Search
Close this search box.

வெளிநாடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

பின்லாந்தில் (Finland) இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார். பிரபல யூடியூப் சேனலை (YouTube channel) நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 மணி நேரத்தில் 807 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 24 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 773 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவு பட்டியலில் குறிப்பிடப்பட்ட 34 சந்தேக நபர்கள் உட்பட 807 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்போது 52 கிலோ 616 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும்;, 142 கிலோ 453 மில்லிகிராம் ஐஸ் போன்ற போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் தேடுதல் நடவடிக்கையின் போது 03 பாதாள உலக குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 778 பாதாள உலக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

செட்டிக்குளம் வைத்தியசாலையின் அசண்டையீனம்? பறிபோனது நோயாளியின் உயிர்…!

வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் வைத்தியசாலை அசமந்த போக்கினால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம்(26) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) அன்று நெஞ்சுவலி காரணமாக செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையினர் நோயாளியை உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அறிவித்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் இதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நோயாளியை வவுனியா வைத்தியசாலைக்கு  மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். நோயாளர் காவு வண்டி புறப்பட்டு ஏறக்குறைய 15 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில் மேலதிகமாக மேலும் ஒருவரை ஏற்றிச்செல்ல இருப்பதாக கூறி குறித்த நோயாளர் காவு வண்டியை மீண்டும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியசாலை தரப்பினர் திருப்பி அழைத்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், மீள வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டியில் இருந்த நோயாளி செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையிலே உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் அதேவேளை, மேலதிக சிகிச்சை வழங்க தாமதமானதாலேயே உயிரிழந்துள்ளார் என உறவினர்களும் அப்பிரதேச மக்களும் வைத்தியசாலை மீது குற்றம் சாட்டுகின்றனர் மேலும், இறந்தவரின் உடல் இன்றைய தினம் (27) வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மரண விசாரனை அதிகாரியின் விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவத்தால் செட்டிகுளம் வைத்தியசாலை பகுதி சற்று பதற்றமான நிலை காணப்படுவதுடன் உயிரிழந்தவரின் உறவினர்கள், கிராம மக்கள் வைத்தியசாலைக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் சிக்கிய கடத்தல் பொருட்கள்

மன்னார் சௌத்பார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 46 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் சவுத்பார் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான கஜபா அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிறிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதி ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.அங்கு தொண்ணூற்றெட்டு (98) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 46 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டதாக இராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய யுவதிக்கு பாலியல் துன்புறுத்தல் கடற்படை அதிகாரி மீது குற்றச்சாட்டு!

பம்பலப்பிட்டி, டூப்ளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியில், கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவரால், இந்தியப் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணையை கைவிட அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. ஜூன் 20 ஆம் திகதி விடியற்காலை, இரவு விடுதியில் இலங்கை நண்பர் ஒருவருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, ​​கடற்படையின் உயர் அதிகாரி ஒருவர் பின்னாலிருந்து வந்து தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக, இந்திய யுவதி பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை துன்புறுத்திய மூத்த கடற்படை அதிகாரி கடற்படைக்கு சொந்தமான காரில் பலருடன் இரவு விடுதியில் இருந்து வெளியேறியதாக இந்திய யுவதி புகார் அளித்துள்ளார். வாகனத்தின் பதிவு எண்ணையும் காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதன்படி, அவருக்கு நீதிமன்ற மருத்துவ படிவம் காவல்துறையால் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. சிரேஷ்ட கடற்படை அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், தான் இந்த துன்புறுத்தலை செய்யவில்லை என அவர் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரும் அவதானம் செலுத்தி நாட்டிலுள்ள உயர்ஸ்தானிகர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. குறித்த இரவு விடுதியின் பாதுகாப்பு கமெராக்களை பரிசோதிப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மேலும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை மூடி மெழுக அதிகாரம் படைத்தவர்களின் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

டிக்டோக் வீடியோ லைக் செய்வதற்கு பணம் தருவதாக மோசடி !

பல வெளிநாட்டு பிரஜைகளையும் உள்ளூர் மக்களையும் குறிவைத்து இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் வெளிநாட்டு பிரஜை உட்பட 33 பேரை நீர்கொழும்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.டிக்டொக் வீடியோக்களை லைக் செய்வதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் பணம் தருவதாக கூறி வட்ஸ்அப் குழு ஒன்றில் பெண்ணொருவர் இணைந்துள்ளார். ஆரம்பத்தில் லைக் மற்றும் கமெண்ட் செய்ததற்காக இந்த பெண் பணம் பெற்றுள்ளார். பின்னர் தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொள்ள வங்கிக் கணக்கில் 5.4 மில்லியன் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பணத்தை முதலீடு செய்த போதிலும் அவர் திரும்ப பணத்தை பெறவில்லை. இந்நிலையில், குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழ் எம்பிக்களுக்கு இலஞ்சமாக வழங்கப்படும் அமைச்சர் பதவி

தமிழ் எம்பிக்களுக்கு இலஞ்சமாக அமைச்சர் பதவிகள் வழங்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்( R.Shanakiyan) தெரிவித்துள்ளார். அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடிப் பகுயில் அமைந்துள்ள இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை அவர் நேற்று(26.06.2024) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வரும்போது அவருக்கு உணவு வழங்கினால் அமைச்சுப் பதவி பெறக் கூடிய அளவிற்கு நிலமை வந்துள்ளது. இந்த அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு தொடர்ந்தும் தெற்கின், அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்குரிய பரிசுகளாகவே இவர்களுக்கு விசேடமான நிதி, இலஞ்சம் கிடைப்பதாகவும் நாம் அறிகின்றோம். இதனை மக்கள் நன்கு அறிந்து, இந்த மாவட்டம் தொடர்ந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டமாக இருக்க வேண்டும் என நாம் நினைத்தால் மக்கள் எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சகல வரப்பிரசாதங்கள் ரத்து..? வெளியான அதிரடி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சகல வரப்பிரசாதங்களும் ரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேருக்கும், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதிரியாருக்கும் வழங்கப்பட்டு வரும் அனைத்து வரப்பிரசாதங்களும் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி ஒதுக்கீடுகள், அதிகாரபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ரத்து செய்யப்படும் என சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையின் முதல் தீர்மானமாக இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் வரிச் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையிலான செல்வந்தர்கள் வரிச் செலுத்துவதில்லை எனவும் அவர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மனிதாபிமானமிக்க ஒர் ஜனாதிபதியை நியமிப்பதே தமது நோக்கம் எனவும் இதுவரையில் ஆபத்தான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தமது ஆட்சியின் கீழ் மக்களுக்கு வரிச் சுமையிலிருந்து மீட்சி கிடைக்கும் எனவும், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

முட்டை விற்று ஹெலிகொப்டர் வாங்கிய வர்த்தகர்: வெளியான தகவல்

இலங்கையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை மூலம் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யுமளவுக்கு பணக்காரராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு முட்டை உற்பத்தி செலவு 31 ரூபாய் என்றாலும், 50-55 ரூபாய்க்கு இடையேயான விலையில் நுகர்வோரை சென்றடைகிறது. அதற்கமைய, முட்டை வியாபாரிகள் வரம்பற்ற இலாபம் ஈட்டுகின்றனர். மேலும், முட்டை வியாபாரிகள் பெரும்பாலானோர் உற்பத்தி செய்த முட்டைகளை தனியார் இடங்களில் இருப்பு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சந்தையில் போலியான முட்டை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு முட்டை விலையை உயர்த்துவதாகவும் அரச கால்நடை துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இந்தநிலையில், நுகர்வோரை சுரண்டி அதிக இலாபம் ஈட்டும் முட்டை வியாபாரிகள், தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக உலங்குவானூர்தியை கொள்வனவு செய்வது தொடர்பில், விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன

வவுனியாவில் பால்புதுமையினர் நடைபவனி

பால்புதுமையினர் தங்களது உரிமைகளை வலியுறுத்தி, தங்களையும் சக மனிதர்களாக எண்ண வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து நேற்று புதன்கிழமை (26) வவுனியாவில் நடைபவனியொன்றை முன்னெடுத்தனர். இந்த நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சென்றடைந்ததோடு நிறைவு பெற்றது. ‘யாழ். சங்கம்’ என்ற பால்புதுமையினத்தவர்களுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நடைபவனியில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். இந்த நடைபவனியில் தமது உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகள் கொண்ட மனிதப் பிறப்புக்களே என்பது போன்ற கருத்துக்கள் பால்புதுமையினர் இதன்போது முன்வைத்திருந்தனர்.