தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான அகச் சூழல் ஏற்படுத்தப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டவர், குறித்த தினத்திலிருந்து வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு தான்தோன்றித்தனமான முடிவுகளூடாகவும் வாய்மொழி துன்புறுத்தல்களாலும் வேலையை தொடர்வதற்கு பாதுகாப்பற்ற அகச்சூழலை ஏற்படுத்தியிருந்தார். இதன் உச்சகட்டமாக எந்தவித மனிதாபிமாணமுமின்றி தன்னுடைய கடந்த கால காழ்ப்புணர்வுகளால் பிரசவ விடுமுறையில் இருந்த வைத்தியர்களை தாய் சேய் நலன்களை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியேறவும், இடமாற்றத்தை பெற்று செல்லவும் பணித்துள்ளார். இதனால் வைத்தியர்கள் உட்பட ஊழியர்கள் தொடர்ந்து வேலையை முன்னெடுத்து செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேற்படி விடயங்கள் மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் சமன் பத்திரணவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் மேற்கொண்ட கள விஐயத்தின் பின்பு, சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகரை உடனடியாக மாகாண சுகாதார திணைக்களத்திற்கு மாற்றலாகுமாறு எழுத்துமுலம் தெரியப்படுத்தியும், அவர் மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் கட்டளைக்கு கீழ்படியாமல் தெடர்ந்தும் அதார வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்துகொண்டு வைத்தியர்கள உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி பாதுகாப்பற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். இதை கண்டித்து உடனடியாக வைத்திய அத்தியட்சகரை மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய மாகாண சுகாதார பணிமனைக்கு இடமாற்றி வைத்தியசாலையில் சேவையினை வழங்க ஏதுவான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தும்வரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் தொழிற்சங்க நடவடிக்கையாக இன்று(04) காலை 8 மணி தொடக்கம் யாழ் பிராந்திய சுகாதார பணிமனையில் இணைக்கப்படவுள்ளனர். என்றுள்ளது.
மின்சார சபை விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
இரத்தினபுரி மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய இலட்சக்கணக்கான ரூபாவை செலுத்தாத உள்ளூர் அதிகாரிகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாநகர சபைக்கு வீதி விளக்குகளுக்காக மாதாந்தம் 38 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணமாகப் பெறப்படுவதாக மாநகர சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்தோடு நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான மின்சாரக் கட்டணத்துடன் அறிவிப்பும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மின்சாரக்கட்டணம் தொடர்பான பிரச்சினைக்கு அம்பிலிபிட்டிய மாநகர சபைகள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் முகங்கொடுத்துள்ளதாகவும் அதிகாரி கூறியுள்ளார். இதற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள் இந்தப் பணத்தை செலுத்த முடியாத நிலையில் வீதி விளக்குகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு விதுளிய மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
பெண்ணின் கருப்பையிலிருந்த 15 கிலோ கட்டி..! வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பெண்ணொருவரின் கருப்பையில் இருந்து சுமார் பதினைந்து கிலோகிராம் எடையுள்ள கட்டியை வைத்தியர்கள் குழு வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மகப்பேற்று வைத்திய நிபுணர் டொக்டர் சமந்தா சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்தியுள்ளனர். வீரகத்தியில் வசிக்கும் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயின் கருப்பையில் இருந்த கட்டியே சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இப்பெண் பல வருடங்களாக இரைப்பை அழற்சி என சந்தேகிக்கப்படும் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வயிறு வீக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரிடம் வந்துள்ளார். மருத்துவர் அவரது நிலையை இரைப்பை அழற்சியை விட ஃபைப்ராய்டு என்று கண்டறிந்தார். இந்த பெண்ணின் வயிறு ஐந்து இரட்டைக் குழந்தைகள் உள்ளதைப் போல பெரிதாகியுள்ளது. கருப்பையில் உள்ள திசுக்களின் வீக்கம் மற்றும் முடிச்சு காரணமாக இந்த நிலை ஏற்படுவதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சமந்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார். நோய்வாய்ப்பட்ட பெண் இன்னும் சில நாட்கள் சிகிச்சை பெறவில்லை என்றால், அவர் இறந்திருப்பார் என்று அவர் கூறினார். பெண்கள் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டால் உடனடியாக சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சிறப்பு மருத்துவர் சமந்தா சமரவிக்ரம அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பலரும் அஞ்சலி செலுத்தினர். விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட சம்பந்தனின் பூதவூடல் கார் மூலம் யாழ்ப்பாணம், மார்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று (04) காலை 10 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இதன்போது சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மூத்த தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கிற்கிற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று மாலை 4 மணி வரை அஞ்சலி செலுத்த முடியும் இலங்கை தமிழரசுக் கட்சியினர் தெரிவித்தமை குறிப்பிட்டதக்கது. இதேவேளை சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்!
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில்வாய்ப்புகளுக்காக எதிர்வரும் காலங்களில் குரல்கொடுப்பேன் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (03) இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட நினைவுதூபிக்கு அருகில் இந்த தொடர்ச்சியான போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் போராட்ட இடத்திற்கு வந்த சஜித் பிரேமதாச பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார். இதன்போது ஏனைய மாவட்டங்களில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக இங்கு சுட்டிக் காட்டினார்கள். இரண்டாயிரத்திற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும் அவர்களுக்கான நியமனங்களை அரசாங்கம் வழங்க நடவடிக்கையெடுப்பதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சி வழங்கவேண்டும் எனவும் இதன்போது மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பதாகவும் வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைக்காக தொடர்ச்சியாக ஆதரவு வழங்குவதாகவும் இதன்போது எதிர்க்கட்சி தலைவர் உறுதியளித்தார்.
ஜனாதிபதியின் பதவிக்காலமும் ஜனாதிபதியின் நிலைப்பாடும்..
ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உயிரிழக்க முன் எடுத்த கடைசி செல்ஃபி
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற ‘Devon 5’ மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கப்பலில் பயணித்த 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன், பாட்டிலுடன் உயிரிழந்த மீனவர்களும், தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மீனவர்களும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
யாழ். தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனுக்கு அஞ்சலி!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இன்று (04) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் கட்சியினர் அறிவித்துள்ளனர். சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படகு கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (கோபி) என்ற 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகு ஒன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (03) இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். அவர்கள் கரை நோக்கி நீந்திய வேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது . பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் ஆரம்பமான யுக்திய சோதனை நடவடிக்கை
இன்று (04) முதல் மீண்டும் யுக்திய தேடுதல் நடவடிக்கைகள் புதிய கோணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு இராணுவத்தினருக்கும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கொழும்பை சுற்றியுள்ள பல பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.