இலங்கையில் பரீட்சை எழுதும் போது, அவர்களின் ஆடை காதுகளை மறைத்திருந்ததாக கூறப்படும் காரணத்தினால் முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை அரசாங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளமை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தீர்மானமானது மாணவர்களின் மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகவும், இலங்கையில் முஸ்லிம்களால் பரவலாக நோக்கப்படும் பாகுபாட்டை மேலும் வலுப்படுத்துவதாகவும் உள்ளது என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற பரீட்சையின் போது, திருகோணமலையை சேர்ந்த இந்த மாணவிகள், காதுகள் தெரியும்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு இணங்க, தமது தலையை மறைக்க தளர்வான மற்றும் வெளிப்படையான வெள்ளை ஆடையை பயன்படுத்தினர்.
இதனை ஏற்று மேற்பார்வையாளர்களும் பரீட்சையை தொடர அனுமதித்தனர்.
எனினும், 2024 மே 31 அன்று ஏனைய மாணவர்கள் தங்கள் பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றபோது, குறித்த மாணவிகளின் பெறுபேறுகள் மாத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இப்போது அவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் உள்ளதாக கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், பரீட்சைகளின் நேர்மையை அதிகாரிகள் உறுதிப்படுத்துவது அவசியமானாலும், மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய துணைப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த செயற்பாடு, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை விரும்புவதாக இலங்கை அரசாங்கம் கூறுவதை பொய்யாக்கும் என்றும் மீனாட்சி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.