Search
Close this search box.
வவுனியாவில் ஆசிரியர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் பிணையில் விடுதலை.

வவுனியாவில் ஆசிரியர் ஒருவருக்கு போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி தொலைபேசியில் மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் ஒருவர் கைதாகி நீதிமன்றத்தால் நேற்று வியாழக்கிழமை (04) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த தரணிக்குளம் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கிராம அலுவலரின் ஆதரவுடன் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் கிராம அபிவிருத்தி சங்கம் ஊடாக வெளிப்படுத்தியமையால் குறித்த ஆசிரியருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலி முகநூலில் அவ் ஆசிரியர் தொடர்பாக தவறான தகவல்கள் பகிரப்பட்டதுடன், தொலைபேசியிலும் ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியர் ஜனாதிபதி செயலகம், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, ஒம்புட்ஸ்மன், மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர் என பலரிடமும் முறையிட்டதுடன், குறித்த சம்பவம் தொடர்பில கணனி பயன்பாட்டு கட்டுப்பாட்டு பிரிவு பொலிசாருக்கும் முறைபாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த பொலிசார் குறித்த முகநூல் கிராம அலுவலருடையது என்பதை கண்டறிந்ததுடன் அதனை முடக்கியிருந்தனர். இந்நிலையில் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் தொலைபேசியில் அச்சுறுத்தியமை மற்றும் போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தியமை தொடர்பில் கிராம அலுவலருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்றையதினம் வழக்கு விசாரணை இடம்பெற்ற போது மன்றின் கட்டளைக்கு அமைய நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்ட கிராம அலுவலர் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring

More News