றால் அதை நீங்கள் செய்ய வேண்டாம். நானே விலகிக் கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் தெரிவு.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் தெரிவு தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்ற போதும் புதிய தலைவர் தேர்வு இடம்பெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசு கட்சி, கட்சி ரீதியாக ஒன்று கூடி ஆராய்ந்து ஒரு முடிவெடுத்த பின்னர், இது பற்றித் தீர்மானிப்பதாக நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் (R.Sampanthan) காலமானதை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது. குறித்த பதவிக்கு தம்மைத் தெரிவு செய்யும்படி கோரி ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டம் நடைபெற்ற போது சித்தார்த்தனைத் தவிர ஏனையோர் பிரசன்னமாகி இருந்தனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் மேற்படி தலைமைப் பதவிக்குத் தன்னுடைய பெயரை செல்வம் அடைக்கலநாதன் தாமே பிரேரித்தார். அது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிறீதரன் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டார். அதனையே தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வழிமொழிந்தனர் எனத் தெரியவந்தது. ”செல்வம் தலைவராக இருப்பதில் ஆட்சேபனை ஏதுமில்லை. அவர் தலைவராக இருக்க, இதுவரை காலமும் இந்த பணியை சம்பந்தன் சார்பில் ஆற்றி வந்த சுமந்திரனே அவற்றைத் தொடர்ந்து செய்யலாம் இருவரும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்க முடியும். முன்னெடுக்க வேண்டும். ஆயினும், செல்வமும் ஏனையோரும் இப்போது ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி என்ற ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கி அதில் செயற்படுகின்றனர் என அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் அதில் இருந்து கொண்டு இங்கு தமிழரசு கட்சியின் பெயரில் இருக்கும் நாடாளுமன்ற குழுவுக்கு தலைமை தாங்க முடியாது. கூட்டமைப்பில் இருந்து கொண்டு தலைமை தாங்குவது வேறு. வேறு ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இதற்குத் தலைமை தாங்குவது வேறு. அவ்வாறு அவர்கள் தலைமை தாங்குவதனால் அது குறித்து தமிழரசுக் கட்சியில் கட்சி ரீதியாக நாங்கள் சில விடயங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்” என்றும் சிறீதரன் தெளிவாக வலியுறுத்தினார். இந்நிலையில், சுமந்திரனும் அக்கட்சியின் ஏனையோரும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். கூட்டமைப்பின் பெயரில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பை இணைத்துக் கொள்வதில் சிறீதரன் கடுமையான ஆட்சேபனைகளை நேற்றைய கலந்துரையாடலில் அடிக்கடி வெளிப்படுத்தினார். தங்களுடைய ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியை கைவிட்டு வர முடியாது, அதன் பெயரிலேயே செயற்படுவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை செல்வம் தரப்பினர் வெளிப்படுத்தியமையால் தலைவர் தெரிவு முடிவெடுக்கப்படாமல் தள்ளிப் போயிற்று. இறுதியில் தமிழரசுக் கட்சி, கட்சி ரீதியாக கூடி இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரபாகரன் மீது பற்றுடைய அனைவரும் எம்முடன் இணையுங்கள்: கருணா கோரிக்கை

தமிழீழ தேசிய தலைவருடன் தமிழ் மீது பற்றுடைய அனைவரும் எம்மோடு இணைய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ தேசிய தலைவரினால் இனங்காணப்பட்டு கை காட்டப்பட்டு அரசியல் தலைவராக இருந்து இயற்கை எய்திய சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுப்பெடுத்து நடத்துவார் என்ற நம்பிக்கையில் அவரிடம் கையளித்தார். இரண்டாம் கட்ட தலைவர் கூட இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசு கட்சி அனைத்தும் இன்று சிதறடிக்கப்பட்டு இருக்கிறது. உருளைக்கிழங்கு மூடை எல்லாம் கட்டவிழ்த்து அவிண்டு ஓடிட்டுது என்று கூறுகின்ற நடப்புக்களும் நடக்கிறது. தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தையை தற்போது அமைச்சராக உள்ள டக்ளஸ் நையாண்டியாக கூறியிருந்தார். தமிழீழ தேசிய தலைவரால் கட்டப்பட்ட மூடை கட்டவிழ்ந்தது உண்மை தான், அதனால் தான் அதனை கட்டுவதற்கு நான் வந்திருக்கின்றேன். இனி எங்களுக்கு கீழே வடக்கு கிழக்கு அரசியல் நடவடிக்கை நடைபெறும் என்பதனை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன். 15 வருடங்கள் நான் இருந்து பார்த்தேன். எங்களால் கையளிக்கப்பட்ட அரசியல் பிரிவு எங்கள் தலைவரால் மக்களின் எதிர்காலம், பொருளாதாரம், மக்களின் வாழ்வு என்பவற்றை 30 வருட கால யுத்தத்தின் பின்னர் வளர்த்தெடுக்கும் நிலையே இருந்தது. இங்கு திருடுவதும் சாப்பிடுவதுமான நிகழ்வுதான் நடந்ததே, இன்று கூட அவர்கள் பிரிந்து போகவே இருக்கின்றார்கள். தலைவரால் அவிழ்த்துவிடப்பட்ட மூடைகளை கட்டவேண்டிய கடப்பாடு எனக்கு மட்டுமே உள்ளது. இது கருணா அம்மான் காலம், எல்லோரும் எதிர்பார்த்திருங்கள். சிறிய அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என அனைவரும் எம்மோடு இணைய வேண்டும். தமிழ்தேசிய தலைவருடன், தமிழ் மீது பற்றுடைய அனைவரும் எம்மோடு இணையவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் ஹையர்ஸ் ரக வாகனம் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு (Mullaitivu) ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை பொலிஸின் புதிய திட்டம்!

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் நோக்குடன் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சு ஆகியவற்றுடன் ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்துடனும் நேற்று (10) உடன்பாடு எட்டப்பட்டது. பணமோசடி அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல் போன்ற பொலிஸாரினால் நடத்தப்படும் விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எட்டுவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் நீண்டகாலமாக பொலிஸ் விசாரணைகளுக்கான தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் குறைவதோடு, சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் நல்ல அனுபவமுள்ள அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்துவதன் மூலம் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மேலும் மனித எச்சங்கள்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 6 வது நாளான நேற்று (10) 3 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நிறைவு நாட்களில் அடையாளம் காணப்பட்ட 4 மனித எச்சங்கள் அதழ்தெடுக்கப்படாது காணப்படுகின்ற நிலையில், ஏற்கனவே இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் இவை அகழ்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஆறாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் நேற்று (10) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல்  பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன. இரண்டாம் நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அவர்கள் அகழ்வு பணிகளை கண்காணிதார். அந்தவகையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக கொக்கிளாய் – முல்லைத்தீவு பிரதான வீதியின் அகழப்பட்டு, அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் 3 மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் அவ் எலும்புக் கூட்டுத்தொகுதிகளோடு  துப்பாக்கி சன்னங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் வேலிகம்பிகளின்  துண்டுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளப் படுத்தப்பட்டுள்ள 7 மனித எச்சங்களையும் வரும் நாட்களில்  முழுமையாக வெளியே எடுக்க முடியும் என அகழ்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் மனித உரிமை சட்டத்தரணி நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

கொம்பனித்தெரு மேம்பாலம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில் புகையிரதப் பாதைக்கு மேலால் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) திறந்து வைத்தார். நாளாந்தம் 109 புகையிரத பயணங்களுக்கு புகையிரத கடவை மூடப்படுவதால் ஏற்படும் தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் மாகா பொறியியல் (Maga Engineering) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது. அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட வர்த்தக நகரப் பகுதியான கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள புகையிரதக் கடவையால் நாளாந்தம் சுமார் 03 மணித்தியால  நேரவிரயம் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மேம்பாலத் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் கொம்பனித்தெருவில் இருந்து காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் நோக்கி போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க முடியும். மேலும், வாகன நெரிசல் காரணமாக வீதியில் வீணாகும் மக்களின் நேரத்தை தேசிய பொருளாதாரத்தில் இணைக்க முடியும். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

28 கிலோ கேரளா கஞ்சா கடத்தல் – பொலிஸார் அதிரடி நடவடிக்கை..

மன்னார், பேசாலை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 28 கிலோ 760 கிராம் கேரளா கஞ்சா வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கூலர் வாகனத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (10) அதிகாலை ஒரு மணி அளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடியின் அறிவுறுத்தலுக்கு அமைய, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலையிலான குழுவினரே இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். மன்னார், பேசாலை பகுதியில் இருந்து கூலர் ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட போதே பொலிஸார் இதனை கைப்பற்றியுள்ளனர். இந்நடவடிக்கையின் போது கூலர் ரக வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர்களாக பேசாலை பகுதியை சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையை 2 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். மேலதிக விசராணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பைடனைச் சந்தித்தார் பிரித்தானியாவின் புதிய பிரதமர்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வொஷிங்டனில் இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகப் பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில் அவர் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். எவ்வாறாயினும் குறித்த விடயம் தொடர்பில் தங்களது சந்திப்பின் போது கலந்துரையாடப்படவில்லை என பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.