மன்னார், பேசாலை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 28 கிலோ 760 கிராம் கேரளா கஞ்சா வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கூலர் வாகனத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (10) அதிகாலை ஒரு மணி அளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடியின் அறிவுறுத்தலுக்கு அமைய, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலையிலான குழுவினரே இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
மன்னார், பேசாலை பகுதியில் இருந்து கூலர் ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட போதே பொலிஸார் இதனை கைப்பற்றியுள்ளனர்.
இந்நடவடிக்கையின் போது கூலர் ரக வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர்களாக பேசாலை பகுதியை சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையை 2 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசராணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.