ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு..!
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க முன்னர் ஏனைய பிரிவுகளின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை மல்வத்து மகாநாயக்க தேரர்களின் ஆசியை பெற சேடர்னா நிலையிலையே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். குறிப்பாக இறுதியாக ஆசிரியர்களின் சம்பளம் 7000 – 17000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டு வருவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்தோடு கடந்த சில வருடங்களாக சம்பளம் உயர்த்தப்படாத எத்தனையோ அரச நிறுவனங்கள் இருக்கின்றன எனவும் அவர்களின் சம்பளத்தை உயரத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அப்படி ஆசிரியர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டால் அது வேறு பல பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி 2025 ஆகும் பொழுது நிச்சயம் அவர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்கமாயின் பாடசாலை மாணவர்களின் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்பதால், ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
பொருளாதார நெருக்கடி முடிவிற்கு வந்துள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு
நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலமே பொருளாதார நெருக்கடி முடிவடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதுடன் புதிய அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு கடன் வழங்குபவர்களை சம்மதிக்க வைத்தது நாட்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை தேவைக்கு ஏற்ப மீண்டும் சர்வதேச கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று உடுகம்பலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே இதனைக் தெரிவித்தார்.
சீனாவிற்கு விஐயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…!
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார் பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளார் அவர் அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன் இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவார் என்றும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்தும் விவாதிப்பார் மற்றும் சீனா மற்றும் சீனாவின் எக்சிம் வங்கி அளித்த உதவிக்கு தனது நன்றியைத் அவர் அங்கு வெளிபடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்…!
வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று(27) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராக கடமையாற்றிய இளைஞன் ஒருவர் மன அழுத்தம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த இளைஞன் வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை நோயாளர் விடுதியில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையஇளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு பேரணி
வவுனியா (Vavuniya) பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று (27) கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை பூராகவும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 57 வது நாளாகவும் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், நேற்றைய தினம் (26) கொழும்பில் (Colombo) பாடசாலை ஆசிரியர், அதிபர்களது போராட்டத் தளத்தில் அவர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்தும், தமது நியாயமான கோரிக்கையாக காணப்படுகின்ற சம்பள உயர்வை உடனடியாக தர வேண்டும் எனக் கூறியும் இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா பூங்கா வீதியில் உள்ள வவுனியா பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள்பீட கட்டிட தொகுதியிலிருந்து ஆரம்பித்த பேரணி நகர் வழியாக பழைய பேருந்து நிலையத்தை சென்றடைந்து நிறைவடைந்திருந்தது.
வெளிநாடு சென்று திரும்பிய அடகுக்கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் பணத்தை மோசடி செய்த முகாமையாளர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹட்டன் மல்லிகைப்பூ சந்தி பகுதியில் தனியார் தங்க நகை அடகு கடை ஒன்றில் பணிபுரிந்த முகாமையாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று (26) ஹட்டன் நீதவான் எம்.பறூக்தீனிடம் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஜூலை 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபர் அடகுக் கடையின் முகாமையாளராக பல வருடங்களாக கடமையாற்றி வந்ததாகவும், அடகுக் கடையின் உரிமையாளர் மூன்று மாதங்களுக்கு வெளிநாட்டிற்குச் சென்று மீண்டும் நாடு திரும்பிய நிலையில், அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தைச் சோதனையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அடகுக்கடையில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அடகுக்கடையின் உரிமையாளர், முகாமையாளருக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். இதற்கமையவே சந்தேகநபரான முகாமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்…!
யாழ்ப்பாணம் உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் யாழ் கோப்பாய் இராச பாதையிலும் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போலி நாணயத்தாள்களை அச்சடித்த பாடசாலை மாணவன்…!
பாடசாலை மாணவன் ஒருவர் போலி நாணய தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தம்புத்தேகமவில் இடம்பெற்றுள்ளது. 17 வயதுடைய குறித்த மாணவன் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் பேருந்து நிலையத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியபோது அவர் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது வீட்டில் இருந்து ஏராளமான போலி பணம் அச்சடிக்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இடைநிறுத்தப்பட்ட முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள்
இலங்கையில் பரீட்சை எழுதும் போது, அவர்களின் ஆடை காதுகளை மறைத்திருந்ததாக கூறப்படும் காரணத்தினால் முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை அரசாங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளமை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானமானது மாணவர்களின் மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகவும், இலங்கையில் முஸ்லிம்களால் பரவலாக நோக்கப்படும் பாகுபாட்டை மேலும் வலுப்படுத்துவதாகவும் உள்ளது என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற பரீட்சையின் போது, திருகோணமலையை சேர்ந்த இந்த மாணவிகள், காதுகள் தெரியும்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு இணங்க, தமது தலையை மறைக்க தளர்வான மற்றும் வெளிப்படையான வெள்ளை ஆடையை பயன்படுத்தினர். இதனை ஏற்று மேற்பார்வையாளர்களும் பரீட்சையை தொடர அனுமதித்தனர். எனினும், 2024 மே 31 அன்று ஏனைய மாணவர்கள் தங்கள் பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றபோது, குறித்த மாணவிகளின் பெறுபேறுகள் மாத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்போது அவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் உள்ளதாக கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், பரீட்சைகளின் நேர்மையை அதிகாரிகள் உறுதிப்படுத்துவது அவசியமானாலும், மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய துணைப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்த செயற்பாடு, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை விரும்புவதாக இலங்கை அரசாங்கம் கூறுவதை பொய்யாக்கும் என்றும் மீனாட்சி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் மக்கள் குடிமனைக்குள் நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் நோர்வே பெண்: கிராம மக்கள் எதிர்ப்பு
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மக்கள் குடிமனைக்குள் நாய்களுக்கான காப்பகம் ஒன்றினை பெண் ஒருவர் அமைத்து வரும் நிலையில் கிராம மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த காப்பகத்திற்கு முன்னால் இன்று (27.06) காலை திரண்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் பொது மக்களுடன் கலந்துரையாடி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தனர். நோர்வே நாட்டில் இருந்து வந்துள்ள பெண் ஒருவர் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மக்கள் குடிமனைகளின் மத்தியில் உள்ள வெற்று காணி ஒன்றில் நாய்களுக்கான காப்பகம் ஒன்றினை அமைத்து வருவதுடன், தற்போது கட்டக்காலியாக வீதிகளில் திரிந்த 42 நாய்களை அக் காப்பகத்தில் தங்க வைத்துள்ளார். இதனையடுத்து, குறித்த காப்பகத்தினால் அப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குடிமனைக்குள் நாய்கள் காப்பகத்தை அமைக்க யார் அனுமதி கொடுத்தது எனவும் தெரிவித்து அக் காப்பகத்தை மக்கள் இல்லாத பகுதியில் அமைக்குமாறு கோரி அக் கிராம மக்கள் காப்பகம் முன் ஒன்று கூடினர். அப்பகுதிக்கு வருகை தந்த வவுனியா பொலிசார் மற்றும் மகறம்பைக்குளம் பொலிசார் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன், காப்பகத்தையும் பார்வையிட்டனர். அத்துடன் காப்பக உரிமையாளரிடம் காப்பகம் அமைப்பதற்கான அனுமதிகளை கேட்டிருந்தனர். எனினும் காப்பக உரிமையாளர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் சுகாதார பிரிவினர், கால்நடை வைத்தியர் ஆகியோரின் அனுமதியை பெறவில்லை என்பது இதன்போது தெரிவய வந்தது. இதனையடுத்து புதிதாக நாய்களை கொண்டு வருவதை நிறுத்துமாறு அறிவுறுத்திய பொலிசார், முறையான அனுமதி பெற்ற பின் நடத்துமாறு உரிமையாளருக்கு தெரிவித்தனர். பொதுமக்கள் நாய் காப்பகத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ததுடன், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்கும் முறைப்பாடு செய்து கடிதம் வழங்கியுள்ளனர்