நியமனக் கடிதங்களை வழங்கி வைத்த வடக்கு மாகாண ஆளுநர்!
வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (03) வழங்கிவைத்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக சி.சுஜீவாவும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக கு.காஞ்சனாவும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) அ.யோ.எழிலரசியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவினால் மஹாபாகே பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2 காசோலைகள் தொடர்பாக வத்தளை, பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருக்க 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (03) மாலை வெலிசர பொருளாதார மத்திய நிலையத்துக்கு செல்லும் வழியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அரச அதிபர்களுக்கு நியமனக் கடிதம்!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர்களிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவால் நேற்று (03) நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக இருந்த ம.பிரதீபன் மற்றும் எஸ்.முரளிதரன் ஆகிய இருவருக்குமே முழு நேர பதில் அரச அதிபராக பணியாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது. இருவரும் இன்று (04) மாவட்ட செயலகங்களில் தமது கடமையை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்படுகிறது.
சுற்றிவளைப்பு சென்ற OIC மீது தாக்குதல்!
நேற்று (03) இரவு சுற்றிவளைப்பு ஒன்றுக்கு சென்ற தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பாதை யாத்திரைக்கு இராணுவத்தின் உதவி!
இந்து பக்தர்களால் மேற்கொள்ளப்படும் வருடாந்த கதிர்காமம் யாத்திரை குமண தேசிய வனப் பூங்காவின் உகந்தை கோயிலுக்கு அருகில் ஆரம்பமானது. இந்த பாதயாத்திரை குமண தேசிய வனப் பூங்கா ஊடாக சுமார் 79 கிலோ மீற்றர் பயணித்து கதிர்காமம் ஆலயத்தை சென்றடைகிறது. வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவிலான இந்து பக்தர்கள் பங்குபற்றுவதுடன், இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு இராணுவத்தினரால் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அங்கு பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பிரகாரம் பாதயாத்திரையில் கலந்துக்கொள்பவர்களின் நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்க இராணுவத்தினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான செய்தி!
இலங்கை மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்கள் பத்திர மறுசீரமைப்பு விதிமுறைகள் குறித்து உடன்படிக்கை ஒன்றுக்கு வந்துள்ளனர். இது தொடர்பான இணக்கப்பாடு நேற்று (03) எட்டப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச கடன் பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு வெதுப்பகங்களிற்கு 160,000/= தண்டம்!
கடந்தமாதம் 12.06.2024 ஆம் திகதி நல்லூர் சகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டன. குறித்த வெதுப்பகங்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்குகள் கடந்த 24.06.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டன. வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு பேக்கரியை மூடி சீல்வைக்குமாறும், மற்றைய பேக்கரியை விரைந்து திருத்தி அமைக்குமாறும் கட்டளை வழங்கினார். குறித்த பேக்கரி பா. சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டது. அத்துடன் வழக்கினை நேற்று (03) ஒத்திவைத்தார். இன்று வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ. லெனின்குமார் இரு பேக்கரி உரிமையாளர்களிற்கும் தலா 80,000/= தண்டம் அறவிட்டதுடன், திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் பேக்கரிகளை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கினார்.
இன்றைய வானிலை முன்னறிவித்தல்!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம். மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம். கொழும்பு – அடிக்கடிமழைபெய்யும். காலி- அடிக்கடிமழைபெய்யும். யாழ்ப்பாணம் – பிரதானமாகசீரானவானிலை. கண்டி – அடிக்கடிமழைபெய்யும். நுவரெலியா – அடிக்கடிமழைபெய்யும். இரத்தினபுரி -அடிக்கடிமழைபெய்யும். திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம். மன்னார் – சிறிதளவில்மழைபெய்யும்.