Search
Close this search box.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை இவ்வாறு  குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி,  மொத்தக் கொள்வனவின் போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவின் குறைக்கப்பட்டுள்ளதுடன்  அதன் புதிய விலை  215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தக் கொள்வனவின் போது சிவப்பு பருப்பு கிலோ ஒன்றுக்கு 14 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலை 282 ரூபாவாகும். அத்தோடு, வெள்ளை சீனி மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 269 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விலை குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்: ரணில் அதிரடி அறிவிப்பு.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மேற்படி மனுவை தாக்கல் செய்வதன் மூலம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 126 இன் படி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3ஆம் பிரிவின் ஊடாகத் திருத்தப்பட்ட பிரிவு 30(2)ஐ வியாக்கியானம் செய்யக்கூடாது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழு அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் உயர் நீதிமன்றத்தினால் இது குறித்த இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான மேலதிக பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு குறித்த மனுவில் கோரியுள்ளது. இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது என்பதே தனது உறுதியான நிலைப்பாடாகும் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமை..!

நாட்டில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் ஆறு மாதகால முன்னேற்றம் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்களுக்கு அறிவிப்பதற்காக இடம்பெற்ற கூட்டத்தின் போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் 5,979 பேரில் இதுவரை 5,449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 1,975 மில்லியன் ரூபா ஆகும். யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பில் இதுவரை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 5,448 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சகோதரிகளின் கணவர்களால் 12 தடவைகள் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி..! ஒருவர் கைது; ஒருவர் தப்பியோட்டம்.

மாத்தளை பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ள நிலையில், ஒருவர் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு சகோதரிகளின் கணவர்களினால் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக மாத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த சிறுமி தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் 12 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேக நபர்களான சிறுமியின் இரண்டு சகோதரிகளின் கணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாத்தளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் ‘யுக்திய’ நடவடிக்கை : 7 பேர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய ‘யுக்திய’ சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ஆம், 10ஆம் வட்டார பகுதிகளில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார், இராணுவத்துடன் இணைந்து இன்று (04) அதிகாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். இந்த சுற்றிவளைப்பின்போது திறந்த பிடியாணை நபர்கள் இருவர், பொலிஸாரினால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேர், திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் என 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சந்தேக நபர்களிடமிருந்து 43 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி..!

மறைந்த  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று வியாழக்கிழமை (04) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சம்பந்தனின் பூதவுடல், யாழில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று மாலை 4.00 மணி வரை மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லொறியுடன் பேருந்து மோதி கோர விபத்து! ஒருவர் பலி; 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (4) வியாழக்கிழமை காலை  இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்  காயமடைந்தோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டதாகவும் மாதம்பே பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து பாடசாலைகளும் மூடப்படுமா? வெளியான தகவல்

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆசிரியர் – முதன்மைச் சங்கங்கள்  விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படாவிட்டால் பாடசாலை நேரத்திலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதன்படி எதிர்வரும்நாளை (05) அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, நேற்று நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்புப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். மேலும் கடந்த (01) அன்று பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வாறாயினும், தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும்  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிரியர்களின் இந்த ஆர்ப்பாட்டம் குறித்தும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவு..! ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கை யாப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே தனது நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த மனுவில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதியை நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் தொடர்பில் அவசர அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளை 5ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனவே உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும். அதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.