Search
Close this search box.

மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்!

யாழ். தெல்லிப்ப்பளை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு முடியாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 3 மலையக மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு சிறுவர் இல்லம் மே மாதம் மேலும் 03 மலையக மாணவர்கள் இணைக்கப்பட்டு 06 மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் இயங்கிவந்துள்ளது. குறித்த சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், ஜன்னல்களுக்கு கதவுகள் அற்ற நிலையில், மாணவர்கள் கட்டில் வசதிகள் இன்றி நிலத்திலையே உறங்கும் நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும், மலசல கூட வசதிகள் மற்றும் குளியல் என்பவற்றுக்கு மாணவர்கள், குறித்த வீட்டிலிருந்து சற்று தொலைவில் பிறிதொரு காணிக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது. இதேவேளை, தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 12 மலையக மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக மாணவர்களும் யூனியன் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாணவர்களை விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மாணவர்கள் யூனியன் கல்லூரியின் பெறுப்பில் இல்லாதது தனி நபர்களின் பொறுப்பிலையே தங்கியுள்ள நிலையில், எவ்வாறு யூனியன் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களை இணைக்கும் விண்ணப்பம் நிரப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அறிய முடியாத சூழல் காணப்படுகிறது. இதேவேளை குறித்த சிறுவர் இல்லம் வட மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரு சிறுவர் இல்லங்களை சேர்ந்த 16 மாணவர்களும் முன்னர் கற்ற பாடசாலைகளில் இருந்து விடுகை பாத்திரங்கள் பெற்று, முறைப்படி யூனியன் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படாமல், தாற்காலிகமாகவே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்த நிலையில் வடக்கில் பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் வடமாகாண ஆளூநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசரமாக தரையிரக்கப்பட்ட கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானம்..! வெளியான காரணம்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தினுள் ஏற்பட்ட அவசர மருத்துவ காரணத்திற்காக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த மருத்துவ காரணம் தொடர்பில் தகவல் இதுவரை வெளியாகவில்லை UL605 எனப்படும் இந்த விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி 5:16 மணிக்கு மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து (MEL) தாமதமாகப் புறப்பட்டதாக விமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இந்தோனேசியாவின் ஜாவாவின் தெற்கே செல்லும் பயணக் கப்பலில் இருந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. விமானக் குழுவினர் அவசரநிலையை அறிவித்தபோது, ​​விமானம் தெற்கு இந்தோனேசியாவை நோக்கிய பாதையில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது விமானக் குழுவினர் விமானத்தை வடக்கே இந்தோனேசியாவின் ஜகார்த்தா சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தை (CGK) நோக்கித் திருப்பிவிட முடிவு செய்தனர். இறுதியில் விமானம்  இலங்கை நேரப்படி 20:56 மணிக்கு ஜகார்த்தா திருப்பும் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் (04-07-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு இன்றி காணப்பட்ட சுகாதார சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பட்டார். இவ்வாறான நிலையில், இன்றையதினம் (04) காலை கடமை நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்லாத வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் தனது அனுமதி இன்றி சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் நுழைந்து கூட்டம் நடாத்துவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இவ் விடயம் தொடர்பில் ஆராய முற்பட்டபோது வைத்திய அத்தியட்சகரின் தொலைபேசி பறிக்கப்பட்டு அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரின் தன்னிலை விளக்கமும், சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் வீடியோ பதிவுகள் முகநூலில் பதிவேற்றப்பட்டது. குறித்த பதிவில், மகப்பேறு விடுதி திடீர் விபத்து பிரிவு ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரைகளை விடுத்ததன் எதிரொலியாக முன்னாள் வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக வைத்திய அதிகாரிகள் சங்கத்தை களம் இறக்கி தன்னை குறித்த வைத்தியசாலையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த வைத்தியசாலையின் வளங்கள் மக்களுக்கு பயன்படுத்தப்படாத நிலையில் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் மகப்பேற்று விடுதியை கூட இயங்க விடாமல் வைத்திய குழு ஒன்று தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிலர் சேர்ந்து குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் முயற்சியில் கடந்த காலங்களில் செயற்பட்டதாகவும், தான் இந்த வைத்தியசாலைக்கு வருகை தந்ததும் இவ்வாறான விடயங்களுக்கு இடம்கொடுக்க மாட்டேன் என தெரிந்த நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் தெரிவித்தார். இதேவேளை, தன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக பாதிக்கப்பட்ட வைத்தியர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர்?

பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூன் 4] நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை என்னும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 2 இடத்திலும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 131 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மாறாக இடதுசாரியான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் கெயர் ஸ்டேமர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்பார் என்று தெறிகிறது. பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மழை வீழ்ச்சி அதிகரிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.