பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது!
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம் தூண் மீ ஓயாவிற்கு அருகிலுள்ள அலிமங்கட பிரதேசத்தில் அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்த ரணில்
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிடம் இருந்து இலங்கை இராணுவம் தோல்விகளை சந்தித்தபோது யாழ்ப்பாணத்தை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்தைத்தேன் எனவும் அதுவே எமது போர் வெற்றிக்கு காரணம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா நேற்று (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்தை சரத் பொன்சேகா மட்டுமே வகிக்கிறார். அவர் யுத்த சவால்களை வெற்றிக்கொண்ட அதேநேரம் அதற்கு வெளியில் அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்திருந்தார். யுத்த காலத்தில் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஊடாகவே இவரை நான் அறிந்துகொண்டேன். ஜெனரல் சிசில் வைத்தியரத்ன என்னோடு சமீபமாக பழகியவர். இந்த அதிகாரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமாறு சிசில் வைத்தியரத்ன கூறினார். யுத்தம் ஆரம்பித்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் அரசாங்கத்திலிருந்த நான் யுத்தத்தில் பங்கெடுத்திருந்த பெரும்பாலான அதிகாரிகளை அறிவேன். அப்போது பல்வேறு சிறந்த அதிகாரிகள் உருவானதோடு அவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு சிறந்த இடம் காணப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜயசிக்குரு போராட்டம் தோல்வியை தழுவியதால் இராணுவம் கைப்பற்றிய பலவற்றை இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில் நான் பிரதமராக பதவி வகித்ததோடு, யாழ்ப்பாணத்தை யாரிடம் கையளிப்பது என்ற கேள்வி காணப்பட்டது. அப்போது பலர் இறந்து போயிருந்ததோடு, காயங்களுக்கும் உள்ளாகியிருந்ததால் படையினர் எண்ணிக்கை குறைந்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கான படைப்பிரிவொன்று அவசியமென சிலர் கூறினர். அப்போது நான் சரத் பொன்சேகாவிடம் யாழ்ப்பாணத்தை ஒப்படைப்போம் என இராணுவ தளபதியிடம் கூறினேன். அதன்படியே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அவர் வீழ்ந்த இடத்தில் எழுந்து யுத்த வெற்றியை நோக்கி நகர்ந்தார். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. யுத்தம் என்பது கிரிக்கட் போட்டியை போன்றதல்ல. உயிரிழப்புக்கள் ஏற்படும். சொத்துக்கள் இழக்கப்படும். அதற்கு மத்தியிலும் யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமை அவரிடம் இருந்தது. உலகத்தில் மிக் மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுத்தோம். மற்றைய நாடுகளில் இன்றும் அவ்வாறான யுத்தங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் யுத்தம் இலங்கைக்கு முன்னதாக ஆரம்பமானது. அந்த வகையில் சரத் பொன்சேகா தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார்” என்றார்.
நாட்டில் 50% பெண்கள் உடற்பருமனால் பாதிப்பு!
இலங்கையில் உள்ள பெண்களில் 50 வீதமானவர்கள் பருமனாக இருப்பதாக இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறுகையில், குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினார். உடல் பருமன் பற்றி நாம் மறந்துவிட்டோம். நாங்கள் எப்போதும் ஊட்டச்சத்து குறைபாட்டின் மீது கவனம் செலுத்துகிறோம். ஆனால் குழந்தை பருவ உடல் பருமன் அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 50% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனானவர்கள். இதனால் இலங்கைக்கு ஒரு புதிய ஆராய்ச்சி தரவு கட்டமைப்பு தேவை.” எனவும் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறினார். இந்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ள போதிலும், அதிகப்படியான போசாக்கின்மை அதிகரித்துள்ளதாக கலாநிதி திமதி விக்கிரமசேகர மேலும் தெரிவித்தார்.
சீனா செல்ல வேண்டாம் : தாய்வான் பகிரங்க எச்சரிக்கை.
சீனா மற்றும் அதன் தன்னாட்சி பிராந்தியங்களான ஹொங்கொங் , மக்காவோ ஆகிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி தாய்வான் நாட்டினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வான் நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் சீனாவில் வசித்து வரும் நிலையில் இரு நாடுகள் இடையே தினமும் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் தைவான் அரசின் இந்த அறிவிப்பு அங்குள்ள மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தாய்வான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சிக்கிறது. மேலும் தாய்வானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
30 சீன பிரஜைகள் கைது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார். இதேவேளை, இணையவழியில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் நேற்று (28) வரை 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
இந்தியாவிடம் எதிர்ப்பை வெளிப்படுத்தியது இலங்கை.
எல்லைத்தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்களை கைதுசெய்ய முற்பட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இலங்கை தனது கவலையை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. எவ்வாறாயினும், இந்த கைது நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையின் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கை தனது எதிர்ப்பை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய பணிப்பாளர் நாயகம் நிலுக கதுருகமுவ, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாம் நிலை அதிகாரி ஒருவரை அழைத்து கவலைகளை வெளிப்படுத்தியதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொதி.
கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் 19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் சுங்க திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள கூரியர் நிறுவனம் ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருள் தொகுதி இன்று மீட்கப்பட்டதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த கூரியர் நிறுவனத்தில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 6 பொதிகளை, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர் அதில், 2 கிலோ 30 கிராம் கொக்கெய்ன் மற்றும் 2 கிலோ 177 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பொதிகள் கொழும்பு மற்றும் கடவத்தையில் வசிப்பவர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. எனினும் விசாரணையின் மூலம் அவை போலியான முகவரி என உறுதி செய்யப்பட்டுள்ளது மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகுதி, மேலதிக விசாரணைகளுக்காக , இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
சிறீதரன் எம்.பியின் குடும்பத்தை அச்சுறுத்திய மர்ம நபர்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வசிக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் இன்றையதினம் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள் அணிந்தவாறு வருகைதந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதை, கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று காலை யாழ் இந்துக்கல்லூரியை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் இவ்வாறான அச்சுறுத்தும் வகையிலான குழுக்களின் நடமாட்டம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்.
இலங்கையில் காணிகளின் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூர்வீக காணிகளில் ஒரு அங்குல காணி கூட உரிமை இல்லாத 24 லட்சம் குடும்பங்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டுவதால், இந்த நிலைமை ஏற்படவுள்ளதாக சந்தை தரப்பினர் கூறுகின்றனர். அரசுக்கு சொந்தமான பெருமளவிலான காணிகளை தனியாருக்கு மாற்றுவதன் ஊடாக இது நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்போது, காணிகள் அற்ற மக்களில் பெரும் பகுதியினர் காணிகளின் உரிமையைப் பெறுவார்கள் என்பதால், காணிகளின் தேவை குறைவதற்கு நிச்சயம் வழிவகுக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். நாட்டிலேயே அதிகளவான காணிகளைக் கொண்ட ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணி விவசாய நடவடிக்கைகள், கைத்தொழில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. இந்நிலையில், முந்தைய வரவு செலவு திட்ட ஆவணத்தில் ஸ்டேஷன் பிளாசா என்ற பெயர் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், காணிகளை மாற்றுவதற்கான யோசனைகள் இந்த நாட்களில் எடுக்கப்பட்டு, ஜூலை 15 ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், மகாவலி மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்குச் சொந்தமான காணிகளை குறிப்பிட்ட திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மதிப்பீட்டாளரின் மதிப்பின் கீழ் அவற்றின் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே எந்தவொரு இடைத்தரகர் அல்லது அரசியல் உறவும் இல்லாமல் பயனுள்ள திட்டங்களுக்காக காணி வைத்திருக்கும் அமைச்சகங்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், ஒருவர் குத்தகை அடிப்படையில் அரச நிலத்தைப் பெற முடியும். இந்த நிலைமையின் அடிப்படையில், தனியார் காணி வியாபாரம் தொடர்பில் தற்போது விளம்பரங்கள் வெளியிடப்படுகின்ற போதிலும், விலை கேட்காமல் காணிகளை கொள்வனவு செய்ய மக்கள் முன்வருவதில்லை என சந்தை ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் துணிகரம்…! வீதியால் சென்ற பெண்களின் சங்கிலிகள் அறுப்பு…!
வவுனியாவில் (Vavuniya) வீதியால் சென்ற பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். வவுனியா, கோயில்குளம் பகுதியில் இன்று குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒரு பவுண் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, சிதம்பரபுரம் (Chidambarapuram) பகுதியிலும் பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். எனவே பொது மக்கள் நகைகளுடன் வீதியில் செல்லும் போது அவதானமாகவும், பின் தொடர்பவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிகமான விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.