யாழ்.பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது!
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆமணக்கு விதையை சாப்பிட்ட 8 மாணவர்கள் வைத்தியாசலையில் அனுமதி!
ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தட்சணாமருதமடு பகுதியில் நேற்று (28) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் பலத்த மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (29.6.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென் மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு, காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50- 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு, காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ் வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.