டுபாயிலிருந்து (Dubai) இலங்கை நோக்கி வந்த விமானம், அதில் பயணித்த இலங்கை பெண்ணின் அவசர மருத்துவ தேவைக்காக கராச்சி (Karachi) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானத்தில் பயணித்த 57 வயது பெண் ஒருவரின் உடல் நிலை பயண நடுவில் மோசமாகியதால் விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பயணியின் உடல்நிலை மோசமானதை அறிந்துகொண்ட விமானி, உடனடியாக கராச்சி விமான நிலையத்துக்கு தொடர்பு கொண்டு அவசரமாக விமானத்தை தரையிறக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன், அவருக்கான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்குமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமானம் தரையிறங்கிய பின் உடனடியாக குறித்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
மேலும், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்த மத்திய சுகாதார அதிகாரி அந்த பெண்ணின் இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அவரது உடலை தற்போது கராச்சியிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.