Search
Close this search box.
படகு கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (கோபி) என்ற 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகு ஒன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (03) இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர்.

அவர்கள் கரை நோக்கி நீந்திய வேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring

More News