ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஆசிரியை ஒருவர் கைது
அநுராதபுரம் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொசன் பண்டிகையை இலக்காகக் கொண்டு அனுராதபுரத்திற்கு வரும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விநியோக நடவடிக்கைகாக தம்பதியினர் தயாராக இருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த பெண் ஆசிரியை வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவருடன் கைது செய்யப்பட்ட நபர் சுற்றுலாத்தளம் ஒன்றில் பணிப்புறியம் 28 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் போதைப்பொருள் நடவடிக்கைகளை கடந்த ஒரு ஆண்டாக முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். தம்பதியினர் கைது செய்யப்பட்ட போது, குறித்த பெண்ணிடம் இருந்து 40 கிராம் ஹெரோயினும், அவரது கணவரிடம் இருந்து 80 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் குருநாகல் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து மொத்த ஹெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்து அநுராதபுரம் மற்றும் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிக்ஸருக்குள் பொரிந்த நிலையில் பல்லி- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட அங்குள்ள நகர் பகுதியில் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. இது குறித்த செய்திகள் அண்மைய நாட்களாகவே வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஐஸ்கிறீமில் உயிரிழந் தவளை, நாய் இறைச்சி கொத்து, பாணில் இரும்புத் துண்டு, உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் இருப்பது என அண்மைய நாட்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருகின்றன. அதுபோன்ற செய்தி ஒன்றே தற்போது வெளியாகியுள்ளதுடன், பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் நேற்றைய தினம் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்று இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம்
பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்ஸில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான நேஷனல் ரேலி கட்சிக்கும், இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையில் தீவிர போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மக்ரோன், குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே காணப்படும் தேர்தல் போட்டியானது உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்திருந்தார். இதேவேளை வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்ட நிலையில் வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் 200 கிலோ போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது
இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் 200 கிலோகிராம் போதைப்பொருளை ஏற்றிய உள்ளூர் பல நாள் கடற்றொழில் இழுவை படகு கைப்பற்றப்பட்டதுடன் 06 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை(Srilanka navy)தெரிவித்துள்ளது. இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் தொலைவில் இலங்கையின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த படகு இடைமறிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஏறக்குறைய 200 கிலோகிராம் போதைப்பொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பல நாள் கடற்றொழில் படகுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருட்கள் ஏற்றப்பட்ட படகுடன் கைது செய்யப்பட்ட 6 பேர் தற்போது இலங்கையின் கரையை நோக்கி அழைத்து வரப்படுவதாக கடற்படை மேலும் அறிவித்துள்ளது.
வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து
வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் நேற்று (24.06) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அப் பகுதி மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் தீ விபத்தில் தொழிற்சாலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும், விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கடைசித் திகதி நீடிக்கப்பட மாட்டாது, எனவே குறித்த திகதிக்கு முன்னதாகவே பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர் மூலமாகவோ, தனியார் விண்ணப்பதாரர்கள் மூலமாகவோ அனுப்ப முடியும். இதேவேளை தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் அதன் அச்சிடப்பட்ட பிரதியை தங்கள் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இது தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் 1911 அல்லது 0112784208 அல்லது 0112784537 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு வினவ முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுமுறையில் சென்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி
விடுமுறையில் வீட்டுக்கு சென்ற காவல்துறை உத்தியோகத்தரை தாக்கி அவரிடமிருந்து இலட்சக்கணக்கான உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. மிரிஹான காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் மீதான தாக்குதலை அடுத்து அவரிடமிருந்து 03 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் நேற்று(24) கைது செய்யப்பட்டதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 – 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், துனுவாங்கிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேக நபர்களை இன்று(25) நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : அதிபர் ரணிலின் அறிவிப்பு
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், எதிர்வரும் சில வருடங்களில் பல புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
கொழும்பில் மர்மான முறையில் உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். நீதவான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்சம் கேட்ட எஸ்ஐ சஸ்பெண்ட்
பம்பலப்பிட்டி கிரெஸ்டர் பிளேஸில் உள்ள இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு சோதனை என்ற போர்வையில் சென்றுள்ள கொழும்பு தெற்குப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் 50 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 21ம் தேதி குறித்த தொழில் நிறுவனத்திற்கு சென்ற உப பொலிஸ் பரிசோதகர்; சோதனை நடத்த சென்றுள்ளார். நிறுவனம் நடாத்துவதற்குரிய சட்ட ஆவணங்கள் ஒழுங்காக பேணப்படவில்லை எனவும் அவற்றை கண்டும் காணாமல் விடுவதற்கு ஐந்து இலட்சம் தரவேண்டும் என குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நிறுவனத்தாரிடம் கூறியுள்ளார். இந் நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சம் கோரியது தொடர்பில் குறித்த நிறுவனத்தார் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்னவிடம் முறைப்பாடு செய்துள்ளனர் இந் நிலையிலே குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.